Phone/WhatsApp : +91 72000 33317

Reg.No. TN-02-0040998

மேகதாது அணை- கர்நாடகாவின் முயற்சி அரசியல் சாசன மாட்சிமைக்கு சவால்- அனைத்து கட்சி கூட்டத்தில் கண்டனம்

tnassembly7740-1626079571

சென்னை: காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்டுகிற கர்நாடகாவின் முயற்சி மிகவும் கண்டனத்துக்குரியது; இந்திய அரசியல் சட்டத்தின் மாட்சிமைக்கு விடப்பட்ட சவால் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் இன்று அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்றது. திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, பாமக, இடதுசாரிகள் உள்ளிட்ட 13 கட்சிகளின் தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

கர்நாடகாவுக்கு கண்டனம்

இக்கூட்டத்தில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்கள் விவரம்: உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, காவிரியின் கீழ்படுகை மாநிலங்களின் முன் அனுமதியைப் பெறாமல் மேகதாதுவில் எந்தவொரு கட்டுமானப் பணியையும் மேற்கொள்ளக் கூடாது. அதை மீறி, தற்போது மேகதாதுவில் அணை கட்டுவதற்கான முயற்சிகளை கர்நாடகா அரசு முழு முனைப்புடன் செய்து வருவது மிகவும் கண்டனத்துக்குரியது. இத்திட்டத்தினால் தமிழ்நாடு விவசாயிகளுக்கு தேவையான நீர் கிடைப்பது பாதிப்படையும்.

கர்நாடகாவுக்கு அனுமதி தரக்கூடாது

உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிரான இத்தனைய முயற்சி, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மாட்சிமைக்கு விடப்படும் சவாலாகும். எனவே, கர்நாடகா அரசின் இந்த திட்டத்துக்கு இதில் தொடர்புடைய மத்திய அரசின் அமைச்சகங்கள் எவ்விதமான அனுமதிகளையும் வழங்கக் கூடாது என மத்திய அரசை கேட்டுக் கொள்வது.

தமிழக அரசுக்கு ஆதரவு- ஒத்துழைப்பு

இந்த அணை அமைப்பதற்கான முயற்சிகளைத் தடுப்பதில் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மாநிலத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தங்களுடைய முழு ஆதரவையும் முழு ஒத்துழைப்பையும் வழங்கும்.

டெல்லிக்கு அனைத்து கட்சி குழு

தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பை முழுமையாக பிரதிபலிக்கும் வகையில் இந்த கூட்டத்தின் தீர்மானங்களை ஒன்றிய அரசிடம் அனைத்து கட்சியினரும் நேரில் சென்று முதற்கட்டமாக வழங்குவது; அதன்பிறகு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கு உள்ளிட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மற்றும் தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வது எனத் தீர்மானிக்கப்பட்டது.

Share on facebook
Facebook
Share on google
Google+
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on whatsapp
WhatsApp