சென்னை: தமிழ்நாட்டில் தென்மேற்குப் பருவமழை விட்டு விட்டு பெய்து வரும் நிலையில் அடுத்த 3 நாட்களுக்கு நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வால்பாறை, சின்னக்கல்லாரில் தலா 5 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளதாகவும் வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை மைய இயக்குநர் புவியரசன் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்மேற்கு பருவகாற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய திருப்பூர், தென்காசி மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனையொட்டிய உள் மாவட்டங்கள் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை வெளுக்கும்
7,8 ஆம் தேதிகளில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். திருப்பூர், தென்காசி மற்றும் உள் மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் மற்றும் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
9,10ஆம் தேதிகளில் மழை
9,10ஆம் தேதிகளில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும். கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலத்த காற்று வீசும்
இன்றும், நாளையும் தென்மேற்கு வங்க கடல் மற்றும் தென்கிழக்கு இலங்கை பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளில் இருக்கும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் கடலுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இன்று முதல் 10ஆம் தேதி வரை தென்மேற்கு, வடக்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மஞ்சள் அலெர்ட்
தென்மேற்குப் பருவமழை வட இந்தியாவில் தீவிரமடைந்துள்ளது. பல மாநிலங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. பீகார், ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம், மற்றும் உத்தரபிரதேசம் மற்றும் வடகிழக்கு இந்தியாவின் சில பகுதிகள் உட்பட பல மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அந்த மாநிலங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மத்திய பிரதேசம்
இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று கணித்துள்ளது. பீகார், ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம், மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களில் கனமழை பெய்யும், அதே நேரத்தில் மத்திய பிரதேசத்தின் சில பகுதிகளிலும் பரவலாக மழை பெய்யும் என அறிவித்துள்ளது. கர்நாடகா மற்றும் கேரளாவின் கடலோர பகுதிகளிலும் மிக கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தத்தளிக்கும் மேற்குவங்கம்
மேற்கு வங்க மாநிலத்தில் வியாழக்கிழமை அதிகாலை முதல் இடைவிடாத மழை பெய்து வருகிறது, கொல்கத்தாவில் முக்கிய பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஒடிசா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்திலும் பீகாரிலும் வார இறுதியில் பலத்த மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
நீடிக்கும் கனமழை
வடகிழக்கு மாநிலங்களைப் பொருத்தவரை, ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளது. அடுத்த நான்கு நாட்களில் அசாம் மற்றும் மேகாலயாவில் கனமழை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, வெள்ளிக்கிழமை முதல் நாகாலாந்து, திரிபுரா, மிசோரம் மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் வார இறுதி வரை மழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.