சென்னை: பென்னிகுவிக் வாழ்ந்த இடத்தில் கருணாநிதி நூலகம் அமைய உள்ளதாக தவறான தகவல் பரப்பப்படுவதாக சட்டசபையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
அதிமுக எம்எல்ஏவான முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இது தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு மெல்ல கோபத்தோடு ஸ்டாலின் பதிலடியாக இதை பதிவு செய்ததை கவனிக்க முடிந்தது.
கருணாநிதி நினைவு நூலகம்
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்தநாளையொட்டி, தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், புத்தகங்கள் மீதும், புத்தகங்களை வாசிப்பதன் மீதும் கருணாநிதிக்கு வாழ்நாள் முழுவதும் இருந்த தீராப் பற்றினை நாம் அனைவரும் நன்கு அறிவோம். இதன் வெளிப்பாடாகத்தான், 2010 ஆம் ஆண்டில், பேரறிஞர் அண்ணாவின் 102வது பிறந்தநாள் அன்று, சென்னை கோட்டூர்புரத்தில், ஆசியாவின் அதி நவீன மிகப் பெரிய நூலகம் எனப் போற்றப்படும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தைத் திறந்து வைத்தார்கள். மாணவர்கள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், இலக்கியவாதிகள், போட்டித் தேர்வுகளுக்குத் தம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ளும் இளைஞர்கள், பள்ளிச் சிறார்கள் என சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் அறிவொளி அளிக்கும் கலங்கரை விளக்கமாக இந்த நூலகம் விளங்கி வருகிறது என்று சொன்னால், அது மிகையாகாது.
மதுரையில் அமைகிறது
தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில் வாழும் மக்களும், இத்தகைய அரியவாய்ப்பினைப் பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு, இரண்டு லட்சம் சதுர அடி பரப்பளவில் நவீன வசதிகளுடன் கூடியவகையில், மதுரையில் 70 கோடி ரூபாய் செலவில், கலைஞர் நினைவு நூலகம் ஒன்று அமைக்கப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பென்னிகுவிக் நினைவு இல்லம் இடிப்பு என தகவல்
இந்த நிலையில்தான், பென்னிகுவிக் வாழ்ந்த நினைவு இல்லத்தை இடித்து கலைஞர் நூலகம் அமைக்கப்போவதாக தகவல்கள் பரப்பப்பட்டன. பென்னிகுவிக் நினைவு இல்லத்தை இடித்து கலைஞர் நூலகம் கட்டினால் போராட்டம் வெடிக்கும் என்று அதிமுக சார்பில் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இணைந்து அறிக்கை விடும் அளவுக்கு இந்த செய்தி பரவியது.
யார் இந்த பென்னிகுவிக்
ஆங்கிலேயப் பொறியாளர் கர்னல் பென்னிகுவிக் தலைமையில் பிரிட்டிஷ் இராணுவத்தின் கட்டுமானத்துறை முல்லை பெரியாறு அணையை கட்டியது. ஒரு கட்டத்தில் தனது சொந்த பணத்தை செலவிட்டு பென்னிகுவிக் அணையை கட்டி முடித்தாராம். இதனால்தான், தேனி உட்பட முல்லை பெரியாறு அணையால் பலன் பெறும் மாவட்ட மக்கள் பென்னிகுவிக்கை, கடவுள் போல, நினைத்து வழிபட்டு வருகிறார்கள்.
சட்டசபையில் செல்லூர் ராஜு பேச்சு
எனவே, அவர் நினைவிடத்தில் கலைஞர் நூலகம் என்ற செய்தி, தென் மாவட்டங்களில் பரபரப்பாக பேசப்பட ஆரம்பித்தது. சட்டசபையில் இன்று செல்லூர் ராஜு இதே விவகாரம் பற்றி பேசினார். மதுரையில் கருணாநிதி பெயரில் நூலகம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் பென்னிகுயிக் வாழ்ந்த வீடு இருப்பதால், அதை இடித்துவிட்டு கருணாநிதி பெயரில் நூலகம் அமைப்பதா? என்று கேள்வி எழுப்பினார் செல்லூர் ராஜு.
பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
இதற்கு பதிலளித்த நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், “நூலகம் அமைய உள்ள இடத்தில் பென்னிகுயிக் வாழ்ந்ததாக கூறுவது தவறான கருத்து. 1911ம் ஆண்டு பென்னிகுவிக் மறைந்து விட்டார். அந்த நினைவு இல்லம் 1912ம் ஆண்டு முதல் 1915ம் ஆண்டுக்குள் கட்டப்பட்டது. எனவே பென்னிகுவிக் இல்லமாக இருக்க முடியாது” என்று கூறினார். பின்னர், முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுந்து பதில் அளித்தார். அப்போது அவர் சற்று கோபமாக காணப்பட்டார்.
ஸ்டாலின் கோபம்
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே. முன்னாள் அமைச்சர் திரு. செல்லூர் ராஜு அவர்கள். பென்னிருயிக் ‘நினைவிடத்தினை மாற்றி, அப்புறப்படுத்தி, அந்த இடத்திலே கலைஞர் பெயரால் அமையவிருக்கக்கூடிய நூலகம் கட்டப்படவிருக்கிறது என்ற ஒரு செய்தியைச் சொல்லியிருக்கிறார். ஏற்கெனவே இது சட்டமன்றத்திற்கு வெளியிலேயும் பேசப்பட்டிருக்கிறது. அப்பொழுதும் மாண்புமிகு பொதுப் பணித் துறை அமைச்சர் அவர்கள்மூலமாக விளக்கம் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இப்போதும் சொல்கிறேன்; நீங்கள் சொல்வதற்கு ஆதாரம் இருந்தால் சொல்லுங்கள். நிச்சயமாக அதை நாங்கள் மாற்றுவதற்கு எந்த நேரத்திலும் தயாராக இருக்கிறோம். அதற்கு எந்தவித ஆதாரமும் கிடையாது. பிரச்சாரத்தினைச் செய்துகொண்டிருக்கிறார்கள். பதிவாகச் கூடாது என்பதற்காகத்தான் இந்த சொல்லியிருக்கிறேன்.
யாரோ சொல்கிறார்கள்
இப்படி யாரோ சொல்கிறார்கள் என்று சொல்லும் நீங்கள், ஒரு முன்னாள் அமைச்சராக இருந்திருக்கிறீர்கள். இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, தற்போது மூன்றாவது முறையாக அவைக்கு வந்திருப்பதாகச் சொல்லியிருக்கின்றீர்கள். எனவே, அப்படி நீங்கள் சொல்வது உங்களுடைய பெருந்தன்மையைக் குறைப்பதாக இருக்கிறது. எனவே ஆதாரம் இருந்தால் சொல்லுங்கள், என்று ஸ்டாலின் அழுத்தம் திருத்தமாக கூறிவிட்டு அமர்ந்தார். திமுக உறுப்பினர்கள் முதல்வர் அளித்த பதிலுக்கு மேஜையை தட்டி வரவேற்பு தெரிவித்தனர்.