சென்னை: முதல்வர் ஸ்டாலினின் செயல்பாடுகளை விமர்சித்தால் அது வெற்று அரசியலாகிவிடும் என எஸ் வி சேகர் தெரிவித்துள்ளார்.தற்போது கொரோனாவை ஒழிக்கும் பணிகளில் திமுக அரசு முழு வீச்சில் இறங்கியுள்ளது. இந்த சமயத்தில் நாம் அதை விமர்சிக்கக் கூடாது என்றும் எஸ் வி சேகர் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து பாஜக மூத்த நிர்வாகி எஸ் வி சேகர் ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பேட்டி கேள்வி பதில் வடிவில்:
மோடிதான் சிறந்தவர்
கேள்வி: கொரோனாவை கட்டுப்படுத்தியதில் மோடிதான் உலகில் சிறந்தவர் என்றால் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தனை ஏன் மாற்ற வேண்டும்?
பதில்: எதையுமே மேலோட்டமாக பார்க்கக் கூடாது. ஹர்ஷவர்தன் டெல்லி முதல்வர் வேட்பாளராகக் கூட முன்னிலைப்படுத்தப்பட வாய்ப்புள்ளது. ஹர்ஷவர்தனை சுகாதாரத் துறை அமைச்சராக நியமிப்பார்கள் என நினைத்தா ஓட்டு போட்டீங்க? ஒரு அமைச்சரவையை மாற்றுவதற்கு முழு அதிகாரம் பெற்றவர்தான் பிரதமர்.
நீட்டிலிருந்து விலக்கு
கேள்வி: நீட் தேர்வு குறித்து உங்கள் கருத்து என்ன, நீட்டிலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கிடைக்குமா
பதில்: நீட்டிற்கு விலக்கு கிடைக்காது. நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டு உச்சநீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டு ஜனாதிபதியால் கையெழுத்திடப்பட்ட சட்டம். இனிமே அதை ஒன்றுமே செய்ய முடியாது. நீட்டின் முக்கியத்துவம் என்னவெனில் கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கக் கூடிய தனியார் கல்லூரிகளில் ஏழை மாணவர்களும் 20 ஆயிரம், 30 ஆயிரத்திற்கு மருத்துவம் படிக்க முடியும் என நிரூபிக்கப்பட்டுள்ளது.
திரைப்படத் துறைக்கு ஆலோசனை
கேள்வி: கொரோனாவால் பாதிக்கப்பட்ட திரைப்படத் துறைக்கு உங்கள் ஆலோசனை என்ன
பதில்: திரைப்படத் துறையினர் மட்டும் இல்லை. எல்லா துறையினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். இது போன்ற பெருந்தொற்று காலத்தில் ஏதோ சேமித்து வைத்த பணத்தை வைத்து வாழ்க்கையை நடத்த வேண்டிய சூழல் உள்ளது. இந்த சூழலிலும் நாம் உயிர் வாழும் சூழலை கடவுள் கொடுத்திருக்கிறார். தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். வாழ்க்கையே போராட்டம்தான், போராடி ஜெயிப்போம்.
தணிக்கை துறை
கேள்வி: திரைப்பட தணிக்கை சட்டம் குறித்து உங்கள் கருத்து என்ன?
பதில்: எல்லாவற்றையும் அரசியலாக்கி பார்க்கிறார்கள். சினிமா நடிகர்கள் படித்தவர்கள்தான். அதற்காக அவர்கள் எது பேசினாலும் புத்திசாலித்தனம் இருக்கும் நியாயமாக இருக்கும் என எடுத்துக் கொள்ள வேண்டாம். ரஜினி நடித்த கபாலி படம் இந்தியாவில் யு சான்றிதழ் வழங்கப்பட்டது, இதே சிங்கப்பூரில் அந்த படத்திற்கு ஏ சான்றிதழ், சென்சாரில் ஏன் இந்த பாரபட்சம்? சினிமாவில் உண்மையை போல் சொல்லும் பொய்களுக்கு அனுமதி இல்லை. ரீசென்சார் என்பது தயாரிப்பாளர்களை காப்பாற்றக் கூடிய ஒரு விஷயம். இந்த சட்டத்தால் 99.99 சதவீதம் திரைப்படங்களுக்கு பிரச்சினையே வராது.
கேள்வி: முதல்வர் ஸ்டாலினின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது?
பதில்: தமிழக முதல்வர்களில் தான் ஒரு சிறந்த முதல்வர் என்ற பெயரை வாங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஸ்டாலின் செயல்படுகிறார். வந்ததிலிருந்து ஸ்டாலின் உள்பட அனைவரும் கொரோனாவை எதிர்த்து போராடவே செயல்பட்டு வருகிறார்கள். இப்போது திமுக அரசை விமர்சனம் செய்யக் கூடாது. கொரோனா ஓய்ந்து மூன்றாவது அலைக்கும் தமிழகம் தயாராகிவிட்டது. இதே அவர்கள் போடும் பட்ஜெட்டை பார்த்துவிட்டு விமர்சனம் செய்யலாமே ஒழிய இப்போது செய்தால் அது வெறும் வெற்றி அரசியல்தான்.
கேள்வி: பாஜகவால்தான் அதிமுக தோற்றது என முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளாரே
பதில்: அது அவருடைய சொந்த கருத்து. அதிமுக அதிமுகவால்தான் தோற்றது. அதிமுகவுக்கு அமமுகவுடன் சரியான புரிதல் இல்லை. அமமுக என்ற கட்சியை ஆரம்பிக்க விடாமல் இருந்திருந்தால் இன்னமும் ஒரு 29 அல்லது 30 தொகுதிகளில் வென்றிருக்கலாம். 10 ஆண்டுகள் இவர்கள் ஆண்டது ஜெயலலிதாவின் முகத்திற்கு கிடைத்த வெற்றி. ஜெயலலிதா , எம்ஜிஆர் பெயர்கள் இந்த தேர்தலில் பெரிய அளவில் உச்சரிக்கப்படவில்லை. அதிமுக மீது மக்களுக்கு அதிருப்தி இல்லாவிட்டாலும் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். ஸ்டாலினுடைய விடா முயற்சி, தினமும் மக்களை சந்திக்கும் செயல்பாடுகள்தான் திமுக கூட்டணியை வெற்றி பெற வைத்தது. சசிகலா தினகரனை விட்டுவிட்டு அதிமுகவில் வந்தால் அவரை இவர்கள் ஏற்றுக் கொண்டால், பிரிந்தவர்கள் ஒன்று சேரும் போது அதிமுகவின் பலம் இன்னும் கூடும்.
தாமரை மலருமா
கேள்வி: தமிழகத்தில் தாமரை மலருமா?
பதில்: நிச்சயம் மலரும். எங்கேயும் மலராது என சொன்ன நிலையில் இப்போது 4 இடங்களில் மலர்ந்துள்ளது. இந்தியாவையே ஆளும் கட்சி பாஜக, அவ்வளவு பெரிய கட்சி ஒரு இடத்தில் இல்லாவிட்டால் கட்சி மீது தவறில்லை. அங்கு இருக்கக் கூடிய நிர்வாகிகள் மீது தவறு. புதுச்சேரியில் கூட்டணி ஆட்சி வந்துவிட்டது. நாளை தமிழகத்தை 3ஆக பிரித்தால் அதில் கொங்கு நாடு பிரிந்தால் பிஜேபி ஆட்சி அமையும். மக்களின் நலனுக்காக அரசு எது செய்தாலும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.