கொரோனா தொற்றுக் காரணமாக ஐடி நிறுவனங்கள் கடந்த ஒரு வருடத்திற்கும் அதிகமான காலகட்டத்திற்கு வீட்டில் இருந்து பணியாற்றி வரும் நிலையில், தற்போது நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைக்க முடிவு செய்து அதற்கான பணிகளைச் செய்து வருகிறது.
இந்நிலையில் திறன் வாய்ந்த உயர் அதிகாரிகளுக்குப் பென்ஸ் கார் அளிக்க உள்ளதாக அறிவித்துள்ள ஹெச்சிஎல் நிறுவனம், தனது ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைப்பது குறித்து முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
முன்னணி ஐடி நிறுவனங்கள்
சென்னை, பெங்களூர், மும்பை, புனே, கூர்கான் ஆகிய பகுதிகளில் இருக்கும் பல முன்னணி ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைத்து வருகிறது. நீண்ட காலத்திற்குப் பின் நிறுவனங்கள் ஊழியர்களை அலுவலகத்தில் வந்து பணியாற்ற அனுமதிக்கப்படும் காரணத்தால் பல முன்னெச்சரிக்கைகள் உடன் இயங்க முடிவு செய்துள்ளது.
3வது கொரோனா தொற்று அலை
ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைக்கும் நிறுவனங்கள் அனைத்து ஊழியர்களையும் ஓரே நேரத்தில் அழைக்காமல் பகுதி பகுதியாக அலுவலகத்திற்கு வர அழைப்பு விடுத்துள்ளது. இதேவேளையில் இந்தியாவில் 3வது கொரோனா தொற்று அலை வந்துள்ளதால் ஐடி ஊழியர்கள் மத்தியிலும், அவர்களது குடும்பங்கள் மத்தியிலும் கவலை ஏற்படுத்தியுள்ளது.
ஹெச்சிஎல் நிறுவனம்
இந்தச் சூழ்நிலையில் ஹெச்சிஎல் நிறுவனம் திங்கட்கிழமை காலாண்டு முடிவுகளை வெளியிட்ட பின்பு மும்பை பங்குச்சந்தையில் சரிவைப் பதிவு செய்தது மறக்க முடியாது. இந்நிலையில் வீட்டில் பணியாற்றி வரும் ஹெச்சிஎல் ஊழியர்களை அலுவலகத்திற்குத் திரும்பவும் அழைப்பது குறித்துக் கேள்வி எழுந்த நிலையில், இந்நிறுவனத்தின் உயர் அதிகாரி பதில் அளித்துள்ளார்.
விவி அப்பாராவ் அறிவிப்பு
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைமை மனிதவள பிரிவு அதிகாரியான விவி அப்பாராவ் கூறுகையில், தற்போது ஹெச்சிஎல் நிறுவனத்தின் மொத்த ஊழியர்களில் வெறும் 3 சதவீதம் பேர் அலுலவகத்தில் இருந்து பணியாற்றி வரும் நிலையில், வாடிக்கையாளர் நிறுவனத்தின் தேவைகளுக்கு ஏற்ப, இனி வரும் காலத்தில் முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
ஊழியர்களுக்கு வேக்சின்
இதேபோல் விவி அப்பாராவ், தற்போது ஹெச்சிஎல் நிறுவனத்தில் பணியாற்றும் 74 சதவீத ஊழியர்களுக்கு வேக்சின் அளிக்கப்பட்டு உள்ள நிலையில், நடப்பு காலாண்டு முடிவிற்குள் 100 சதவீத ஊழியர்களுக்கு முழுமையாக வேக்சின் அளிக்கப்படும் என அறிவித்துள்ளார்.
டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ
இந்த வருடத்தில் அடுத்த சில மாதத்திலோ அல்லது வருடத்தின் இறுதியிலோ டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ ஆகிய நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைக்க முடிவு செய்து அதற்கான பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
விப்ரோ நிறுவனம்
குறிப்பாக விப்ரோ நிறுவனத்தில் பிற நிறுவனங்களை விடவும் அதிகச் சதவீத ஊழியர்களுக்கு வேக்சின் அளிக்கப்பட்டு உள்ள நிலையில், வருகிற செப்டம்பர் மாதம் முதல் விப்ரோ தனது ஊழியர்களை அலுவலகத்திற்குப் படிப்படியாக அழைக்க முடிவு செய்துள்ளது.
காலாண்டு முடிவுகள்
இந்திய ஐடி நிறுவனங்கள் அடுத்தடுத்து காலாண்டு முடிவுகளை வெளியிட்டு வரும் நிலையில், வேக்சின் போடப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கையும் முக்கியத் தரவாக அறிவித்து வருகிறது.
வேக்சின் நிலவரம்
இதன் படி ஹெச்சிஎல் நிறுவனத்தில் பணியாற்றும் 74 சதவீத ஊழியர்களுக்கு வேக்சின் அளிக்கப்பட்டு உள்ள நிலையில், இன்போசிஸ்-ல் 59 சதவீத ஊழியர்களுக்கும், விப்ரோ-வில் 55 சதவீத ஊழியர்களுக்கும், டிசிஎஸ் நிறுவனத்தின் புதிய மைல்கல்-ஆக விளங்கும் 5 லட்சம் ஊழியர்கள் எண்ணிக்கையில் 70 சதவீத ஊழியர்களுக்கும் குறைந்தபட்சம் ஒரு வேக்சின் டோஸ் போடப்பட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
பென்ஸ் கார் பரிசு
ஹெச்சிஎல் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்நிறுவனத்தில் பணியாற்றும் திறன் மிக்க அதிகாரிகள் தங்கள் வீட்டிற்குப் பென்ஸ் காரை பரிசாகப் பெறும் வாய்ப்பு உள்ளது என்று ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைமை மனிதவள பிரிவு தலைவர் விவி அப்பாராவ் தெரிவித்துள்ளார்.
நிர்வாக ஒப்புதல்
மேலும் திறன் வாய்ந்த ஊழியர்களைத் தக்க வைக்கச் சிறப்புப் பரிசாகப் பென்ஸ் கார் மற்றும் அதிகப்படியான ஊக்கத் தொகை குறித்த திட்டத்தை நிர்வாகத்திடம் சமர்ப்பித்து உள்ளதாக விவி அப்பாராவ் தெரிவித்துள்ளார்.
ஹெச்சிஎல் ஊழியர்கள் மகிழ்ச்சி
இந்தத் திட்டம் விரைவில் ஹெச்சிஎல் நிர்வாகம் ஒப்புதல் அளித்து நடைமுறைப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுவதால் ஹெச்சிஎல் நிறுவன ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2013க்கு பின்பு ஹெச்சிஎல் மீண்டும் தனது ஊழியர்களைப் பென்ஸ் கார் கொடுத்துக் கவர முடிவு செய்துள்ளது.