சென்னை: தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஒரு ஸ்வீட் நியூஸ் சொலலி உள்ளார்.. இதுகுறித்து முதல்வர் முக ஸ்டாலினிடம் அறிக்கை சமர்ப்பிக்க போவதாகவும் உறுதி தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு அரசும் ஒவ்வொரு முறையும் புது புது திட்டங்களை கொண்டு வந்தாலும் சரி, அல்லது ஏற்கனவே இருக்கும் திட்டங்களை நீக்கிவிட்டாலும் சரி, மதிய உணவு திட்டத்தில் மட்டும் கை வைக்க மாட்டார்கள்.. அந்த அளவுக்கு அதிமுக்கியத்துவம் வாய்ந்ததுதான் மதிய உணவு திட்டம்..!
3 வேளையும் நம் பிள்ளைகளுக்கு சாப்பாடு கிடைக்க வேண்டும் என்ற அடிநாதத்தை, முழுமூச்சாக கொண்டு, நம்மை இதுவரை ஆண்ட அரசியல் சான்றோர்கள், விடாமல் இறுக்கமாக பற்றி கொண்டு, அந்த திட்டத்தையே படிப்படியாக உயர்த்தி கொண்டும் வந்துள்ளனர்..
திமுக
எந்த ஆட்சி வந்தாலும், தன் ஆட்சியை தக்க வைத்து கொள்ள எதையாவது புது புது திட்டம் அறிவித்தாலும், மக்களிடம் எந்த மாயஜாலமும் இல்லாமல் நேரடியாக அவர்களின் மனசில் சென்று உட்கார்ந்துவிட்டது இந்த மதிய உணவு திட்டம்.. அந்த வகையில், மீண்டும் ஒரு அதிரடியை அறிவித்துள்ளது திமுக அரசு..!
அமைச்சர்
இதுகுறித்து, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.. அப்போது, “100% கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.. பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளில் 100% கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் மையத்துக்கு தகவல் வருகிறது… தகவல் கூறுபவர்கள் சிலர் தயக்கம் காட்டுகின்றனர்.. அதனால், பெற்றோர்களே நேரடியாக இதை பற்றி புகார் கொடுத்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
வாழைப்பழம்
மேலும் வாழை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில், மதிய உணவு திட்டத்தில் வாழைப்பழத்தை சேர்ப்பது, அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை உயர்த்துவது, ஆதிதிராவிடர் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது என்று முடிவு செய்துள்ளோம்.. இது தொடர்பாக விரைவில் அதற்கான அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பிக்க உள்ளோம்.. மேலும், அரசு பள்ளிகளில் உள்ள கட்டமைப்பு, தரம், குடிநீர் ஆகியவற்றை ஆய்வு செய்து வருகிறோம்..
அறிக்கை
இவைகள் குறித்த அறிக்கையும் விரைவில் முதல்வரிடம் சமர்ப்பிக்கப்படும்.. அதேபோல, கிராமப்புற பள்ளிகளில் குடிநீர் தேவைக்கான பணியாளர்களை நியமிப்பது குறித்தும் முதல்வரிடம் பரிந்துரைக்க உள்ளோம்” என்றார். ஏற்கனவே மதிய உணவு திட்டத்தில், முட்டைகள் வழங்கப்பட்டு வருவது பெற்றோர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும்போது, சத்தான வாழைப்பழமும் அறிமுகமாவது நிச்சயம் மகிழ்ச்சியையே ஏற்படுத்தக்கூடும்..