திருவனந்தபுரம்: பத்தாம் வகுப்பு மாணவனை அடித்து விடுவேன், உதைத்து விடுவேன் என்று தொலைபேசியில் மிரட்டியதாக பெரும் சர்ச்சையில் சிக்கிக் கொண்டிருக்கிறார் கேரள மாநிலம் கொல்லம் சட்டசபைத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏவும், பிரபல நடிகருமான, எம்.முகேஷ்.
முகேஷ் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்ட ஒரு 10ம் வகுப்பு மாணவர் அவரிடம் ஏதோ உதவி கேட்க முயற்சி செய்யும் போதே, அதை இடைமறித்து நிறுத்திய முகேஷ், கண்ணா பின்னா என்று அந்த சிறுவனை திட்டியுள்ளார். அடித்து விடுவேன் என்றும் கூறினார்.
இந்த ஆடியோ பதிவு வெளியாகி கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போராட்டங்கள்
குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பில் முகேஷுக்கு எதிராக புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மாநிலம் முழுக்க போராட்டங்களை முன்னெடுத்துள்ளது, மாணவர் அமைப்பான எம்.எஸ்.எப். இதனால் முகேஷ் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளார்.
தினசரி தொலைபேசி அழைப்புகள்
இது தொடர்பாக எம்எல்ஏ முகேஷ் ஒரு விளக்கம் அளித்துள்ளார். வீடியோவும் வெளியிட்டுள்ளார். இரண்டாவது முறையாக கொல்லம் சட்டசபை தொகுதியிலிருந்து தான் வெற்றி பெற்றது முதல் தொடர்ந்து குறிவைத்து தொல்லைகள் தரப்படுவதாகவும் இதன் பின்னணியில் அரசியல் சதி இருப்பதாகவும் கூறியுள்ளார்.
சார் ரயில் எப்போ வரும்
நள்ளிரவு நேரங்களில் கூட சிலர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ரயில் எத்தனை மணிக்கு வரும், மின்சாரம் எத்தனை மணிக்கு வரும் கேள்விகளை கேட்பதாகவும், இப்போது ஒரு சிறுவனை விட்டு தனது தொலைபேசிக்கு அழைப்பு விடுத்துள்ளனர், அவரிடம் நான் கோபமாக பேசியதை பொதுவெளியில் வெளியிட்டு எனது நற்பெயருக்கு களங்கம் கற்பிக்க முயற்சி செய்துள்ளார்கள் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
பாலக்காடு எம்எல்ஏவுக்கு பதில்
தொலைபேசியில் பேசிய அந்த மாணவர் பாலக்காடு தொகுதி எம்எல்ஏ நீங்கள் தானே என்று கேட்டு தனது பேச்சை ஆரம்பிக்கிறார். அதற்கு உங்களுக்கு எப்படி எனது தொலைபேசி எண் கிடைத்தது என்று கேட்கிறார் முகேஷ். அதற்கு அவர், எனது நண்பர் ஒருவர் இந்த தொலைபேசி எண்ணை கொடுத்தார் என்று தெரிவித்ததும் அந்த நண்பரின் கையில் கிடைத்தால் அடித்து நொறுக்கி விடுவேன் என்று கூறுகிறார் முகேஷ்.
அடிப்பதாக மிரட்டல்
ஒரு மாணவன் தனது தொகுதி எம்எல்ஏ யார் என்பது தெரிந்திருக்க வேண்டும் என்று ஒரு கட்டத்தில் அந்த மாணவனுக்கு அட்வைஸ் செய்கிறார் முகேஷ். மீண்டும் மீண்டும் மாணவன் உதவி கேட்கவே, நீ மட்டும் நேரில் வந்தால் அடித்து விடுவேன் என்று மிரட்டுவது போல ஆடியோ பதிவு இருக்கிறது.
முகேஷ் விளக்கம்
இதுபற்றி விளக்கம் அளித்துள்ள முகேஷ், ஏற்கனவே அந்த மாணவன் 8 முறை தன்னை தொலைபேசியில் அழைக்கவும், ஜூம் ஆன்லைன் மீட்டிங் ஒன்றில் தான் இருப்பதால் இப்போது தொலைபேசியை எடுக்க முடியாது என்று பலமுறை கூறிய பிறகும் ஒன்பதாவது முறை அந்த மாணவன் தனக்கு தொல்லை கொடுத்ததால் பதிலுக்கு திட்டியதாகவும் கூறியுள்ளார். தனது அரசியல் எதிரிகள் தான் இந்த மாணவனுக்கு தனது செல்போன் எண்ணைக் கொடுத்து அழைக்கச் சொல்லி இருக்க வேண்டும் என்று உறுதியாக கூறியுள்ள அவர், சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.