தஞ்சாவூர்: தஞ்சாவூர் கலெக்டர் பெயரை பயன்படுத்தி, மர்ம நபர் ஒருவர் போன் மூலம் பலரிடம் பேசி கொரோனா நிவாரண நிதி கேட்டு மோசடி செய்ய முயன்ற தகவல் தெரிய வர கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.
தஞ்சாவூர் மாவட்ட புதிய கலெக்டராக தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கடந்த ஜூன் 16-ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டதுமே விவசாயத்தை ஊக்குவித்தல் சாகுபடி பரப்புகள் மற்றும் மகசூல் அதிகரிப்பதற்கான செயல்கள், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் வேகம்
உதவி கேட்டு யார் கலெக்டர் அலுவலகம் வந்து மனு கொடுத்தாலும் உடனடியாக அவர்களுக்கு உதவுகின்ற வகையிலான நடவடிக்கையினையும் துரிதமாக எடுத்து வருகிறார்.
முக்கியஸ்தர்கள்
இந்நிலையில் கடந்த சில தினங்களாக டாக்டர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களுக்கு போன் செய்த மர்ம நபர் ஒருவர் நான் கலெக்டரின் நேர்முக உதவியாளர் மணிமாறன். கொரோனா மற்றும் பல்வேறு நிவாரண பணிக்கு நிதி தேவைப்படுகிறது. நீங்கள் வழங்கும் நிதியினை கலெக்டர் நிவாரண பணிக்கு பயன்படுத்த உள்ளார். தங்களால் முடிந்த நிதி உதவியை செய்யுங்க என கேட்டுள்ளார்.
மர்ம நபர்
மேலும் பணத்தை அனுப்புவதற்கான வங்கி எண்ணையும் அந்த மர்மநபர் கொடுத்துள்ளார். அந்த நபர் இது போல் பலரிடம் பேசியதாக தெரிகிறது. நிவாரண பணிக்காக நிதி கேட்டாலும் எதுக்கும் ஆட்சியரிடம் ஒரு வார்த்தை கேட்டு விடலாம் என அவருக்கு போன் செய்து விஷயத்தை சொன்னார்கள்.
எச்சரிக்கை
இதை கேட்ட தஞ்சை ஆட்சியருக்கு அதிர்ச்சியாக இருந்தது. தான் யாரிடமும் நிவாரணத்திற்காக நிதி வசூலிக்க சொல்லவில்லை என ஆட்சியர் தன்னிடம் பேசுவோரிடம் தெரிவித்தார். மேலும் அந்த மர்ம நபருக்கு யாரும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்றும் ஆட்சியர் எச்சரிக்கை விடுத்தார்.
போலீஸார்
இது குறித்து விசாரணை நடத்த போலீஸாருக்கும் உத்தரவிட்டார். அத்துடன் கலெக்டர் அலுவலகத்தின் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தி எச்சரிக்கை செய்யும் விதமாக அறிவிப்பு ஒன்றும் வெளியிடப்பட்டது. அதில் கலெக்டர் பெயரை பயன்படுத்தி, சிலர் போன் மூலம், குறிப்பிட்ட வங்கிக்கணக்கில் பணம் செலுத்த வலியுறுத்துவதாக புகார்கள் வந்துள்ளன.
விசாரணை
இந்த புகாரின் அடிப்படையில், போலீஸார் மூலம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, கலெக்டர் பெயரை சொல்லி நிதி உதவி கேட்டு ஏதேனும் அழைப்புகள் வந்தால் யாரும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். அத்துடன் போன் வந்திருந்தாலோ, வந்தாலோ உடனடியாக போலீசுக்கு தெரியப்படுத்தி புகார் அளிக்க வேண்டும்.
ஆட்சியர் பெயர்
கலெக்டர் பெயரை தவறாகப் பயன்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து மணிமாறன் என்பவர் யார் என்ற விசாரணையில் சைபர் கிரைம் போலீஸார் இறங்கினர். சைபர் க்ரைம் போலீஸ் எஸ்.ஐ. கார்த்தி தலைமையிலான போலீஸார் விசாரணைக்காக நேற்றே கோவை புறப்பட்டு சென்றனர்.
விசாரணை
ஆனால் எந்த துப்பும் கிடைக்கவில்லை என தெரிகிறது. மணிமாறன் என்பது ஒரிஜினல் பெயரா அல்லது பெயரை மாற்றி சொன்னாரா என்பதை அவர் பேசிய செல் நம்பர் மேலும் அவர் பணம் அனுப்ப சொல்லி கொடுத்த பேங்க் அக்கவுண்ட் நம்பர் ஆகிவற்றை அடிப்படையாக கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.