சென்னையில் இருந்து 360 கி.மீ தூரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. மணிக்கு 12 கி.மீ வேகத்தில் மேற்கு – வட மேற்கு திசையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து வருகிறது
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதீத கனமழை பெய்யும் எனவும் வானிலை மையம் எச்சரித்திருந்தது. மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை சென்னை அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், இன்றும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே சென்னையில் இன்று காலை முதல் லேசான மழை பெய்து வருகிறது. சென்னையில் அதி கனமழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையை கடந்து செல்ல உள்ளதால், காற்றுகுவிப்பும் சென்னைக்கு வடக்கே நகர்வதன் காரணமாக சென்னை ஆபத்தில் இருந்து தப்பி உள்ளது என வானிலை ஆய்வாளர் பிரதீப் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், சென்னையில் வரும் 20 ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.