மும்பை: பாலிவுட்டின் பழம்பெரும் நடிகை சுரேகா சிக்ரி மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 75. 1978ம் ஆண்டு வெளியான அரசியல் படமான கிசா குர்சி கா திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சுரேகா சிக்ரி.
மூன்று முறை தேசிய விருது வென்ற அவரது மரண செய்தியை அறிந்த பல பாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சுரேகா சிக்ரி காலமானார்
பாலிகா வது, பதாய் ஹோ, தமாஸ், மம்மோ உள்ளிட்ட ஏகப்பட்ட படைப்புகளில் துணை நடிகையாக நடித்து பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சுரேகா சிக்ரி. கடந்த சில மாதங்களாக உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், இன்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.
3 தேசிய விருதுகள்
சிறந்த துணை நடிகையான சுரேகா சிக்ரி தனது அற்புதமான நடிப்புக்காக மூன்று முறை தேசிய விருதுகளை வென்றுள்ளார். 1988ம் ஆண்டு வெளியான தமாஸ், 1994ம் ஆண்டு வெளியான மம்மோ மற்றும் 2019ல் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான பதாய் ஹோ உள்ளிட்ட மூன்று படங்களுக்காக தேசிய விருதை அவர் வென்றுள்ளார்.
ஊர்வசி ரவுத்தேலா இரங்கல்
பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா சுரேகா சிக்ரியின் இளம் வயது புகைப்படத்தை பதிவிட்டு அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்களை தெரிவித்துள்ளார். ஏகப்பட்ட பாலிவுட் பிரபலங்களும் சுரேகா சிக்ரியின் திடீர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ரந்தீப் ஹூடா இரங்கல்
சல்மான் கானின் ராதே படத்தில் வில்லனாக நடித்த பிரபல பாலிவுட் நடிகர் ரந்தீப் ஹூடா தனது ட்விட்டர் பக்கத்தில் சுரேகாஜியின் இளம் வயது மற்றும் சமீபத்திய புகைப்படங்களை ஷேர் செய்து இரங்கல் தெரிவித்துள்ளார்.
மனோஜ் பாஜ்பாய் இரங்கல்
தி ஃபேமிலி மேன் வெப்சீரிஸ் மூலம் சர்வதேச அளவில் பிரபலமான நடிகர் மனோஜ் பாஜ்பாய் தனது ட்விட்டர் பக்கத்தில், மிகப்பெரிய சோக செய்தி, திறமை வாய்ந்த நடிகை சுரேகாஜி நம்மை விட்டு பிரிந்து சென்றுள்ளார் என பதிவிட்டு தனது இரங்கலை தெரிவித்துள்ளார். நடிகை ஊர்மிலா, நீனா குப்தா என ஏகப்பட்ட பாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.