மகாராஷ்டிராவில் அதிகரிக்கும் கொரோனா ‘டெல்டா பிளஸ்’ வழக்குகள் ஒரு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இந்த கொரோனா மாறுபாடு மூன்றாவது அலைகளைத் தூண்டக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஏற்கனவே இந்தியாவில் கேரளா, கர்நாடகா மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய பகுதிகளும் இந்த கொடிய வகை வைரஸ் வழக்குகளைக் கொண்டுள்ளன.
உலகெங்கிலும், இதுவரை சுமார் 200 உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா டெல்டா பிளஸ் வழக்குகள் மட்டுமே இருந்தாலும், அவற்றில் இந்தியாவில் 40 வழக்குகள் உள்ளன. இந்த வகை வைரஸ் எதிர்காலத்தில் பேரழிவை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சம் உள்ளது. எனவே இப்போது இப்படிப்பட்ட கொரோனா டெல்டா பிளஸ் வைரஸ் மாறுபாட்டு குறித்து விரிவாக காண்போம்.
டெல்டா பிளஸ் என்றால் என்ன?
2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை தாக்கியதால், அதற்கு கடந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனாவின் B.1.617.2 பரம்பரை தான் காரணம் என்று வல்லுநலர்கள் குற்றம் சாட்டினர். உலக சுகாதார அமைப்பு (WHO) மே 31 ஆம் தேதி, இதற்கு டெல்டா என்று பெயரிட்டது. பின்னர், இந்த டெல்டா வகை Sars-CoV-2-இன் மிகவும் வேகமாக பரவக்கூடிய மாறுபாடான டெல்டா பிளஸ் ஆக மாற்றமடைந்தது. ஆனால் கொரோனா டெல்டா பிளஸ் வகை வழக்குகளின் எண்ணிக்கை இன்னும் குறைவாக இருப்பதால், உடனே கவலைப்பட வேண்டிய அவசியம் இருக்காது என்றும் கூறுகின்றனர்.
முதலில் ஐரோப்பாவில் தோன்றியது
புதிய கொரோனா டெல்டா பிளஸ் அதன் ஸ்பைக் புரதத்தில் மாற்றமடைந்துள்ளது. ஆகவே, இது B.1.617.2.1 என பெயரிடப்பட்டது. ஊடக அறிக்கைகளின் படி, இந்த வகை கொரோனா முதன்முதலில் ஐரோப்பாவில் மார்ச் 2021 இல் கண்டுபிடிக்கப்பட்டது. டெல்டா பிளஸ் மாறுபாட்டின் இருப்பை தீர்மாளிக்க தேசிய வேதியியல் ஆய்வகமானது மகாராஷ்டிராவில் இருந்து ரத்னகிரி மற்றும் சிந்துதுர்க் மாதிரிகளைக் கொண்டு வந்து ஆய்வு செய்தது. இந்த இரண்டு பகுதிகளில் உள்ள மாதிரிகளும் இந்தியாவில் கொரோனா தொற்றுநோய்களின் விகிதத்தை உயர்த்தும் படியாக உள்ளன.
டெல்டா பிளஸ் வைரஸ் அறிகுறிகள்
கொரோனாவின் இந்த புதிய மாறுபாடு இன்னும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது மற்றும் ஆய்வாளர்களும் கோவிட் -19 மற்றும் டெல்டா பிளஸ் மாறுபாட்டால் ஏற்படும் அறிகுறிகளுக்கு இடையிலான முக்கிய வேறுபாடுகளை சுட்டிக்காட்ட முயற்சிக்கின்றனர். இதுக்குறித்த ஆரம்ப ஆய்வுகளில் வறட்டு இருமல், காய்ச்சல், உடல் சோர்வு, வலிகள் மற்றும் சரும அரிப்பு, தோல் வெடிப்பு, கால்விரல் மற்றும் கைவிரல் நிறமாற்றம், தொண்டை வலி, விழி வெண்படல அழற்சி, சுவை மற்றும் வாசனை இழப்பு, வயிற்றுப்போக்கு, தலை வலி, நெஞ்சு வலி, மூச்சுத் திணறல், மூச்சு விடுவதில் சிரமம் மற்றும் பேச முடியாமையைத் தவிர, டெல்டா பிளஸ் நோயாளிகள் வயிற்று வலி, குமட்டல், பசியின்மை, வாந்தி, மூட்டு வலி, காது கேளாமை போன்றவற்றையும் வெளிப்படுத்தினர்.
மோனோக்ளோனல் ஆன்டிபாடிகளுக்கு எதிர்ப்பு?
