பீகார் மாநிலத்தின் முதல்வர் நிதீஷ்குமார், கடந்த ஆண்டில் சமூக சீர்திருத்த பிரச்சாரம் ஒன்றை மேற்கொண்டார்.மது அருந்துவதால் சமூகத்திற்கும், பெண்களுக்கும் ஏற்படும் இழப்புகள் குறித்து அவர் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
2016-இல் பூரண மதுவிலக்கையும் இவரே அமல்படுத்தினார்.ஆனால்,ஒட்டுமொத்த பீகாருக்கும்,ஜாமூய் மாவட்டத்தில் உள்ள கங்காரா கிராமம்தான் முன்னோடியாக இருக்கிறது.
அந்த கிராமத்தில் 7 நூற்றண்டுகளுக்கு முன்பு மதம் சார்ந்த நம்பிக்கையாக மதுவிலக்கு கடைப்பிடிபிக்கப்பட்டது.அன்று முதல் இன்று வரையில்,அதுவே அவர்களது பாரம்பரிய பழக்கமாக மாறிவிட்டது.
பீகார் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்ட பிறகு, வெவ்வேறு ஊர்களில் வெவ்வேறு சமயங்களில் மது விற்பனை நடைபெற்றதாக வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. ஆனால், கங்காரா கிராமத்தில் மது விற்பனை நடைபெற்றதாகவோ அல்லது யாரும் மது அருந்தியதாகவோ இதுவரையில் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை.
இதுகுறித்து கங்காரா கிராம மக்கள் கூறுகையில், “பல ஆண்டுகளாக நாங்கள் மத நம்பிக்கை அடிப்படையில் இந்த பழக்கத்தை கடைப்பிடித்து வருகிறோம். எங்கள் கிராமத்தில் மது அருந்துவது என்பது பாவ காரியம் ஆகும்’’ என்று தெரிவிக்கின்றனர்.
இங்குள்ள மக்கள் அனைவரும் உள்ளூர் தெய்வமான ‘பாபா கோகில்சந்த்’ சாமியை வழிபட்டு வருகின்றனர். மது அருந்தக் கூடாது, பெண்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் மற்றும் உணவுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பது அந்த தெய்வத்தின் கட்டளையாம். அதை கிராம மக்கள் கடுமையாக பின்பற்றி வருகின்றனர்.
கங்காரா கிராமத்தில் ஏறத்தாழ 400 குடும்பங்கள் உள்ளன. அங்கு சுமார் 3,500 மக்கள் வசித்து வருகின்றனர். ஆனால், எந்தவொரு தனிநபரும் மது அருந்துவது இல்லை. இங்கு யாரேனும் மது அருந்த முயற்சித்தால், அவர்களது குடும்ப உறுப்பினர்களை இழக்க வேண்டியிருக்கும் என்று கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த கிராம ஊராட்சியின் தலைவர் அஞ்சனி சிங் இதுகுறித்து கூறுகையில், “பாபா கோகில்சந்த் கோவிலில் தினசரி பாரம்பரிய முறையில் பூஜைகளை நடத்தி வருகிறோம். அவர்தான் எங்களை மதுவில் இருந்து விலக்கி வைத்திருக்கிறார் என நம்புகிறோம்’’ என்று கூறினார்.
இதெல்லாம் மூட நம்பிக்கை எனக் கூறி, கிராமத்தில் உள்ள சிலர் சில ஆண்டுகளுக்கு முன்பு எதிர்ப்புக் குரல் எழுப்பினர் என்றும், ஆனால், அடுத்த சில நாட்களில் அவர்களது குடும்பங்களில் அசாதாரணமான நிகழ்வுகள் ஏற்பட்டதால், அதை அவர்கள் கைவிட்டனர் என்றும் கிராம மக்கள் கூறுகின்றனர். இங்கிருந்து வெளிநாடுகளுக்குச் சென்று படிப்பவர்கள் மற்றும் பணிபுரிபவர்கள் கூட மது அருந்துவது கிடையாதாம்.