Phone/WhatsApp : +91 72000 33317

Reg.No. TN-02-0040998

வரி வசூலிக்காத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க தாமதமானால் ஏற்றுக் கொள்வார்களா? – நீதிபதி சுளீர்

358322-justice-smsubramaniam

சென்னை: பெரும் தொழிலதிபர்களிடம் வரியை வசூலிக்காத அதிகாரிகளுக்கு 4 நாட்கள் காலதாமதமாக அரசு ஊதியம் வழங்கினால் ஏற்றுக் கொள்வார்களா? என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் சாட்டையடி கேள்வியை எழுப்பியுள்ளார். ஆகஸ்ட் 13ஆம் தேதி வெள்ளிக்கிழமைக்குள் சொகுசு கார் நுழைவு வரி தொடர்பாக நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளின் எண்களை வணிக வரித்துறை கமிஷனர் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

நடிகர்கள் விஜய், தனுஷ் ஆகியோரை போல தமிழகத்தை சேர்ந்த ஏராளமான தொழிலதிபர்கள் வெளிநாட்டில் இருந்து சொகுசு கார்களை இறக்குமதி செய்துள்ளனர். அவர்களும், காருக்கு விதிக்கப்பட்ட நுழைவு வரியை எதிர்த்து வழக்கு தொடர்ந்து, அவை நிலுவையில் இருந்து வருகின்றன.

இதில் சில வழக்குகள் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வணிக வரித்துறை அதிகாரி ஆஜரானார். அவரிடம் நீதிபதி, வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு கார்களுக்கு ஏராளமானோர் நுழைவு வரி செலுத்தாமல், உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை தொடர்ந்துள்ளனர். அப்படி எத்தனை வழக்குகள் தொடரப்பட்டுள்ளன? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு அந்த பெண் அதிகாரி, ஆலந்தூர் உதவி ஆணையர் அதிகாரத்துக்கு உட்பட்டதில் 2 வழக்குகள் மட்டுமே உள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து அரசு தரப்பு வழக்கறிஞரிடம், பெரிய பெரிய பணக்காரர்கள் எல்லாம் வெளிநாட்டு சொகுசு கார்களை வாங்கிக் கொண்டு நுழைவு வரியை செலுத்தாமல், வழக்கு தொடர்ந்துள்ளனர், இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் 2018ஆம் ஆண்டே தள்ளுபடி செய்யப்பட்டு விட்டபோதும், வரியை வசூலிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என சாடினார்.

தமிழ்நாடு நிதி அமைச்சர் கூட வெள்ளை அறிக்கை வெளியிட்டு, அதிகாரிகள் ஒழுங்காக வரியை வசூலிக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளதாக நீதிபதி தெரிவித்தார். வரியை வசூலிக்காமல் இழுத்து அடித்து அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டு எத்தனை அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுத்தது என கேள்வி எழுப்பினார்.

வணிக வரித்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால், அரசுக்கு காலதாமதமாக வருவாய் வருகிறது. ஆனால் அதிகாரிகளுக்கு மாதத்தின் கடைசி நாளில் அரசு சரியாக ஊதியம் வழங்குகிறது. சரியாக வரி வசூலிக்காத அதிகாரிகளுக்கு 4 நாட்கள் காலதாமதமாக அரசு ஊதியம் வழங்கினால் ஏற்றுக் கொள்வார்களா? வரி வசூலிக்கும் பணியில் உள்ள அதிகாரிகள் முறையாக வரி வசூலிக்கவில்லை என்றால், அரசை நடத்த முடியாது எனவும் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கூறியுள்ளார்.

வரி வசூலிக்காத அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்த நீதிபதி, ஆகஸ்ட் 13ஆம் தேதி வெள்ளிக்கிழமைக்குள் சொகுசு கார் நுழைவு வரி தொடர்பாக நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளின் எண்களை வணிக வரித்துறை கமிஷனர் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். அந்த வழக்குகள் அனைத்திலும் ஆகஸ்ட் 16ஆம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என்றும் நீதிபதி அதிரடியாக அறிவித்துள்ளார்.

இறக்குமதி வாகனங்களுக்கு நுழைவு வரி விதிக்க தடை விதித்து கேரள உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. கேரள உயர் நீதிமன்றத்தில் உத்தரவை எதிர்த்த வழக்கில் உச்ச நீதிமன்றம், நுழைவு வரி வசூலிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளதாக 2019ல் தீர்ப்பளித்தது.

நடிகர்கள் விஜய், தனுஷ் ஆகியோர் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்த சொகுசு காருக்கு வரி விலக்கு கேட்டு தொடர்ந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் தெரிவித்த கருத்துகள் ஊடங்களில் பேசுபொருளானது. உச்ச நீதிமன்றம் தீர்ப்பிற்கு பிறகும், இதுவரை செலுத்தாத நிலையில் வாபஸ் பெற அனுமதிக்க முடியாது எனவும் கூறிய நீதிபதி மக்கள் வரிப்பணத்தில் போடும் சாலையை பயன்படுத்தும்போது வரியை செலுத்த வேண்டியதுதானே எனவும் கண்டிப்பாக தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

Share on facebook
Facebook
Share on google
Google+
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on whatsapp
WhatsApp