கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மாவட்டம் பீளமேட்டில் இருக்கும் கேசிபி எஞ்சினியர்ஸ் நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகிறார்கள். எஸ். வேலுமணிக்கு நெருக்கமான கே. சந்திர பிரகாஷ் மற்றும் சந்திரசேகர் ஆகியோருக்கு சொந்தமான நிறுவனம் ஆகும் இது.
முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் உட்பட 60 இடங்களில் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி ரெய்டு நடத்தியது. அவரின் நண்பர்கள் வீடுகள், அலுவலகங்கள், அவர்களின் உறவினர்களுக்கு சொந்தமான இடங்கள், நிறுவனங்கள், சென்னையில் இருக்கும் பல்வேறு சொத்துக்கள், நெருக்கமான அதிகாரிகளின் வீடுகள் என்று ஒரு இடம் விடாமல் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சல்லடை போட்டு சோதனை செய்தனர்.
எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இருந்து இந்த ரெய்டின் முடிவில் ரூபாய் 13.08 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்து உள்ளது. அதோடு பல கோப்புகள், ஆவணங்கள், ஆதாரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.
வேலுமணி
இந்த நிலையில் நேற்று ரெய்டு நடத்திய போதே வேலுமணிக்கு அடுத்தபடியாக அன்பரசன், கே. சந்திர பிரகாஷ் மற்றும் சந்திரசேகர் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிக கவனம் செலுத்தினார்கள். இவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் தீவிரமான சோதனைகளை மேற்கொண்டனர். கே. சந்திர பிரகாஷ் மற்றும் சந்திரசேகர் ஆகிய இருவரும் இந்த வழக்கில் ஏ 4 மற்றும் ஏ 5 ஆக சேர்க்கப்பட்டு உள்ளனர். வேலுமணிக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்பதால் இவர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இவர்களுக்கு சொந்தமான கேசிபி எஞ்சினியர்ஸ் நிறுவனமும் இந்த வழக்கில் ஏ 3ஆக சேர்க்கப்பட்டுள்ளது.
2 பேர் முக்கியம்
இந்த கேசிபி எஞ்சினியர்ஸ் மூலம்தான் பல்வேறு ஒப்பந்தங்கள், டெண்டர்கள் எடுக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளதால் அங்கு தீவிரமான சோதனைகள் நடந்து வருகிறது. வேலுமணி தொடர்பான புகார்களில் சிக்கி இருக்கும் பல்வேறு நிறுவனங்கள் எதோ ஒரு வகையில் சந்திர பிரகாஷ் மற்றும் சந்திரசேகர் இருவருக்கும் தொடர்பு உடையாக உள்ளது. விசாரணையில் சிக்கி இருக்கும் பெரும்பாலான நிறுவனங்களுக்கும் இவர்களுக்கு பல்வேறு வகைகளில் தொடர்பு இருப்பதால் விஜிலன்ஸ் அதிகாரிகள் இவர்களை விடாமல் ரெய்டு செய்து வருகிறார்கள்.
இன்று சோதனை
நேற்றே விஜிலன்ஸ் அதிகாரிகள் மாலை வரை இவர்களுக்கு சொந்தமான கேசிபி எஞ்சினியர்ஸ் நிறுவனத்தில் சோதனை செய்தனர். நேற்று ரெய்டு நடந்த 60 இடங்களில் 59 இடங்களில் மாலை 6 மணி அளவிலேயே ரெய்டு முடிந்துவிட்டது. ஆனால் இந்த கேசிபி எஞ்சினியர்ஸ் நிறுவனதில் மட்டும் கொஞ்சம் கூடுதல் நேரம் ரெய்டு நடந்து இருக்கிறது. அதன்பின் இரவு 12.30 மணிக்கு மீண்டும் இங்கு வந்த அதிகாரிகள் சில முக்கிய கோப்புகளை இங்கிருந்து எடுத்து சென்றனர். அதோடு உள்ளே இருந்த மற்ற அறைகளுக்கும் மற்ற மாடிகளுக்கும் சீல் வைத்துவிட்டு சென்றனர்.
