சென்னை: திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலைய கவுன்டரில் இருந்து ரூ.1.32 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்துவிட்டு நாடகமாடிய ஊழியர் டிக்காராம் மற்றும் அவரது மனைவியை தற்போது போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை திருவான்மியூர் ரெயில் நிலையத்தில் நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் பயணிகள் சிலர் டிக்கெட் எடுப்பதற்காக தரை தளத்தில் உள்ள டிக்கெட் கவுண்ட்டரில் வரிசையில் காத்திருந்தனர். தினசரி அதிகாலை 4 மணிக்கே திறக்கப்படும் டிக்கெட் கவுண்ட்டர் நேற்று திறக்கப்படாமல் கதவு வெளிப்புறமாக பூட்டப்பட்டு இருந்ததால் சந்தேகம் அடைந்த பயணிகள், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ரெயில்வே போலீசாரிடம் இதுபற்றி கேட்டனர். உடனே அங்கு வந்த ரயில்வே போலீசார், வெளியே பூட்டப்பட்டிருந்த கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, டிக்கெட் கவுண்ட்டர் உள்ளே ஊழியர் ஒருவர், அங்கிருந்த ஜன்னலில் கை, கால்களை பின்னால் கட்டப்பட்டு, வாயில் துணி வைத்து திணிக்கப்பட்ட நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவரது வாயில் இருந்த துணியை எடுத்து விட்டு கை, கால் கட்டுகளை அவிழ்த்த ரயில்வே போலீசார், இதுபற்றி அவரிடம் விசாரித்தனர்.
அப்போது,அவர் டிக்கெட் கவுன்டர் ஊழியர் டிக்காராம்மனைவி மீனா என்பது தெரிய வந்தது. உடனே அவரது வீட்டிற்கு சென்று அவரது மனைவியை பிடித்து போலீசார் விசாரிக்கும்போது தான்,தனது மனைவியுடன் சேர்ந்து டிக்கெட் கவுண்டர் ஊழியர் டிக்காராம் கொள்ளை நாடகம் ஆடியது போலீசார் விசாரணையில் அம்பலமாகியது. இதன்காரணமாக, கொள்ளையடித்துவிட்டு நாடகமாடிய ஊழியர் டிக்காராம் மற்றும் அவரது மனைவியை தற்போது போலீசார் கைது செய்துள்ளனர். மேலும்,கொள்ளைப்போன ரூ.1.32 லட்சம் ரொக்கத்தை அவர்களிடமிருந்து போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து,இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.குறிப்பாக,இந்த கொள்ளை சம்பவத்தில் வேறு யாரேனும் அவர்களுடன் தொடர்பில் உள்ளார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.