சென்னை: நடிகர் விஜய் தான் வாங்கிய காருக்கு வரி ஏய்ப்பு செய்யாமல் முறையாக வரி கட்டிய நிலையிலும் நேற்று சென்னை ஹைகோர்ட் அவருக்கு அபராதம் விதித்து இருக்கிறது. நுழைவு வரி கட்ட விலக்கு கேட்டதால் இந்த வழக்கில் விஜய்க்கு அபராதம் விதிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் வெளிவராத பல பின்னணி தகவல்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
கடந்த 2012ல் விஜய் வாங்கிய கார்தான் இது. ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் கோஸ்ட் வகை கார் ஆகும். கருப்பு நிறத்தில் தேர் போல கம்பீரமாக காட்சி அளிக்க கூடிய கார் இது என்பது குறிப்பிடத்தக்கது.
2012ல் இதன் விலை கிட்டத்தட்ட எட்டு கோடி ரூபாய் ஆகும். இன்றைய மதிப்பில் 9 கோடி ரூபாய்க்கும் அதிகம். விஜய் இந்த காரை பயன்படுத்தும் வீடியோக்கள் பல இணையத்தில் உலா வருகிறது.
கட்டிவிட்டார்
இந்த காருக்கு நுழைவு வரி, இறக்குமதி வரி, சாலை வரி அனைத்தையும் விஜய் கட்டிவிட்டார். ஆம் விஜய் இங்கே வரி ஏய்ப்பு எதுவும் செய்யவில்லை. சரியாக சொல்லவேண்டும் என்றால் விஜய் இதில் எந்த குற்றமும் செய்யவில்லை. ஆனாலும் விஜய்க்கு சென்னை ஹைகோர்ட் 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து இருக்கிறது. அவருக்கு ஏன் இந்த அபராதம் விதிக்கப்பட்டது, எல்லா வரியும் கட்டிய பின்பும் அபராதம் விதிக்கப்பட்டது எதனால் என்று பார்க்கலாம்.
கார் விற்பனை
விஜய் இந்த காரை வாங்கியது குறித்து பார்க்கும் முன் இரண்டு வகையான வரிகள் குறித்து பார்த்து விடலாம். முதல் வரி இறக்குமதி வரி. அதாவது நாம் வெளிநாட்டில் இருந்து ஒரு பொருள் வாங்கி வருகிறோம் என்றால் சுங்கத்துறையிடுமே அதற்கான இறக்குமதி வரியை செலுத்துவோம் இல்லையா? அதுதான் இறக்குமதி வரி. இது நாம் வெளிநாட்டில் இருந்து கொண்டு வரும் எல்லா பொருட்களுக்கும் வைக்கப்படும் வரி. இது போக இன்னொரு வரிதான் நுழைவு வரி.
நுழைவு வரி
இதை நீங்கள் வெளிநாடு அல்லது வெளி மாநிலத்தில் இருந்து கொண்டு வரும் பொருட்களை உங்கள் மாநிலத்தில் பயன்படுத்துவதற்கு கட்ட வேண்டிய வரியாகும். உங்கள் மாநிலத்தில் நுழைய அனுமதிக்கப்படும் வரிதான் நுழைவு வரி. வெளிநாடு மட்டுமின்றி ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்திற்கு சில பொருட்களை இறக்குமதி செய்யவும் கூட நுழைவு வரி உள்ளது. மாநிலம் – மாநிலம் இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் இந்த நுழைவு வரி கிடையாது. சில பொருட்களுக்கு மட்டுமே!
சச்சின்
சச்சின் இதேபோல் 2002ல் அன்பளிப்பாக பெற்ற ஃபெராரி காருக்கு இறக்குமதி வரி கட்டிவிட்டு பின் நுழைவு வரி கட்ட விலக்கு கேட்டார். அவருக்கு அப்போது நுழைவு வரி விலக்கு கிடைத்தது. ஆனால் பின்னர் சர்ச்சை எழுந்த காரணத்தால் பியட் நிறுவனமே சச்சினுக்காக நுழைவு வரியை கட்டி, காரை அவருக்கு அன்பளிப்பாக கொடுத்தது.
கட்ட வேண்டும்
அதேபோல் விஜய் தான் வாங்கிய காருக்கு இரண்டு வரிகளை கட்ட வேண்டும். ஒன்று இறக்குமதி வரி, இன்னொன்று நுழைவு வரி. நுழைவு வரி மட்டும் ரூபாய் 1 கோடி. சரி இப்போது பிரச்சனை என்னவென்று பார்க்கலாம். விஜய் கார் வாங்கியது பிஎம்டபிள்யூ ஷோ ரூமில் இருந்து, அவர்கள் விஜய்க்காக இறக்குமதி செய்த போதே இறக்குமதி வரியை கட்டிவிட்டனர். இதற்கான பணத்தை விஜய் கார் வாங்கும் முன்பே கொடுத்துவிட்டார்.
சாலையில் ஓட்ட
இந்த காரை சாலையில் ஓட்ட வேண்டும் என்றால், அதற்கு நுழைவு வரி கட்ட வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே ரிஜிஸ்டிரேஷன் செய்ய முடியும் என்ற எழுதப்படாத விதி உள்ளது. புதிய காரை வாங்கிய பின் விஜய் தரப்பு ரிஜிஸ்டிரேஷன் செய்ய சென்ற போது, அவரின் காரை ரிஜிஸ்டர் செய்ய சாலை போக்குவரத்துறை மறுத்துள்ளது. நீங்கள் நுழைவு வரி கட்டினால் மட்டுமே இந்த ரிஜிஸ்டிரேஷன் செய்யப்படும் என்று கூறியுள்ளனர்.
