லண்டன்: மோசடி தொழிலதிபர் நீரவ் மோடி மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதால், அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தினால் அவர் தற்கொலை செய்து கொள்வதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதாக அவரது வழக்கறிஞர்கள் லண்டன் நீதிமன்றத்தில் பரபரப்பு கருத்தை முன் வைத்துள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நாட்டிலிருந்த முக்கிய வைர வியாபாரிகளில் ஒருவர் நீரவ் மோடி. குஜராத்தை சேர்ந்த இவர், பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் ரூ.14 ஆயிரம் கோடி வங்கி மோசடி செய்ததாகப் புகார் எழுந்தது.
இந்த மோசடி தொடர்பான வழக்கை சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது. விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே அவர் பிரிட்டனுக்குத் தப்பிச் சென்றார்.
நீரவ் மோடி
அவர் லண்டனின் இருப்பது உறுதியானதைத் தொடர்ந்து , அவரை இந்தியாவுக்கு அழைத்து வரும் பணிகளில் மத்தி அரசு தீவிரமாக இறங்கியது. இது தொடர்பாக இந்திய அரசு தொடர்ந்திருந்த வழக்கில், நீரவ் மோடியை நாடு கடத்த கடந்த பிப்ரவரி மாதம் லண்டன் நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. அதேபோல அந்நாட்டின் உள் துறை அமைச்சகமும் இதற்கு அனுமதி அளித்திருந்தது.
மனநலம்
இந்தச் சூழலில் லண்டன் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய அனுமதி அளிக்கக் கோரி லண்டன் உயர் நீதிமன்றத்தில் நீரவ் மோடி மனு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் நீரவ் மோடி சார்பில் ஆஜரான வழக்கிஞர் எட்வர்டு பிட்ஜெரால்டு, “நீரவ் மோடி மன ரீதியாக மிகவும் மோசமாக பாதிக்கப்படட்டுள்ளார்.
தற்கொலை செய்து கொள்வார்
நீரவ் மோடிக்குத் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணமும் அடிக்கடி வருவதாக மனநல மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். அவரது தாயாரும் தற்கொலை செய்து கொண்டவர் தான். எனவே, மும்பை சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டால் அழைத்துச் செல்லப்பட்டால் அவர் தற்கொலை செய்து கொள்ளும் ஆபத்து அதிகமாக உள்ளது. நீரவ் மோடி அடைக்கப்படவுள்ள மும்பை ஆத்தர் ரோட்டில் உள்ள சிறையில் ஏற்கனவே இடபற்றாக்குறை உள்ளது.
அனுமதிக்கக் கூடாது
மேலும், அங்கு கொரோனா வைரஸ் பாதிப்பும் அதிகமாக உள்ளது. எனவே, இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு நாடு கடத்துவதைத் தடை விதிக்க வேண்டும்” என வாதிட்டார். நீரவ் மோடி மனநலம் குறித்து மருத்துவர் அளித்த அறிக்கையையும் சமர்ப்பித்தார். அதேநேரம் இந்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அவர் மேல்முறையீடு செய்ய அனுமதி அளிக்கக் கூடாது என எடுத்துரைத்தார். இதையடுத்து வழக்கு விசாரணையை நீதிபதி ஒத்தி வைத்தார்.