சென்னை: மகளிருக்கு நகரப் பேருந்துகளில் இலவச பயணம் திட்டத்தை அமல்படுத்தியதை அடுத்து முதல்வர் ஸ்டாலினுக்கு அதிமுக நிர்வாகி ஒருவர் போஸ்டர் அடித்து நன்றி தெரிவித்துள்ளார்.
திமுக தேர்தல் அறிக்கையில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டம் அமல்படுத்தப்படும் என திமுக அறிவித்தது. இதையடுத்து திமுக கூட்டணி சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
முதல்வராக பதவியேற்ற அதே நாளில் பெண்களுக்கு நகர பேருந்துகளில் இலவச பயணம் திட்டத்தில் கையெழுத்திட்டார். இது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றது.
நிவாரணம்
அது போல் கொரோனா நிவாரணத்தின் முதல் தவணை ரூ 2000, ஆவின் பால் விலை குறைப்பு உள்ளிட்ட திட்டங்களிலும் அவர் கையெழுத்திட்டார். இதை கட்சி வேறுபாடின்றி பலர் பாராட்டினர். இந்த நிலையில் பெண்களுக்கு இலவச பயணம் திட்டத்தை திருநங்கையர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் விரிவுப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
மிச்சம்
இதையடுத்து அந்த திட்டம் அவர்களுக்கும் அமல்படுத்தப்பட்டது. கொரோனா காலத்தில் ஊதிய குறைப்பு, வேலையின்மை உள்ள நிலையில் ஒரு குடும்பத்தில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் என்பதால் மாதத்திற்கு கணிசமாக 400 முதல் 500 ரூபாய் வரை மிச்சமாவதாக பெண்கள் பாராட்டு தெரிவிக்கிறார்கள்.
அதிமுக
முதல்வரின் திட்டங்களை வரவேற்று ஏற்கெனவே அதிமுகவினர் பாராட்டு போஸ்டர் வெளியிட்டிருந்தனர். இந்த நிலையில் இந்த திட்டத்தை வரவேற்று அதிமுக தொண்டர் ஒருவர் போஸ்டர் ஒட்டியுள்ளார். அதில் பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் புகைப்படங்கள் சிறியதாக போடப்பட்டுள்ளனர்.
முதல்வரின் படம்
முதல்வரின் படம் பெரியதாக போடப்பட்டுள்ளது. அவருக்கு பின்னர் ஜெயலலிதா, அவருக்கு பின்னர் எம்ஜிஆரின் புகைப்படம் போடப்பட்டு பெண்களுக்கு இலவச பேருந்து பயண திட்டத்தை அறிவித்த தமிழக முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி என ஒட்டப்பட்டுள்ளது
அதிமுக தொண்டர்
இந்த போஸ்டரை அதிமுகவின் 9ஆவது வட்ட தொண்டர் எம் குணசேகரன் என்பவர் ஒட்டியுள்ளார். இவர் எந்த ஊரை சேர்ந்தவர் என தெரியவில்லை. ஆனால் சசிகலாவிடம் பேசுவோரை அதிமுக தலைமை நீக்கி வரும் நிலையில் ஆளும் கட்சியை பாராட்டி இவர் தைரியமாக போஸ்டர் ஒட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.