டோக்கியோ: ஒலிம்பிக் பெண்கள் பாக்சிங் 69 கிலோ பிரிவு போட்டியில் இந்தியாவின் லோவ்லினா காலிறுதி போட்டியில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இன்று ஒலிம்பிக் 2020 பெண்கள் லைட் வெயிட் பாக்சிங்கில் இந்திய வீராங்கனை சிம்ரன்ஜித் தோல்வி அடைந்து வெளியேறி உள்ளார். தாய்லாந்து வீராங்கனை சுடாபார்னிடம் 5:0 என்ற புள்ளி கணக்கில் சிம்ரன்ஜித் தோல்வி அடைந்து வெளியேறி உள்ளார்.
நேற்று இந்தியாவின் மேரி கோம் கொலம்பியாவின் விக்டோரியாவிடம் 3:2 என்ற கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். பாக்சிங்கில் தொடர்ந்து இந்தியா இரண்டு தோல்விகளை சந்தித்த நிலையில் லோவ்லினா போர்கோஹைன் மட்டும் ஒரு பக்கம் அதிரடியாக ஆடி வருகிறார்.

லோவ்லினா போர்கோஹைன்
இந்தியாவின் லோவ்லினா போர்கோஹைன் தனது முதல் போட்டியில் ஜெர்மனி வீராங்கனை நதின் அபேட்ஸை எதிர்கொண்டார். இதில் நதின் அபேட்ஸை எளிதாக வீழ்த்தி 3-2 என்ற புள்ளி கணக்கில் லோவ்லினா வெற்றிபெற்றார். இதையடுத்து காலிறுதிக்கு தகுதி பெற்றவர் சீன தைபே வீராங்கனை சின் தைனை இன்று எதிர்கொண்டார்.

முதல் சுற்று
இன்றைய ஆட்டம் முழுக்க அதகளமாக இருந்தது. கொஞ்சம் கூட கேப் விடாமல் ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே லோவ்லினா தனது வேகமான பன்ச்களால் ஆதிக்கம் செலுத்தினார். முதல் சுற்று முடிவில் 48-47 என்று லோவ்லினா முன்னிலை வகித்தார். இதில் மொத்தம் மூன்று 10 புள்ளிகளை அவர் பெற்றார்.

இரண்டாவது சுற்று
அதன்பின் இரண்டாவது சுற்றில் மொத்தமாக அனைத்து புள்ளிகளையும் கைப்பறினார். இதில் 50-45 என்று லோவ்லினா முன்னிலை வகித்தார். இதில் மொத்தம் 5 10 புள்ளிகளை அவர் பெற்றார். பின் கடைசி சுற்றிலும் 49-46 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் லோவ்லினா முன்னிலை வகித்தார். இதில் லோவ்லினா மொத்தமாக நான்கு 10 புள்ளிகளை அவர் பெற்றார்.

ஒலிம்பிக்
இதன் மூலம் சீன தைபே வீராங்கனை சின் தைனை 4:1 என்ற கணக்கில் வீழ்த்தி லோவ்லினா வெற்றி பெற்றார். அரையிறுதி போட்டிக்கு லோவ்லினா தகுதி பெற்றதால் ஒரு பதக்கம் உறுதியானது. அடுத்த போட்டியில் தோல்வி அடைந்தால் கூட இந்தியாவிற்கு குறைந்தது வெண்கல பதக்கமாவது கிடைக்கும். ஆனால் லோவ்லினா கண்டிப்பாக தங்கம் வெல்ல அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

யார் இவர்
லோவ்லினா போர்கோஹைன் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர். இவர் 2018, 2019 உலக பெண்கள் பாக்சிங்கில் வெண்கல பதக்கம் வென்றார். இதன் மூலம் முதல்முறையாக ஒலிம்பிக்கிற்கும் தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.