உத்தர பிரதேச மாநிலத்தில் பிரமுக் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசின் மாநில நீதி ஆணையம் மக்கள் தொகை மசோதா 2021 மசாதாவை தாக்கல் செய்துள்ளது.
இந்த மசோதா மூலம் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதும், நிலைநிறுத்துவதும், நலன்களை அளிப்பதே முக்கிய இலக்காக உள்ளது.
ஆனால் 2 குழந்தைகளுக்கு அதிகமாக உள்ள பெற்றோர்களுக்கு அதிகளவிலான கட்டுப்பாடுகளும், தடைகளையும் இந்த மசோதாவில் குறிப்பிட்டு உள்ள காரணத்தால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
முதல்வர் யோகி ஆதித்யநாத்
முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப் பிரதேசம் அரசு 2021-2030ஆம் ஆண்டுக்கான இப்புதிய மக்கள்தொகை மசோதா-வை ஜூலை 11ஆம் தேதி உலக மக்கள் தொகை தினத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள்தொகை கட்டுப்பாடு
இப்புதிய மக்கள் தொகை மசோதா 2021 மூலம் உத்தரப் பிரதேச மாநிலத்தின் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தி மக்களுக்கு அதிகளவிலான நலத் திட்டங்களை அறிவிப்பது தான் முக்கிய இலக்காக உள்ளது.
2 குழந்தைகள் மட்டுமே
இதேபோல் அதிகப்படியாக 2 குழந்தைகள் மட்டுமே ஒரு தம்பதி பெற்றுள்ள வேண்டும் என்கிற கடுமையான கட்டுப்பாட்டை சலுகை குறைப்பு முலம் மக்கள் மத்தியில் அமலாக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது உத்தரப் பிரதேச மாநில அரசு.
அரசு வேலை இல்லை
இந்நிலையில் 2 குழந்தை கட்டுப்பாட்டை மீறியவர்களுக்குப் பல்வேறு சலுகைகள் பறிக்கப்படுவதாக இந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதில் குறிப்பாக 2 குழந்தைகளுக்கு அதிகமாகப் பெற்றுக்கொள்வோருக்கு அரசு வேலைவாய்ப்பு தடை விதிக்கப்பட உள்ளதாக இந்த மக்கள் தொகை மசோதா 2021ல் குறிப்பிடப்பட்டு உள்ளது.
முக்கிய தடைகள்
1. மாநில அரசின் நலத் திட்டங்களைப் பெறத் தடை
2. ரேஷன் பொருட்கள் 4 பேருக்கானது மட்டுமே வழங்கப்படும்
3. உள்ளூர் தேர்தலில் போட்டியிடத் தடை
4. அரசு வேலைவாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்கத் தடை
5. அரசு பணியில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வு மறுப்பு இந்தக் கட்டுப்பாடு அனைத்தும் ஏற்கனவே அரசு பணியில் அல்லது உள்ளூர் ஆட்சியில் இருப்பவர்களுக்குப் பொருந்தாது எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
மக்கள் கருத்து
இப்புதிய சட்டம் குறித்து அடுத்த 10 நாட்களுக்கு மக்கள் மத்தியில் கருத்துக் கேட்க உள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. அதாவது ஜூலை 19ஆம் தேதி இந்த மசோதா குறித்து முழுமையான முடிவுகள் எடுக்கப்படும் என உத்தர பிரதேசம் மாநில அரசு தெரிவித்துள்ளது.