சென்னை: கொங்கு மாவட்டங்களில் திமுகவை பலப்படுத்தும் வகையில் பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. மக்கள் நீதி மய்யம் கட்சியின் முன்னாள் துணை தலைவர் மகேந்திரன் நேற்று திமுகவில் இணைந்ததற்கும் கூட இதுவே காரணமாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில் கொங்கு மண்டலத்தில் திமுக தனது அடுத்தகட்ட வேலைகளை தொடங்கிவிட்டது.
தமிழ்நாடு முழுக்க விரைவில் உள்ளாட்சி தேர்தல்கள் நடக்க உள்ளன. இதற்காக திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகிறது. திமுக சில நாட்களுக்கு முன்பே மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நடத்தி, தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டது.
சட்டசபை தேர்தலில் கொங்கு மாவட்டங்களில் திமுக சரியாக செயலாற்றவில்லை. முக்கியமாக கோவையில் ஒரு தொகுதியில் கூட திமுக வெற்றிபெறாமல் தோல்வி அடைந்தது.
தோல்வி
இந்த நிலையில்தான் தற்போது உள்ளாட்சி தேர்தல்களுக்கு முன்பாக கோவையில் புதிய பொழிவை அடையும் திட்டத்தில் திமுக உள்ளது. கரூரில் ஏற்கனவே செந்தில் பாலாஜி தீயாக வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறார். கரூரில் பல்வேறு திமுக உறுப்பினர்கள், கவுன்சிலர்கள் கூட்டம் கூட்டமாக திமுக பக்கம் தாவி வருகிறார்கள். இந்த நிலையில்தான் தற்போது கோவை, சேலம், ஈரோட்டிலும் திமுக காய் நகர்த்தி வருகிறது.
யார்
இதன் ஒரு கட்டமாகவே நேற்று மகேந்திரன் திமுகவில் இணைந்தார். கோவைக்கு என்று ஸ்பெஷலாக இவர் வரும் நாட்களில் களமிறக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், கொங்கு மண்டலத்தில் திமுக வேறு சில ட்வீஸ்ட்களையும் கொடுக்க போவதாக தகவல்கள் வருகின்றன. அதன்படி இன்னும் ஒரு வாரத்திற்குள் திமுகவில் முக்கியமான கொங்கு மண்டல புள்ளி இணைய போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கொங்கு புள்ளி
அதிமுகவில் முன்னாள் அமைச்சராக இருந்த ஒருவர்தான் அந்த புள்ளி என்கிறார்கள். கொங்கு மண்டலத்தில் அதிமுக நம்பி இருக்கும் ஒரு சில தலைகளில் இவரும் ஒருவர், அவர்தான் திமுக பக்கம் தாவ போகிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில நாட்களாக கொஞ்சம் அமைதியாக இருந்த அந்த புள்ளி, தற்போது திமுக பக்கம் தாவ அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதிமுகவில் தனக்கு வாய்ஸ் குறைந்துவிட்டதால் இப்படி கட்சி மாற்றம் செய்யப்போவதாக தகவல்கள் வருகின்றன.
செந்தில் பாலாஜி
முன்னாள் அதிமுக அமைச்சரும், இந்நாள் திமுக அமைச்சருமான செந்தில் பாலாஜியுடன் கொஞ்சம் நெருக்கமாக இருந்த தலைவர் அவர் என்று தெரிகிறது. செந்தில் பாலாஜி மூலம் இவரை திமுகவிற்கு இழுக்கும் பணிகள் வெற்றிபெற்றுவிட்டதாகவும், விரைவில் கொங்கில் பெரிய டிவிஸ்ட் காத்து இருக்கிறது என்றும் கூறுகிறார்கள். உள்ளாட்சி தேர்தல்களுக்கு முன்பாக இந்த மாற்றம் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
திமுக
ஏற்கனவே கொங்கு மண்டலத்தில் திமுக கட்சி மகேந்திரன், செந்தில் பாலாஜி என்று அதிரடி காட்டி வருகிறது. இவர்கள் மூலம் கொங்கு மாவட்டங்களில் திமுக புதிய பலம் பெற்று வருகிறது. இதில் கூடுதலாக இன்னொரு அதிமுக முன்னாள் அமைச்சரும் திமுக பக்கம் தாவினால், திமுகவிற்கு அது மேலும் பலம் சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.