சென்னை: நேற்று முதல் தமிழக அரசியலில் ஒருவித பரபரப்பு தொற்றி கொண்டுள்ளது.. அதேசமயம், ரெய்டுக்கு முன்னரே மாஜி அமைச்சர் வேலுமணி அதற்கு தயாரானதாக சில செய்திகளும் கசிந்து வருகின்றன.
2 மாதத்துக்கு முன்பே எதிர்பார்க்கப்பட்ட ஊழல் குற்றம் சாட்டப்பட்ட மாஜி அமைச்சர்களின் மீதான நடவடிக்கைகள் இப்போதுதான் ஆரம்பமாகி உள்ளன.. அந்த வகையில் எம்ஆர் விஜயபாஸ்கர், அடுத்து வேலுமணி என ரெய்டுகள் நடக்கின்றன.
இதில் எஸ்பி வேலுமணியிடம் திமுக ரெய்டு நடத்தப்படுமா? அல்லது பின்வாங்குமா? என்ற கேள்வி எழுந்தது.. அதுமட்டுமல்ல, வேலுமணியை தொட முடியாததால்தான், எம்ஆர் விஜயபாஸ்கரிடம் ரெய்டு நடத்தி ஒரு எச்சரிக்கை தருவதாககூட பேசப்பட்டது..
பேட்டி
அவ்வளவு ஏன்… கடந்த வாரம் மூத்த தலைவர் கேசி பழனிசாமி, ஒரு தனியார் டிவிக்கு பேட்டி தந்திருந்தார்.. அதில், “ஓபிஎஸ்ஸூம், எடப்பாடியும், சில முக்கிய மாஜிக்களும், திமுகவுடன் டீல் செய்யவும் தயங்க மாட்டார்கள், இவர்கள் மீது உடனே நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும்.. இந்த டிசம்பருக்குள், விசாரணை எடுக்கப்படாவிட்டால், திமுகவும் இந்த ஊழல்களுக்கு துணை போன மாதிரியே கணக்கில் எடுத்து கொள்ளப்படும்” என்று தெரிவித்திருந்தார்..
ரெய்டு
அதனால், இந்த ரெய்டு நடவடிக்கைகளில் எக்காரணம் கொண்டும் காலதாமதம் ஆகிவிடக்கூடாது என்பதில் திமுக கவனமாக இருந்து வந்தது. அந்த வகையில்தான், பட்ஜெட் கூட்டத்தொடரையும் கணக்கில் எடுக்காமல் ரெய்டை ஆரம்பித்தது.. இந்த ரெயிடு நடத்துவது நேற்று முன்தினமே முடிவான ஒன்று என்கிறார்கள்.. அதனால்தான், எம்எல்ஏ ஹாஸ்டலில் வேலுமணி இருப்பதை அன்றைய தினமே உறுதிப்படுத்திக்கொண்டு லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் நேற்று காலையிலேயே அதாவது 6 மணிக்கே சென்னை எம்எல்ஏ ஹாஸ்டல் சென்றுள்ளனர்.
வெள்ளைக் கொடி
ஆனால், வேலுமணியோ கடந்த 10 நாட்களுக்கு முன்பிருந்தே இதற்கு தயாராகிவிட்டார்.. வெள்ளைக்கொடிக்கும் திமுக மேலிடத்தில் எடுபடாத நிலையில், கடந்த சில வாரங்களாகவே வேலுமணி, வக்கீல் அணி துணையுடன் தான் வலம் வந்துள்ளார்.. அதுமட்டுமல்ல, கோவை அதிமுக தலைமை அலுவலக வளாகத்தில் வழக்கறிஞர் அணிக்கு என்றே ஸ்பெஷலாக ஒரு ஆபீஸ் திறந்தும் தந்துள்ளார்..
