டெல்லி: கொரோனா தடுப்பூசியின் ஒரு டோஸ் 82%, இரண்டு டோஸ்கள் 95% வரையும் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுப்பது ஐசிஎம்ஆர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
உலகின் அனைத்து நாடுகளிலும் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராகத் தடுப்பூசிகளே ஒரே ஆயுதமாகப் பார்க்கப்படுகிறது. பொதுமக்களுக்கு விரைவாகத் தடுப்பூசிகளைச் செலுத்துவதன் மூலமே வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியும்.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களும் இதையே வலியுறுத்துகின்றனர். இந்நிலையில், தடுப்பூசிகள் கொரோனா உயிரிழப்புகளை எந்தளவு தடுக்கிறது என்பது குறித்த ஆய்வு முடிவை ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசிகள்
இந்தியாவில் தற்போது 18+ அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது நாட்டில் கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகளே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இரண்டு தடுப்பூசிகளுமே உயிரிழப்பைக் குறைப்பதாக ஐசிஎம்ஆர் குறிப்பிட்டுள்ளது.
ஐசிஎம்ஆர்
ஐசிஎம்ஆர்-இன் இந்த ஆய்வு முடிவுகள் கடந்த ஜூன் 21ஆம் தேதி வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் கொரோனா வேக்சின் ஒரு டோஸ் எடுத்துக் கொண்டவர்கள் கொரோனாால் உயிரிழக்கும் அபாயம் 82%, இரண்டு டோஸ் எடுத்துக் கொண்டவர்கள் உயிரிழக்கும் அபாயம் 95% வரை குறைவது தெரியவந்துள்ளது.
தமிழ்நாடு போலீஸ்
அதாவது தமிழ்நாடு போலீஸ் தரப்பில் தடுப்பூசி எடுத்துக் கொண்ட காவலர்கள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு வந்தன. அதில் கடந்த பிப்ரவரி முதல் மே 14 வரை 32,792 பேருக்குத் தடுப்பூசியின் ஒரு டோஸ் செலுத்தப்பட்டது. அதேபோல 67,673 பேருக்கு இரண்டு டோஸ்களும் போடப்பட்டன.
உயிரிழப்புகள்
அதேபோல 17059 பேர் தடுப்பூசிகளை எடுத்துக் கொள்ளாமல் இருந்தனர். அதன் பின்னர் 31 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 20 பேர் தடுப்பூசியை போட்டுக் கொள்ளாதவர்கள், ஏழு பேர் ஒரு டோஸ் எடுத்துக் கொண்டவர்கள். தடுப்பூசியின் 2 டோஸ்களையும் எடுத்துக் கொண்டவர்களில் நான்கு பேர் மட்டுமே கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
தடுப்பூசிகள்
இது குறித்து ஐ.சி.எம்.ஆர்-என்ஐஇ இயக்குநர் டாக்டர் மனோஜ் முர்ஹேகர் கூறுகையில், ஆக்ஸ்போர்ட் தடுப்பூசி தீவிர கொரோனா பாதிப்பைத் தடுக்கிறது. இந்தத் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் கொரோனாவால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவது 97.5% வரை குறைகிறது. அதேபோல உயிரிழப்புகளும் 95% வரை தடுக்கப்படுகிறது. பல்வேறு நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்விலும் தீவிர பாதிப்பை தடுப்பூசிகள் குறைப்பது மிகத் தெளிவாக தெரிகிறது” என்றார்.