புதுச்சேரி : புதுச்சேரியில் அடுத்த மாதம் நடக்கவிருக்கும் வேலை வாய்ப்பு முகாமினை புதுச்சேரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் வேலைவாய்ப்பு முகாம் கையேடு வெளியிடும் நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில் துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி, கல்வி அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு முகாம் கையேட்டினை வெளியிட்டனர். இதனை தொடர்ந்து நிகழ்வில் பேசிய ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், நிபுனா & சேவா இன்டர்நேஷனல் சார்பில் 4 இளைஞர்கள் சேர்ந்து ஹைதராபாத்தில் மிகச்சிறப்பான ஒரு வேலைவாய்ப்பு முகாமிமை நடத்தினார்கள் என்றும்,
இந்த வேலைவாய்ப்பு முகமினை அவர்கள் கடந்த மாதமே புதுச்சேரியில் நடத்த தயாராக இருந்த போதில் கொரோனா உச்சத்தில் இருந்ததால் முகாம் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டதால் வருகின்ற மார்ச் 5, 6 ஆகிய தேதிகளில் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் இந்த மெகா வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படவுள்ளது. இந்த முகாமில் பங்கேற்கும் 100 நிறுவனங்கள் மிகவும் பிரபலமானவை ஆகும், இந்த வாய்பினை புதுச்சேரி மாணவர்கள், இளைஞர்கள் நிச்சயமாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என தமிழிசை சௌந்தரராஜன் கேட்டுகொண்டார்.