சென்னை : தமிழக முதல்வர் ஸ்டாலினின் கார் முன்பு திடீரென கிழே அமர்ந்து ஒருவர் நிலப்பிரச்சனைக்காக போராட்டம் நடத்தியதால் தலைமைச்செயலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை கோட்டையில் உள்ள தலைமைச்செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்க தினமும் பலர் வந்து செல்வார்கள். குறிப்பாக திங்கள் முதல் வெள்ளி வரை வேலை நாட்களில் பலரும் வருவார்கள்- அவர்களிடம் முதலமைச்சர் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் மனுக்களை பெற்று அந்தந்த துறைகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவார்கள்.
மிக முக்கியான பிரச்சனை என்றால் மட்டுமே முதல்வரை சந்திக்க வர வேண்டும் என்கிற நிலையில் நிலத்தகராறு தொடங்கி பல்வேறு பிரச்சனைகளுக்காக நாள்தோறும் மக்கள் வந்து செல்வார்கள். இதனால் தலைமைச்செயலக வளாகம் எப்போதுமே பரபரப்புடன் காணப்படுவது இயல்பு.
முதல்வர் கார்
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்துவிட்டு பத்திரிகையாளரை சந்திக்க விரும்புவோர், 10-ம் எண் நுழைவு வாயில் பக்கத்தில், முதல்வர் ஸ்டாலினின் கார் நிறுத்தப்பட்டுள்ள ‘போர்ட்டிகோ’விற்கு எதிரே உள்ள இடத்தில் வந்து பேட்டி கொடுத்துவிட்டுச்செல்வார்கள் அந்த பகுதியில் போலீசார் பாதுகாப்பு பல மடங்கு அதிகமாக இருக்கும்.
ஜாக்டோ ஜியோ
இந்த நிலையில் தலைமைச்செயலகத்தில் நேற்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை ஜாக்டோ ஜியோ அமைப்பினர் சிலர் சந்தித்தார்கள். பின்னர் பத்திரிகையாளரை சந்திக்க 10-ம் எண் நுழைவு வாயில் அருகே வந்தனர். அவர்களுடன் செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம்-கூடுவாஞ்சேரி பெரியார்நகரைச் சேர்ந்த அருள்தாஸ் என்பவரும் வந்துவிட்டார். ஜாக்டோ ஜியோவைச் சேர்ந்தவர் என்று நினைத்து போலீசாரும் அருள்தாசை அந்த பகுதிக்கு செல்ல அனுமதித்துவிட்டார்கள்
கோஷமிட்டார்
ஆனால் அங்கு நிறுத்தப்பட்டிருந்த முதல்-அமைச்சரின் கார் முன்பு அருள்தாஸ் திடீரென அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். நிலப்பிரச்சினை தனக்கு இருப்பதாகவும் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அருள்தாஸ் அப்போது கோஷமிட்டார். போலீசார் உடனே அங்கு சென்று அவரை அப்புறப்படுத்தினார்கள். அவரை கோட்டை காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினார்கள்.
எச்சரித்தனர்
போலீசார் அருள்தாசிடம் நடத்திய விசாரணையில் அவர் கூறும் போது , நந்திவரம் கிராமம் நெல்லிக்குப்பம் சாலையில் 305 சதுர அடியில் மனை உள்ளது. அந்த மனையை அருகில் உள்ள ராதாநகர் பகுதியில் உள்ள சிலரிடம் பணம் வாங்கிக்கொண்டு சர்வேயர் ஒருவர் அளந்தார் . மனை 132 சதுர அடி மட்டும்தான் உள்ளது என்று சர்வேயர் குறைத்து கூறினார். என் இடத்தை அபகரித்துவிட்டார்கள். ராதாநகர் பகுதியை சேர்ந்த சிலர் தனது கடை சுவற்றை இடித்து விட்டார்கள். எனது இடத்தை அளந்து தரும்படி முதல்-அமைச்சர் தனிப் பிரிவில் மனு கொடுத்தேன் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனறு முதல்-அமைச்சரின் கார் முன்பு அமர்ந்தேன் என்று கூறியிருக்கிறார். இதையடுத்து அவரை போலீசார் எச்சரித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தினால் தலைமைச்செயலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.