முக்கியமான மாடி
நேற்று இந்த கேசிபி எஞ்சினியர்ஸ் நிறுவனத்தில் மொத்தம் இரண்டு மாடிகளில் ரெய்டு நடந்து இருக்கிறது. இரண்டு மாடிகளில் நடத்தப்பட்ட ரெய்டின் முடிவில் பல்வேறு ஆதாரங்கள், கோப்புகள், பத்திரங்கள், புராஜக்ட் தகவல்கள் இங்கிருந்து எடுத்து செல்லப்பட்டன. இந்த நிலையில் இன்று மூன்றாவது மாடியில் ரெய்டு நடத்தினார்கள். இந்த மூன்றாவது மாடியில்தான் பல்வேறு முக்கிய கோப்புகள், விவரங்கள் அடங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
தீவிரம்
முக்கியமாக இங்கு 60 கணினிகள் உள்ளன. இந்த கணினிகள் அனைத்தையும் இன்று சோதனை செய்யும் முடிவில் உள்ளனர். இதன் மூலம் பல்வேறு ரகசியங்கள், ஒப்பந்த விவரங்கள் வெளியே வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று ஒரே கணினியில் இருந்து டெண்டர் கோரியது ரெய்டில் கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோன்ற முக்கிய ஆதாரங்கள் இன்றும் சிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கணினிகள்
இந்த கணினிகளை சோதனை செய்துவிட்டு பின் அங்கிருந்து அனைத்து ஹார்ட் டிஸ்குகளையும் பறிமுதல் செய்ய உள்ளனர். இந்த கேசிபி எஞ்சினியர்ஸ் நிறுவனத்தின் கட்டிடம் முழுக்க இன்று மாலைக்குள் ரெய்டு நடத்தி முடிவுக்கும் திட்டத்தில் அதிகாரிகள் இருப்பதாக தெரிகிறது. இதனால் அங்கு கூடுதல் அதிகாரிகள் களமிறங்கி உள்ளனர். வேலுமணி ரெய்டு விவகாரத்தில் கே. சந்திர பிரகாஷ் மற்றும் சந்திரசேகர் இருவரும் தீவிரமாக குறி வைக்கப்படுவதால் இவர்களிடம் இருந்து நிறைய ஆதாரங்கள் வெளியேற வர வாய்ப்புகளும் உள்ளன.
திருவேங்கடம் புகார்
முன்னதாக எஸ்.பி வேலுமணிக்கு எதிராக திருவேங்கடம் என்ற ஒப்பந்ததாரர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அப்போது வேலுமணி தன்னிடம் சந்திர சேகரை பார்க்க சொன்னதாகவும், சந்திர சேகர் தன்னை மிரட்டியதாகவும் திருவேங்கடம் குறிப்பிட்டு இருந்தார். இந்த சந்திசேகர்தான் தற்போது ரெய்டில் சிக்கி இருக்கிறார். இதே சந்திர சேகர்தான் நமது அம்மா நாளிதழின் வெளியீட்டாளராக இருக்கிறார்.
சோதனை மேல் சோதனை
நேற்று நமது அம்மா நாளிதழிலும் சோதனை நடத்தப்பட்டது. அவ்வளவு எளிதாக மீடியாக்களில் சோதனைகள் நடத்தப்படாது என்ற நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இங்கு சோதனை நடத்தியது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. சந்திரசேகரிடம் முக்கியமான ஆதாரம் ஏதாவது இருக்கலாம் என்பதால் விஜிலன்ஸ் தொடர்ந்து குறி வைப்பதாக தோன்றுகிறது. இந்த சோதனைகள் முடிந்து, ஆதாரங்கள் திரட்டப்பட்ட பின்பே விஜிலன்ஸ் ஏன் இவரை இவ்வளவு தீவிரமாக குறி வைத்தது என்பதற்கான விடை கிடைக்கும்.