கோவை: முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு தொடர்புள்ள இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் நடத்திய சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியிருக்கிறார்.
வேலுமணி தொடர்பான இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டதற்கு அதிமுக தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்ட நிலையில், கூட்டணியில் உள்ள பாஜகவை சேர்ந்த எம்எல்ஏ ஒருவர் கண்டனம் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
வானதி சீனிவாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வானதி சீனிவாசன் அறிக்கை
முன்னாள் அமைச்சர் திரு.S.P வேலுமணி அவர்களுக்கு எதிரான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. தமிழகத்தில் கடந்த அதிமுக அரசாங்கத்தில் அந்த ஆட்சியை காப்பாற்றுகின்ற ஒரு மிகப்பெரிய பொறுப்பினையும் அதேசமயம் கொங்கு மண்டலப் பகுதிக்கு மிக அதிகமான திட்டங்களை கொண்டு வருவதற்காக பல்வேறு திட்டங்களில் முன்னெடுப்பும் செய்திருக்கின்ற திரு.எஸ்.பி வேலுமணி அவர்கள் மீது மிகுந்த அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு திராவிட முன்னேற்றக் கழகம் செயல்பட்டு வந்தது.

அரசியல் வாழ்க்கையை முடிப்போம்
குறிப்பாக, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் இன்றைய முதல்வருமான திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் திரு.எஸ்.பி.வேலுமணி அவர்கள் மீது தனிப்பட்ட முறையிலேயே மிகுந்த காழ்ப்புணர்ச்சி கொண்டிருந்தார். தேர்தலுக்கு முன்பாகவே நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதலில் திரு.எஸ்.பி.வேலுமணி அவருடைய அரசியல் வாழ்க்கையை முடிப்போம் என்கின்ற மாதிரியான பல்வேறு விஷயங்களை மக்கள் முன்பாக பிரச்சாரத்தின்போது பேசி வந்தார்கள்.

புகாரை ஏற்பாடு செய்துள்ளார்கள்
அதற்குப் பின்பாக தேர்தலில் இந்த கொங்கு மண்டலத்தில் ஒரு தொகுதி கூட திராவிட முன்னேற்றக் கழகம் பெற முடியாத நிலை ஏற்பட்டதற்கு திரு.எஸ்.பி.வேலுமணி தான் மிக முக்கிய காரணம் என திராவிட முன்னேற்றக் கழகத்தின் இன்றைய முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், அவர் மீது கொண்டிருந்த வன்மத்தின் காரணமாக அவர் மீது ஒரு புகார் ஒன்று ஒருவரால் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டு அவருடைய வீட்டில் ரெய்டு மற்றும் தொடர்ச்சியான நடவடிக்கை என்பது முழுக்க முழுக்க அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு வரக்கூடிய நடவடிக்கையாகும்.

பழி வாங்கும் நடவடிக்கை
தேர்தலில் வருகின்ற வெற்றி தோல்விகளை என்றுமே நிரந்தரமாக்க முடியாது. இதை வைத்துக்கொண்டு அரசியல் எதிரிகளை பழி வாங்குகின்ற இந்த நடவடிக்கையை நான் வன்மையாக கண்டிக்கிறேன். வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் அந்த வெற்றிக்கு மிகப் பெரிய தடையாக இருப்பவர் திரு.எஸ்.பி.வேலுமணி என்கின்ற காரணத்தினால் அவரை மனரீதியான உறுதியை குலைப்பதற்காகவும் அவருக்கு தொடர்பு உடைய இருக்கிறவர்களின் இடங்களை எல்லாம் சோதனை செய்வதின் வாயிலாக அவருடைய சுற்றுவட்டாரத்தை அச்சுறுத்துவதற்காகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக நாங்கள் நம்புகிறோம். இம்மாதிரி அரசியல் எதிரிகளை பழிவாங்கும் இந்த நடவடிக்கையை திராவிட முன்னேற்றக் கழகம் நிறுத்திக்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

அதிமுக கூட்டணி கட்சி
கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றது. கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் வானதி சீனிவாசன் வெற்றி பெறுவதற்கு அதிமுகவினர் உழைப்பும் ஒரு முக்கியமான காரணம் என்று கூறப்பட்டது. எனவே கோவை மண்டல அதிமுகவில், கோலோச்சி வரும் முன்னாள் அமைச்சரான வேலுமணிக்கு, வானதி சீனிவாசன் வெளிப்படையாக தனது ஆதரவை தெரிவித்து உள்ளார் என்பதை இந்த அறிக்கை மூலம் பார்க்க முடிகிறது.

நெட்டிசன்கள் சரமாரி கேள்வி
இதனிடையே வானதி சீனிவாசன் ட்விட்டர் பக்கத்தில் இந்த அறிக்கையை ஷேர் செய்ததால் அதன் பின்னூட்டத்தில் நெட்டிசன்கள் பலரும் அவருக்கு சரமாரியாக கேள்விகளை எழுப்புகிறார்கள். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிலும், ஏன் தலைமைச் செயலகத்தில் கூட வருமான வரிச் சோதனைகள் நடத்தப்பட்டன. டிடிவி தினகரன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது. இதெல்லாம் எதற்காக செய்தீர்கள், இப்போது நடைபெறும் சோதனைக்கு மட்டும் கண்டனம் எதற்கு என்று கேள்வி எழுப்புவதை பார்க்கமுடிகிறது.

ஸ்டாலின் மகள் வீட்டில் ரெய்டு
அசார் என்ற இன்னொரு நெட்டிசன், 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாதபோதும் திமுக தலைவர் ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டில் வருமான வரித்துறை சமீபத்தில் சோதனை நடத்தியது. ஆனால் 10 ஆண்டுகளாக ஆட்சியில் அமைச்சராக இருந்த ஒருவர் மீது ஊழல் குற்றச்சாட்டு வந்தபோது, சோதனை நடத்துவது மட்டும் குற்றம் அல்லது பழிவாங்கும் நடவடிக்கை என்று எப்படி சொல்லலாம் என்று கேள்வி எழுப்புகிறார்.

ஊழல் எதிர்ப்பு கட்சி
இளங்கோ ராஜா என்ற நெட்டிசன், நீங்கள் ஊழல் எதிர்ப்பு கட்சி என்று உங்களை முன் நிறுத்தினீர்கள். ஆனால் ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக, ஒருவர் வீட்டில் சோதனை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறீர்கள். இப்படி நடந்துகொண்டால் தாமரை எப்படி மலரும் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

மக்கள் வரிப்பணம்
நெட்டிசன் அசார் மற்றொரு டுவிட்டர் பதிவில், ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் தலா 2 லட்சத்து 60 ஆயிரம் கடன் ஏத்தி விட்டு விட்டு மக்கள் வரிப்பணத்தை சுரண்டினால் அதை கண்டுபிடிக்க சோதனைகள் நடத்தத்தான் செய்வார்கள். அந்த நடவடிக்கையை மக்கள் வரவேற்கத்தான் செய்வார்கள். உங்களைப் போன்றவர்களுக்கு மட்டும்தான் அது பழிவாங்கும் நடவடிக்கையாக தெரியும், என்று விமர்சனம் செய்துள்ளார்.