இன்றைய நெருக்கடியான காலகட்டத்திலும் தொய்வில்லாமல் இந்தியா முழுவதும், லாபம் அள்ளி கொடுத்துக் கொண்டிருக்கும் ஒரே துறை. மது பான விற்பனை தான்.
குறிப்பாக தமிழ் நாடு, உத்தரபிரதேசம் என பாகுபாடின்றி, கிராமப்புறம், நகர்புறம் என எல்லா பகுதிகளிலும் விற்பனை களை கட்டியுள்ளது.
இன்றைய காலகட்டத்தில் அரசின் மிக முக்கியமான வருவாய் ஆப்சனாக இருப்பது டாஸ் மார்க்குகளே.
வருமானம் அதிகரிப்பு
இது குறித்து வெளியான பிசினஸ் டுடே அறிக்கையில், கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும், உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி அரசின் கீழ், 2076 ஓயின் ஷாப்புகளுக்கு புதியதாக அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதாக RTI மூலம் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மது மூலம் மட்டும் யோகி அரசின் வருவாய் 74% அதிகரித்துள்ளதாக தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.
வரி & லைசென்ஸ் கட்டணம்
குறிப்பாக மதுபானங்கள் மீதான கலால் வரியின் மூலம் மட்டும் சுமார் 10% வருமானம் கிடைத்துள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன. குறிப்பாக 2020 – 21ம் நிதியாண்டில் கலால் வரி மற்றும் லைசென்ஸ் கட்டணம் மூலமாக 30,061 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது.
ஒரு ஒயின்ஷாப்பின் வருமானம்
கடந்த 4 ஆண்டுகளில் மட்டும், அதாவது 2017 – 2021 வரையிலான காலகட்டத்தில் மட்டும் மதுபானத்தின் மூலம் கிடைத்த வருவாய், 17,320 கோடி ரூபாயில் இருந்து, 30,061 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. சராசரியாக ஒவ்வொரு மதுபான கடையும் ஆண்டுக்கு 1.10 கோடி ரூபாய் வருவாயினை அரசுக்கு வழங்கியுள்ளன.
புதிய மதுபான கடைகளுக்கு உரிமம்
மேற்கண்ட புதிய தாக உரிமம் கொடுக்கப்பட்ட 2076 மதுபான கடைகளும், நான்கு வகையான விற்பனை வகையறாக்கள் மூலம் கொடுக்கப்பட்டுள்ளன. ஒன்று இந்திய மதுபானம், வெளி நாட்டு மதுபானம், பீர் கடைகள் மற்றும் மாடல் கடைகள் என நான்கு வகையில் உள்ளன.
அகிலேஷ் யாதவ் ஆட்சியில் எவ்வளவு உரிமம்
இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில், உத்தர பிரதேசின் அகிலேஷ் யாதவ் தலைமையிலான முந்தைய அரசு, ஐந்தாண்டு காலப்பகுதியில், 2013 – 2017ம் நிதியாண்டிற்கான காலகட்டங்களில் 2,566 புதிய மதுபான கடைகளுக்கு உரிமம் அளித்துள்ளது. அந்த சமயத்தில் மாநில அரசின் வருவாயானது 22,377 கோடி ரூபாயில் இருந்து, 24,943 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது 11.5% அதிகமாகும்.
அரசின்
இவர்களுக்கு முன்னோடியானது பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி (2007 – 2012) ஆட்சியில், 2008ம் நிதியாண்டில் 17,287 கடைகள் இருந்த நிலையில், 2012ல் 20,908 கடைகளாக அதிகரித்துள்ளார். மொத்தத்தில் அரசின் வருவாய் 106% அதிகரித்து, 8,139 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
எந்த ஆட்சியில் எவ்வளவு கடைகள் திறப்பு?
சராசரியாக யோகி மற்றும் அகிலேஷ் அரசாங்கங்கள், அந்தந்த பதவி காலத்தில், ஆண்டுக்கு தலா 500 மதுபான கடைகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. இதே மாயாவதி ஆட்சியின் போது சராசரியாக ஆண்டுக்கு 724 உரிமங்கள் வரை பெறப்பட்டுள்ளன.
மது மூலம் அரசின் வருவாய்
கடந்த ஒன்றரை தசாப்தத்தில் அரசாங்க வருவாய் 269% அதிகரித்துள்ளது. இது கடந்த 2011 – 12ல் 8,139 கோடி ரூபாயில் இருந்து, 2020 – 21ல் 30,061 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. மொத்தத்தில் அரசின் வருவாய் என்பது வருடத்திற்கு வருடம் அதிகரித்து தான் வருகின்றது. ஆனால் சமானிய மக்களின் வருவாயில், கணிசமான தொகை மதுவிற்காக செலவிடப்படுவது வேதனைக்குரிய விஷயமாகவே உள்ளது.