இந்த புதிய கொரோனா மாறுபாடு நோயின் வளர்ச்சியை எவ்வாறு பாதிக்கிறது மற்றும் கடுமையான கொரோனா நோய்த்தொற்றை ஏற்படுத்தும் என்பதை அறிய நிபுணர்கள் முயற்சிக்கின்றனர். இருப்பினும், ஆரம்ப கால கண்டுபிடிப்புகளானது இந்த கொரோனா மாறுபாடு, கொரோனாவுக்கான மோனோக்ளோனல் ஆன்டிபாடி காக்டெய்ல் சிகிச்சைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கக்கூடும் என்று கூறுகின்றன. இந்தியாவில் சமீபத்தில் கொரோனாவுக்காக அங்கீகரிக்கப்பட்ட இந்த சிகிச்சையில் காசிரிவிமாப் (casirivimab) மற்றும் இம்டேவிமாப் (imdevimab) ஆகிய இரண்டு மருந்துகள் உள்ளன. மருத்துவ வல்லுநர்களால் இன்னும் ஆராய்ச்சி செய்யப்படும் மற்றொரு கவலை என்னவென்றால், இந்த கொரோனா புதிய மாறுபாடு தடுப்பூசிகள் மற்றும் முந்தைய கோவிட் -19 நோய்த்தொற்றுகள் ஆகிய இரண்டினாலும் பெறப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியில் இருந்து தப்பிக்க முடியும் என்பது தான்.
தடுப்பூசிகள் டெல்டா பிளஸ்-க்கு எதிராக வேலை செய்யுமா?
டெல்டா பிளஸ் மாறுபாடுகளில் கோவிட் தடுப்பூசிகளின் செயல்திறனை இன்னும் விஞ்ஞானிகள் சோதனை செய்து பார்க்கவில்லை. ஆனால் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் முன்னாள் ஆணையர் டாக்டர் ஸ்காட் கோட்லீப், கோவிட் தடுப்பூசிகள் பயனுள்ளதாக இருப்பதாக தெரிவதாக கூறியுள்ளார். அதுவும் mRNA தடுப்பூசி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இது டெல்டா மாறுபாட்டிற்கு எதிராக 88 சதவீதம் உள்ளதாகவும், ஜான்சன் அண்ட் ஜான்சன் மற்றும் அஸ்ட்ராஜெனெகா ஆகியவற்றின் வைரஸ் திசையன் தடுப்பூசிகளும் சுமார் 60 சதவீதம் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். மாடர்னா மற்றும் ஃபைசர்/பயோஎன்டெக் உருவாக்கிய தடுப்பூசிகள் mRNA தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன. ஆய்வின் படி, ஃபைசர் மற்றும் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகள் அறிகுறியுள்ள டெல்டா மாறுபாடு வழக்குகளுக்கு எதிரான முதல் டோஸ் பெற்ற மூன்று வாரங்களுக்குப் பிறகு 33 சதவிகிதம் மட்டுமே பயனுள்ளதாக இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால் இது ஆல்பா மாறுபாட்டிற்கு 50 சதவிகிதம் பயனுள்ளதாக இருந்தது.
கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் எப்படி?
கோவேக்சின் தடுப்பூசி டெல்டா மற்றும் பீட்டா வகைகளுக்கு எதிரான பாதுகாப்பை வழங்கக்கூடியது என்று பாரத் பயோடெக் கூறியது. புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் பாரத் பயோடெக் ஆகியவற்றின் ஆய்வுகளும் இதை உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும், 63 பேர் கொண்ட ஒரு சிறிய குழுவைக் கொண்டு எய்ம்ஸ் நடத்திய ஆய்வில், கோவிஷீல்டு அல்லது கோவாக்சின் ஆகிய இரண்டுமே கொரோனாவின் எந்த மாறுபாட்டிற்கும் எதிராக பயனுள்ளதாக இருப்பது தெரிய வந்தது.
கொரோனா டெல்டா பிளஸ் இந்தியாவிற்கு கவலை அளிக்குமா?
டெல்டா பிளஸ் அல்லது AY.01 மாறுபாடு வரவிருக்கும் மாதங்களில் மூன்றாவது அலையை கட்டவிழ்த்துவிடக்கூடும் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். ஏனெனில் இந்த வகை மாறுபாடு உடலின் நோயெதிர்ப்பு அமைப்பை தகர்க்கக்கூடியது. என்ன தான் இந்த புதிய வகை டெல்டா பிளஸ் வழக்கு இந்தியாவில் குறைவாக இருந்தாலும், இன்னும் இந்த வைரஸ் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய ஒன்றாக உள்ளது. ஏனெனில் கொரோனா இரண்டாம் அலை ஆரம்பிக்கும் முன் டெல்டா வைரஸ் வழக்கு குறைவாகவே இருந்தது. ஆனால் இரண்டாம் அலை ஆரம்பித்த பின் குறுகிய காலத்தில் இந்த டெல்டா வைரஸ் பரவியிருப்பது கண்டறியப்பட்டது. மேலும் இது ஏராளமான உயிர்களை அழித்தது. அதோடு குறுகிய காலத்தில் டெல்டா பிளஸ் வைரஸ் ஆகவும் உருமாற்றம் அடைந்துள்ளது. எனவே கோவிட் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில், சரியான பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி, கொரோனா தடுப்பூசியைப் போட்டு பாதுகாப்பாக இருப்போம்.