சென்னை: திமுகவுக்கு என்ன ஆச்சு? திடீரென ஒரு சர்ச்சையில் சிக்கி உள்ளது.. ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்து வரும் ஸ்டாலின், லியோனி விஷயத்தில் சற்று நிதானித்திருக்கலாமோ? என்ற கேள்வி எழுகிறது.
பாடநுால் கழக தலைவராக, திமுக கொள்கை பரப்பு செயலர் லியோனியை நியமித்து, அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த அறிவிப்பு வந்தவுடனேயே பலருக்கும் மகிழ்ச்சிக்கு பதிலாக, அதிர்ச்சிதான் ஏற்பட்டது.
ஆரம்பத்தில் பொதுவான பட்டிமன்ற நடுவராக இருந்தவர் லியோனி.. நாளடைவில் திமுகவுக்கு ஆதரவாகிவிட்டார்.. அதனால் கட்சி முத்திரை இவர் மீது அழுத்தமாகவே விழுந்தது.
திமுக
அதற்கேற்றபடி லியோனியும் திமுக சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளை மட்டுமே நடத்தி வந்தார்.. இந்த முறை பிரச்சாரத்திலும் இறங்கினார்.. கோவையில் இவர் பேசும்போது, முன்பு மாதிரி பெண்கள் வீட்டு வேலைகள் செய்வது கிடையாது.. அதனால் பெண்களின் இடுப்பு பெருத்துவிட்டது என்பதுபோல கருத்து தெரிவித்திருந்தார். லியோனி வழக்கமாக பேசும் பேச்சு இது..
பிரச்சாரம்
எப்போதுமே கிண்டல், கேலியாக பேசுவதைபோலவே அன்றும் பேசினார்… ஆனால், அதை கட்சி பிரச்சாரத்தில் பேசிவிட்டதுதான் விவகாரமாகிவிட்டது.. நிறைய எதிர்ப்புகள், கண்டனங்களை லியோனி சம்பாதித்தார்.. இந்நிலையில்,தான் திமுக இவருக்கு பாடநூல் கழக தலைவராக நியமித்து உத்தரவிட்டது.. இதுவும் பிரச்சனையாகி உள்ளது.. பெண்களின் இடுப்பு மடிப்பு பற்றி பேசியவருக்கு பள்ளி கல்வி பதவியா? என்ற கேள்விகள் வருகின்றன.
ஓபிஎஸ்
இதைதான் ஓபிஎஸ்ஸும் கேள்வி எழுப்பி உள்ளார்.. பட்டிமன்றம் என்ற போர்வையில், பெண்களை இழிவாக பேசுவது, அரசியல் கட்சி தலைவர்களை நா கூசும் வகையில் வசைபாடுவது, நாகரிகமற்ற, தவறான, ஒழுக்கமற்ற கருத்துகளை, மக்கள் மனங்களில் விதைக்க முயற்சி செய்வதை, வாடிக்கையாகக் கொண்டவர் லியோனி.. இவரை இந்த பதவியில் நியமிப்பதன் வழியே, தவறான கருத்துகள், மாணவ – மாணவியரிடம் எடுத்து செல்லப்படுவதோடு, அவர்களின் எதிர்காலம் வெகுவாக பாதிக்கப் படும்… அதனால், இந்த நியமனத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும். பெண்களை மதிக்கிற ஒருவரை தலைவராக நியமிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
அறிக்கை
ஓபிஎஸ் இப்படி அறிக்கை வெளியிட்டதும், இது திமுகவுக்கு மேலும் சிக்கலை தந்துள்ளது.. தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் என்பது மிக முக்கியமான துறை.. பள்ளிகளுக்கு பாட புத்தகங்களை தயாரித்து, அச்சிட்டு விநியோகம் செய்து வருவது இந்த துறைதான்.. இந்த கழகம் மூலம், அச்சிடப்படும் பாடநூல்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு இலவசமாகவும், தனியார் பள்ளிகளுக்கு அரசு நிர்ணயிக்கும் கட்டணத்திலும் வழங்கப்படுகின்றன.
கல்வியாளர்கள் ஆனால், இதற்கு மிக மிக பொருத்தமானவர்களை அரசுகள் பெரும்பாலும் நியமிப்பதில்லை.. எத்தனையோ கல்வியாளர்கள் இருக்கிறார்கள்.. எத்தனையோ பட்டறிவு பெற்ற பெரியவர்கள் இருக்கிறார்கள்.. ஆனால், கடந்த ஆட்சியில் வளர்மதியை நியமித்தது.. வளர்மதி அமைச்சராக இருந்தவர்.. அதுவும் குறிப்பிட்ட துறையில் மட்டுமே அமைச்சராக இருந்தவர்.. இவரை எந்த “கல்வி” அடிப்படையில் அன்றைய அதிமுக அரசு அந்த பதவியில் நியமித்தது என்று இப்போதுவரை தெரியவில்லை. ஆனால், இன்று திமுகவை ஓபிஎஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.
ஸ்டாலின்
அதுபோலவே, திமுகவிலும் எத்தனையோ கல்வியாளர்கள் உள்ளனர்.. தமிழ்நாடு அரசின் திட்டக்குழுவில் இடம்பெற்றிருந்தவர்களை கண்டு பலரும் ஆச்சரியப்பட்டனர்.. அந்த அளவுக்கு அனைவருமே பொருத்தமான, அனைத்து தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளக்கூடியவர்களாக அந்த குழு தேர்ந்தெடுக்கப்பட்டது.. ஆனால், லியோனிக்கு ஏற்கனவே எதிர்ப்புகள், சர்ச்சைகள் மக்கள் மத்தியில் இருக்கிறது என்று தெரிந்தும், ஏன் இந்த பதவியை திமுக வழங்கியது என்பது தெரியவில்லை.
என்ன காரணம்?
வேறு தகுதியானவர்கள் யாரையாவது நியமித்திருக்கலாம்.. லியோனி நன்கு படித்தவர்.. மதிப்புமிக்க ஆசிரியர் தொழிலை செய்து வந்தவர்.. பள்ளி மாணவர்களின் தேவைகளை நன்கு அறிந்தவர்.. லியோனிக்கு அந்த தகுதி இருக்கிறதுதான்.. ஆனால், சர்ச்சைக்குரியவர் என்பதால் இப்போதைக்கு அவரை தவிர்த்திருக்கலாமே என்பதுதான் நமது எண்ணம்.. மற்றபடி தனிப்பட்ட முறையிலோ, தகுதி அடிப்படையிலோ, லியோனியை முற்றிலும் குறை சொல்லிவிட முடியாது.
முதல்வர்
அதுமட்டுமல்ல, ஆட்சி ஆரம்பித்து இந்த 2 மாதமாகவே, ஒவ்வொன்றையும் ஸ்டாலின் பார்த்து பார்த்து செய்கிறார்.. பல தரப்பட்டவர்களின் அபிமானத்தை பெற்று வருகிறார்.. ஆட்சிக்கும் நல்ல பெயர் வந்து கொண்டிருக்கிறது.. அப்படி இருக்கும்போது, லியோனி விஷயத்தில் சற்று யோசித்திருக்கலாம்.. தொடர்ந்து சிக்ஸர்களாகவே அடித்து வந்த திமுக அரசு, இப்படி ரன் அவுட் ஆவது போல இந்த செயல் அமைந்துவிட்டது என்றே சொல்ல வேண்டும்…!