பெங்களூர்: இதுவரை தடுப்பூசி போடாதவர்களை அடையாளம் காண ப்ருஹத் பெங்களூர் மகாநகர பாலிகே (பிபிஎம்பி) வீடு வீடாக கணக்கெடுப்பு நடத்தும் என்று நகர கமிஷனர் கவுரவ் குப்தா தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நகரம், பெங்களூர். கடந்த ஏப்ரல் மாத இறுதியிலும், மே மாதத்திலும் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் படுக்கை வசதி கூட கிடைக்காத நிலை இருந்தது.
கொரோனா அலை ஓய்ந்த பிறகு, தடுப்பூசி போடும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது மாநகராட்சி. ஆனால் தடுப்பூசி பற்றாக்குறையால் ஆரம்பத்தில் மருத்துவமனைகளில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தனர். இப்போது ஏதோ பரவாயில்லை. ஆனால் இன்னும் பற்றாக்குறை நிலவுகிறது.
வீடு வீடாக சர்வே
இந்த நிலையில்தான், “நாங்கள் வீடுகளுக்கு சென்று கணக்கெடுப்பு நடத்துவோம், இதன் மூலம் எந்த சொசைட்டி, அல்லது எந்த பகுதியில் கூடுதலாக கவனம் செலுத்த வேண்டும் என்பதை அடையாளம் காண இது உதவி செய்யும்” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார் நகர கமிஷனர் கவுரவ் குப்தா .
மத்திய அரசு ஒதுக்கவில்லை
“தடுப்பூசி போடும் பணிகள் மிக வேகமாக நடந்து வருகிறது. இருப்பினும், நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு தடுப்பூசிகள் சப்ளை இல்லை. மாநில அரசு அதை மத்திய அரசிடமிருந்து பெறவில்லை, இதனால் மாநகராட்சிக்கு மாநில அரசு ஒதுக்கவில்லை. இருப்பதை வைத்து எப்படியோ நிர்வகித்து வருகிறோம், ” என்றும் அவர் கூறினார்.
சிறப்பு முகாம்கள்
அவர் மேலும் கூறுகையில், “தற்போது, 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, ஒவ்வொரு வார்டிலும் உள்ள மாநகராட்சி சுகாதார மையங்களின் மூலமாக, முதல் மற்றும் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை வழங்குகிறோம். 18-44 வயதிற்குட்பட்டவர்களுக்கு, இப்போது ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக தடுப்பூசிகளை வழங்க சிறப்பு முகாம்களை நடத்தி வருகிறோம்.
முன்னுரிமை மக்கள்
ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர்கள் மற்றும் ஹோட்டல் தொழிலாளர்கள் போன்ற முன்னுரிமை குழுக்களுக்கு தடுப்பூசிகளை வழங்கினோம். தற்போது, கல்லூரி மாணவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு இதுபோன்ற திட்டம் வைத்துள்ளோம். இந்த சிறப்பு கேம்பைன்களால், சுமார் 1.8 லட்சம் மாணவர்கள் தடுப்பூசிகளைப் பெற முடிந்தது. எனவே கல்லூரி மாணவர்களிடையே இப்போது தடுப்பூசிக்கான தேவை குறைந்து வருகிறது. ” என்றார்.