நாமக்கல்: மத்திய, மாநில அரசுகள் உடனடியாக டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். ஆகஸ்ட் 9ஆம் தேதிக்குள் டீசல் மற்றும் சுங்க கட்டணத்தை மத்திய, மாநில அரசுகள் குறைக்காவிட்டால் காலவரையற்ற வேலைநிறுத்தப்போராட்டத்தில் தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் நலச்சங்கம் அறிவித்துள்ளது.
டீசல் விலை உயர்வால் பெரும்பாலான லாரி உரிமையாளர்கள் பொருளாதார இழப்பை சந்தித்து வருகின்றனர். மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. தொடர்ந்து உயர்ந்து வரும் டீசல் விலையேற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில் தென்னிந்திய சரக்கு போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் நலச்சங்கம் மற்றும் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் பங்கேற்ற அவசர ஆலோசனைக் கூட்டம் நாமக்கல்லில் புதன்கிழமை நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தென்னிந்திய சரக்கு போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் நலச்சங்க தலைவர் கோபால் நாயுடு, பொதுச்செயலாளர் ஜி. ஆர். சண்முகப்பா ஆகியோர் தலைமை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக உறுப்பினர்களிடையே ஆலோசனை நடத்தப்பட்டது.
செய்தியாளர்களிடம் பேசிய ஜி.ஆர் சண்முகப்பா, கொரோனா தொற்று காரணமாக நாட்டில் மொத்தமுள்ள 26 லட்சம் லாரிகளில் சுமார் 6 லட்சம் லாரிகள் மட்டுமே தற்போதைய நிலையில் இயங்கி வருகின்றன. டீசல் விலை டாலருக்கு மேல் 220 சதவீதம் உயர்ந்துள்ளது. இவை தவிர்த்து வரியும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
டீசல் விலை உயர்வால் பெரும்பாலான லாரி உரிமையாளர்கள் பொருளாதார இழப்பை சந்தித்து வருகின்றனர். மத்திய, மாநில அரசுகள் உடனடியாக டீசல் விலையை குறைக்க வேண்டும். அதேபோல் சுங்க கட்டணத்தையும் குறைக்க வேண்டும். இவை தவிர்த்து மாநில அளவிலான கோரிக்கைகளை அந்தந்த மாநில முதல்வர்களிடம் கோரிக்கைகளாக அளித்துள்ளோம்.
எங்களுடைய கோரிக்கைகளையும், டீசல் மற்றும் சுங்கக் கட்டணத்தையும் மத்திய, மாநில அரசுகள் ஆகஸ்ட் 9ஆம் தேதிக்குள் குறைக்காவிட்டால் மீண்டும் ஒரு அவசரக் கூட்டத்தைக் கூட்டி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை அறிவிப்போம் என இரு அரசுகளுக்கும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.