டெல்லி: விவசாயிகளின் குரல்களை அரசு அடக்குவதாகவும், அவர்கள் கூற விரும்பும் செய்தியை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்பியுமான ராகுல்காந்தி கூறியுள்ளார். நாடாளுமன்றத்திற்கு இன்று டிராக்டரில் வந்த ராகுல்காந்தி மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளார்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் கடந்த 7 மாத காலமாக போராடி வருகின்றனர். கடும் மழை, வெயில், குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் டெல்லி எல்லைகளில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெரும் வரைக்கும் சொந்த வீடுகளுக்குத் திரும்பப் போவதில்லை என்று பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.
ராகுல்காந்தி ஆதரவு
விவசாயிகளுடன் அரசும் மத்திய அமைச்சர்களும் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியும் தோல்வியடைந்து விட்டது. வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி நாடாளுமன்ற வளாகத்திற்கு அருகே டிராக்டரில் வந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
ராகுல்காந்தி எதிர்ப்பு
அப்போது ராகுல்காந்தியுடன் பயணம் செய்தவர்கள் வேளாண் சட்டங்களுக்கு எதிரான பதாகைகளை கையில் ஏந்தியிருந்தனர். டிராக்டர் பேரணி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி, விவசாயிகளின் செய்தியை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வந்துள்ளேன். விவசாயிகளின் குரல்களை அரசு அடக்குகிறது என்று குற்றம் சாட்டினார்.
வாபஸ் பெற வேண்டும்
நாடாளுமன்றத்தில் ஒரு விவாதம் நடக்க விடவில்லை. அவர்கள் இந்த கருப்பு சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். இந்த சட்டங்கள் சில பெரிய வணிகர்களுக்கு சாதகமாக உள்ளன என்பது முழு நாட்டிற்கும் தெரியும் என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார்.
ராகுல்காந்தி குற்றச்சாட்டு
மத்திய அரசின் கூற்றுப்படி, விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர், எதிர்ப்பவர்கள் எல்லாம் பயங்கரவாதிகள் என்று அரசு கூறுகிறது. ஆனால் உண்மையில் வேளாண் சட்டங்களால் விவசாயிகளின் உரிமைகள் பறிக்கப்படுவதாகவும் ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.