ஆலோசனை
அடிக்கடி இங்கு வந்து அந்த டீமுடன் ஆலோசனையும் நடத்தியபடியே இருந்திருக்கிறார்.. இதெல்லாம் எதற்காகவென்றால், எப்போது வேண்டுமானாலும் திமுக தன் மீது ரெய்டு நடத்தும் என்று வேலுமணி அலர்ட் ஆகவே இருந்தாராம். அதனால்தான், எம்ஆர் விஜயபாஸ்கரிடம் ரெய்டு நடத்தப்பட்டபோது, “‘நான் தான் முதலில் குறிவைக்கப்படுவேன் என்று எதிர்பார்த்தேன்” என்றார் வேலுமணி.
போன்
நேற்று முன்தினம் இரவு வேலுமணிக்கு ஒரு போன் வந்ததாம்.. அப்போது வேலுமணி எம்எல்ஏ ஹாஸ்டலில் தங்கவில்லை.. சென்னை எம்ஆர்சி நகரில், வேலுமணியின் சகோதரர் அன்பரசனுக்கு சொந்தமாக சொகுசு பங்களாவில்தான் கடந்த 9-ம் தேதி இரவு வேலுமணி தங்கியிருந்தார்… அப்போதுதான் அந்த போன் வந்துள்ளது.. ஆனால், அதில் யார் பேசினார்கள் என்று தெரியவில்லை.
ரெய்டு
அவர்தான், விடிந்ததும் ரெய்டு நடக்க போகிறது என்ற தகவலை வேலுமணிக்கு சொல்லி உள்ளார்.. தன்னை திமுக குறி வைக்கும் என்பதை உறுதியாக வேலுமணி எதிர்பார்த்து இருந்தாலும், அந்த போன் தகவலை கேட்டு நிஜமாகவே அதிர்ச்சி அடைந்துவிட்டாராம்.. முதல் கேள்வியே, ரெய்டா? எப்ஐஆர் போட்டுட்டாங்களா? பட்ஜெட் நடக்க போகுதே? எப்படி ரெய்டு பண்ணுவாங்க? அதுவும் அத்தனை இடங்களிலும்? என்றுதான் கேட்டுள்ளார்.
ஆர்ப்பாட்டம்
இதற்கு பிறகு ரெய்டு கண்டிப்பாக நடக்கும் என்பது தெரிந்ததும்தான் டென்ஷன் எகிறி உள்ளது.. உடனடியாக கோவையில் ஒருசிலருக்கு போன் செய்து பேசியுள்ளாராம்.. காலையில் கோவை வீட்டுக்கு ரெய்டு வரும்போது, ஆயிரக்கணக்கான அதிமுகவினர் திரண்டு தன் வீட்டு முன்பு நின்று இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.. இதையடுத்துதான், வேலுமணி வீட்டு முன்பு அதிமுகவினர் நேற்றைய தினம் திரண்டு, சாப்பிட்டுக் கொண்டே ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளதாக தெரிகிறது.
ஆதாரங்கள்
என்னதான் வேலுமணி தரப்பு அலர்ட் ஆனாலும், அறப்போர் இயக்கம் அளித்திருந்த புகாரின் பேரில் சேகரிக்கப்பட்ட ஆவணங்கள் உள்ளிட்ட முக்கிய ஆதாரங்கள் லஞ்ச ஒழிப்புத்துறை வசம் ஏற்கெனவே இருந்ததால்தான், துணிச்சலாக ரெய்டில் இறங்கினார்களாம்..
விசாரணை
ஏற்கனவே உள்ள இந்த ஆதாரங்கள், இதைதவிர நேற்றைய தினம் கைப்பற்றப்பட்ட சில டாக்குமென்ட்டுகள், ஹார்டு டிஸ்க்குகள் போன்றவைகளை வைத்து இனி விசாரணை நடக்கும் என்று தெரிகிறது.. இது தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கமளிக்கும்படி நோட்டீஸ் அளிக்கப்படலாம் என்றும் அப்போது தேவைப்பட்டால் கைது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் சில தகவல்கள் கூறுகின்றன.