சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் விஜய் குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார் இசையமைப்பாளர் கங்கை அமரன்.
நடிகர் விஜய்யின் 65-வது படமான ’பீஸ்ட்’ திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ளார். படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய்யின் ’சர்கார்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
தளபதி 65 என்றழைக்கப்பட்டு வந்த பீஸ்ட் படத்தின் டைட்டிலும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் கடந்த வருடம் ஜூன் மாதம் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது. இதையடுத்து பீஸ்ட் படத்தின் 100-வது நாள் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் இறுதி நாள் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகியவை வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.
காதலர் தினத்தை முன்னிட்டு பீஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான அரபிக் குத்து என்ற பாடல் வெளியாகி, பட்டிதொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. தற்போது இந்தப் பாடல் யூ-ட்யூபில் 120 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் இசை வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய இசையமைப்பாளர் கங்கை அமரன், ’விஜய் தனது அப்பா, அம்மாவை தள்ளி வைத்தது வேதனையாக இருந்தது. நாங்களெல்லாம் அப்போது எஸ்.ஏ.சந்திரசேகரின் நாடகத்திற்கு வாசித்தவர்கள். நான் ஓபனாக சொல்கிறேன், எனக்கு ஒன்னும் பயமில்லை. நாங்களெல்லாம் பெரியவர்கள் விமர்சனங்களை சொல்லத்தான் செய்வோம்.
எஸ்.ஏ.சந்திர சேகரின் நாடகத்திற்கு வாசித்த போது விஜய் குழந்தை. அப்போதெல்லாம் நாங்கள் அவரை கொஞ்சிவிட்டு போவோம். அவர்கள் விஜய்யை எப்படி வளர்த்தார்கள் என்பதை பக்கத்தில் இருந்து பார்த்ததால், எனக்கு அந்த செய்தியை கேட்டதும் அவ்வளவு எரிச்சலாக இருந்தது. ஆகையால் ரசிகர்கள் அனைவரும் அவரிடம் எடுத்துச் சொல்லுங்கள்’ எனக் கூறியுள்ளார்.