சென்னை: கரூர் நகராட்சி தேர்தலில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்ற திடீர் கேள்வி எழுந்துள்ளது தமிழக பாஜக தலைவராக எல் முருகன் செயல்பட்டவுடன் அக்கட்சி சார்பில் 4 பேர் சட்டசபைக்கு சென்றுள்ளார்கள். தற்போது அவர் மத்திய அமைச்சரானவுடன் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற கேள்வி எழுந்தது.ஆனால் அதற்குள் துரிதமாக செயல்பட்ட பாஜக தலைமை மக்களிடம் நன்கு அறிமுகம் கொண்ட அண்ணாமலையை தலைவராக நியமித்தது.
உள்ளாட்சி மன்றம்
சட்டசபையுடன் உள்ளாட்சி மன்றத்திலும் பாஜகவின் இருப்பை காட்ட அக்கட்சி நிச்சயம் போட்டியிடும். அவ்வாறு போட்டியிடும்பட்சத்தில் கரூரை பூர்வீகமாக கொண்ட அண்ணாமலை அந்த நகராட்சியின் தலைவர் பதவிக்கு நிறுத்தப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
வானதி ஸ்ரீனிவாசன்
கொங்கு மண்டலத்தைப் பொறுத்தவரை வானதி ஸ்ரீனிவாசனும் மொடக்குறிச்சி சரஸ்வதியும் எம்எல்ஏக்களாகி மக்கள் பணிகளை செய்து வருகிறார்கள். எல் முருகன் பாஜக தலைவராக இருந்து இப்போது மத்திய இணை அமைச்சராகியும் விட்டார். இவர்களை தவிர்த்து பாஜகவின் முகமாக விரல் விட்டு எண்ணக் கூடியவர்களே கொங்கு மண்டலத்திலிருந்து பதவியில் உள்ளனர்.
நகராட்சித் தலைவர்
எனவே கரூர் நகராட்சி தலைவர் தேர்தலில் அண்ணாமலையை போட்டியிட பாஜக தேர்வு செய்யுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில் அரவக்குறிச்சியில் போட்டியிட்ட அண்ணாமலை தோல்வி அடைந்தாலும் 68553 வாக்குகளையும் 38.71 சதவீதம் வாக்கு சதவீதத்தையும் பெற்றுள்ளார்.
வாக்கு வங்கி
இந்த வாக்கு வங்கியை வைத்து அண்ணாமலையை கரூர் நகராட்சி தலைவர் தேர்தலில் நிறுத்தினால் இதன் மூலம் பாஜக உள்ளாட்சியிலும் தனது இருப்பை காட்டிக் கொள்ள வசதியாக இருக்கும். என்னதான் பாஜகவின் முகமாக உள்ள அண்ணாமலைக்கு தலைவர் பதவியை கொடுத்தாலும் அது மாநில அளவிலானது.
நகராட்சித் தலைவர் தேர்தல்
இதே நகராட்சி தலைவர் தேர்தலில் போட்டியிட்டு ஒரு வேளை வெற்றி பெற்றால் மக்கள் பணியில் அவரை முழுமையாக ஈடுபடுத்தி அதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் பாஜகவுக்கு ஒரு இமேஜை ஏற்படுத்த வாய்ப்பு கிடைக்கும். ஒரு வேளை தோற்றாலும் கூட, அதிலும் அதிக வாக்குகளைப் பெற்றுத் தோற்றால் இமேஜ் கூட உதவும் இதன் மூலம் ஒரே கல்லில் இரு “தாமரைப் பூக்களை” பாஜக அறுவடை செய்யலாம்.
கரூர் நகராட்சித் தலைவர்
ஒரு வேளை நாம் குறிப்பிடுவது போல் அவர் கரூர் நகராட்சித் தலைவர் பதவிக்கு அண்ணாமலை போட்டியிட்டால் மாநிலத் தலைவர் பதவியை என்ன செய்வார் என்ற கேள்வியும் எழுகிறது. இதில் அண்ணாமலைக்கு இன்னொரு போனஸும் உண்டு. அதாவது கரூரை தனி மாநகராட்சியாக மாற்றும் திட்டத்தில் திமுக உள்ளது. ஒருவேளை அவ்வாறு மாற்றினால் அந்த மாநகராட்சியின் மேயர் பதவிக்கு கூட அண்ணாமலை போட்டியிட பார்க்கலாம்.