நிலவில் காலடி வைத்த முதல் குழுவில் எஞ்சியிருக்கும் ஒரே நபராக எட்வின் பஸ் ஆல்ட்ரின் இருக்கிறார்.
நிலவின் முதலில் காலடி வைத்த நீல் ஆம்ஸ்ட்ராங் பற்றி நமக்கு தெரியும். இரண்டாவதாக காலடி எடுத்து வைத்தவர் பெயர் அநேக மக்களுக்கு தெரியாது. பஸ் ஆல்ட்ரின் என்பவர் தான் அந்த பெருமைக்கு சொந்தக்காரர். அவர் தனது 93வது பிறந்தநாளில் தனது நீண்டகால காதலியை திருமணம் செய்துள்ளார்.
1969 ஆம் ஆண்டு அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா அப்பல்லோ 11 என்ற விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியது. முதல் முறையாக மனிதர்களை நிலவில் தரை இறக்கிய இந்த விண்கலத்தில் நீல் ஆம்ஸ்ட்ராங், எட்வின் பஸ் ஆல்ட்ரின், மைக்கேல் காலின்ஸ் என்ற 3 விண்வெளி வீரர்கள் இருந்தனர்.
நீல் ஆம்ஸ்ட்ராங் 2012 இலும் , மைக்கேல் காலின்ஸ் 2021 இலும் இயற்கை எய்திய பின்னர் நிலவில் காலடி வைத்த முதல் குழுவில் எஞ்சியிருக்கும் ஒரே நபராக எட்வின் பஸ் ஆல்ட்ரின் இருக்கிறார்.
சந்திரனில் நடந்த இரண்டாவது மனிதரான ஆல்ட்ரின் ஜனவரி 20 அன்று தனது 93வது வயதை எட்டினார். அன்றைய தினம் தனது சமூக ஊடகங்களில் ஒரு பதிவில் தனது திருமணத்தை ஆல்ட்ரின் அறிவித்தார். லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த ஒரு சிறிய விழாவில் தானும் தனது நீண்ட கால காதலி டாக்டர் அன்கா ஃபூரும் திருமணம் செய்து கொண்டதாக அறிவித்தார்.
“எனது 93வது பிறந்தநாளில், லிவிங் லெஜண்ட்ஸ் ஆஃப் ஏவியேஷன் என்று நான் கவுரவிக்கப்படவிருக்கும் நேரம், எனது நீண்டகால காதலியான டாக்டர். அன்கா ஃபாரை கரம் பிடித்த செய்தியை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
லாஸ் ஏஞ்சல்ஸில் ஒரு சிறிய தனியார் திருமண விழாவில் நாங்கள் இணைந்தோம், மேலும் துறுதுறுப்பாக சுற்றும் இளைஞர்களைப் போல உற்சாகமாக இருக்கிறோம்” என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.