இன்னொரு கதை
இங்குதான் பலரும் செய்ய கூடிய விஷயத்தை விஜயும் செய்துள்ளார். நான்தான் பல கோடி இறக்குமதி வரி கட்டிவிட்டேனே. காரை தமிழ்நாடு கொண்டு வரத்தான் இறக்குமதி வரி கட்டி இருக்கிறேன். பின் ஏன் இன்னொரு நுழைவு வரி என்று கேள்வி எழுப்பி கோர்ட்டுக்கு சென்று இருக்கிறார். இது பொதுவாக வெளிநாட்டில் இருந்து உயரிய பொருட்கள் வாங்கும் பலர் செய்யும் செயலே. பலர் இதுபோல நாடு முழுக்க நுழைவு வரிக்கு எதிராக கோர்ட்டுக்கு சென்று இருக்கிறார்கள்.
விஜய்
ஆனால் விஜய் இங்கேதான் கொஞ்சம் மாறுபட்டுள்ளார். மற்றவர்கள் போல கோர்ட்டுக்கு சென்றுவிட்டு, தனது காரை வரி கட்டாமல் அவர் பயன்படுத்தவில்லை. நுழைவு வரி உட்பட அனைத்து வரிகளையும் அவர் கட்டிவிட்டார். காரையும் ரிஜிஸ்டர் செய்துவிட்டார். அனைத்தையும் ஒரு பக்கம் விதிப்படி செய்துவிட்டு, இன்னொரு பக்கம் நுழைவு வரி விதிப்பிற்கு எதிராக வழக்கு தொடுத்தார்.
உரிமை
வரியை கட்டாமல் சாலையில் விஜய் காரை ஓட்டினால் அது ஏமாற்று வேலை. ஆனால் வரியை எல்லாம் கட்டிவிட்டு கோர்ட்டுக்கு செல்வது என்பது அவருக்கு இருக்கும் தார்மீக உரிமை. இந்தியாவில் இருக்கும் எல்லோருக்கும் கோர்ட்டுக்கு செல்ல இருக்கும் அதே உரிமையைதான் விஜய் பயன்படுத்தி உள்ளார். வழக்கு விசாரணை நடத்த இத்தனை வருடம் வரி கட்டாமல் ஏமாற்றி இருந்தால்தான் தவறு. முறையாக வரியை கட்டிவிட்டு விஜய் தனது காரை வெளியே பயன்படுத்தி உள்ளார்.
தவறு
இந்த வழக்கில் விஜய் விலக்கு கேட்ட நுழைவு வரியை தள்ளுபடி செய்ய முடியாது என்று ஹைகோர்ட் கூறி அவருக்கு அபராதம் விதித்துள்ளது. விஜய் ஒரு பெரிய நடிகர், அவருக்கு விலக்கு அளித்தால் அது தவறான உதாரணம் ஆகிவிடும். அதேபோல் உயர்ந்த நபராக இருக்கும் ஒருவர் விலக்கு கேட்பது தவறு என்று கூறி அவரின் மனுவை தள்ளுபடி செய்து, அவருக்கு அபராதமும் விதித்துள்ளனர்.
அபராதம்
விஜய் எந்த குற்றமும் செய்யவில்லை. அதே சமயம் இந்த வழக்கு தொடுக்கப்பட்டதை விமர்சனம் செய்து, அதற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சில வழக்குகளை தள்ளுபடி செய்யும் போது வழக்கு தொடுத்தவருக்கு அபராதம் விதிப்பது வழக்கம். அதே நடைமுறைதான் இங்கும் பின்பற்றப்பட்டுள்ளது. கார் வாங்கி டாக்ஸ் கட்டாமல், இருந்து அதை அரசு கண்டுபிடித்து, அதற்கு அபராதம் விதிக்கப்பட்ட விவகாரம் இல்லை இது என்பது குறிப்பிடத்தக்கது!
தவறு இல்லை
தான் கட்ட போகும் வரி குறித்து கேள்வி எழுப்ப விஜய் கோர்ட் சென்று இருக்கிறார். அவர் யாரையும் ஏமாற்றவில்லை. செஸ் வரி, இறக்குமதி வரி, நுழைவு வரி என்று பல கூடுதல் வரிகளை கட்டுவதால், நுழைவு வரிக்கு விலக்கு கேட்டு இருக்கிறார். அவர் தவறு செய்யாத போதும், அவரின் வழக்கு தவறான முன் உதாரணமாக இருக்க கூடாது என்று உச்ச நீதிமன்றம் கருதியதால் அபராதம் விதித்துள்ளது.
என்ன நடக்கும் இனி
இதேபோல் பல முறை பல வழக்குகளில், வழக்கு தொடுத்த ஒரே காரணத்துக்காக அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பின் மேல்முறையீட்டில் இது போன்ற அபராதங்கள் நீங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. விஜய் வழக்கிலும் மேல் முறையீடு செய்யப்படுவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.