பாட்னா: “சட்டங்களை உருவாக்குவதன் மூலம் மட்டுமே மக்கள் தொகை கட்டுப்பாட்டை அடைய முடியாது… சீனாவில் இல்லாத அளவுக்கு கடுமையான சட்டமா? நமக்கு அதுவே ஒரு உதாரணம்தானே.. முதல்ல பெண்களுக்கு கல்வி கொடுங்கள்.. பிறகு தானாகவே மக்கள் தொகை கட்டுப்பாடு குறையும்” என்று பீகார் முதல்வர் நிதீஷ்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
சமீப நாட்களாகவே மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் அறிவிப்புகளை உத்தரபிரதேசம், அசாம் போன்ற மாநிலங்கள் வெளியிட்டு வருகின்றன.
அதாவது 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால், அவர்களுக்கு அரசு வேலை கிடையாது.. உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிட முடியாது… பதவி உயர்வு கிடையாது.. இதுவே, 2 குழந்தைகள் மட்டும் உள்ளவர்களுக்கு ஏகப்பட்ட சலுகைகளை அரசு வழங்கும் என்று உபி முதல்வர் யோகி அறிவித்துள்ளார்.
கடன் தள்ளுபடி
அதேபோன்று அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, “கடன் தள்ளுபடி உள்ளிட்ட பிற அரசாங்க திட்டங்களுக்கும் மக்கள் தொகை விதிமுறைகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்… இது தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் எஸ்சி-எஸ்டி சமூகத்திற்கு பொருந்தாது” என்றார்.
எதிர்ப்பு
இருமாநில அரசுகளின் இந்த அறிவிப்புகளுக்கு ஆதரவும், எதிர்ப்புமான கருத்துக்களும் எழுந்து வருகின்றன.. அந்த வகையில், பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார், இதுபோன்று அறிமுகப்படுத்தப்படும் மக்கள்தொகை கட்டுப்பாட்டு சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
கேள்வி
இதுகுறித்த கேள்வியை செய்தியாளர்கள் நிதிஷிடம் கேட்டனர்.. அதற்கு அவர், “ஒவ்வொரு மாநிலமும் அவர்கள் விரும்பியதை செய்ய முழு சுதந்திரம் இருக்கிறது.. ஆனால், இப்படிப்பட்ட சட்டங்களை உருவாக்குவதன் மூலம் மட்டுமே மக்கள் தொகை கட்டுப்பாட்டை அடைய முடியாது என்று நான் நினைக்கிறேன்.. சீனாவில் இல்லாத அளவுக்கு கடுமையான சட்டமா? நமக்கு அதுவே ஒரு உதாரணம்தானே..
பொறுப்பு
இப்போதைக்கு நம்முடைய பெரிய பொறுப்பு என்னவென்றால், பெண்கள் கல்வி கற்கும்போது, அவர்கள் விழிப்புணர்வு அடைகிறார்கள்.. இதன் விளைவாக கருவுறுதல் விகிதம் குறைகிறது.. அவ்வளவுதான்.. பெண்கள் கல்வியறிவு கிடைத்தாலே போதும்.. தேவையற்ற குழந்தை பேற்றை அவர்களாகவே தவிர்த்துவிடுகின்றனர். பெண் கல்வி இங்கு மேலும் மேலும் அதிகரிக்க, அதிகரிக்க, 2040ல் இந்திய மக்கள் தொகை வீழ்ச்சியை நிச்சயம் சந்திக்கும்..
பெண்கள்
அதனால், நாங்கள் பெண் கல்வியை மட்டுமே நம்பியிருக்கிறோம்.. மக்கள் தொகை கட்டுப்பாடு என்பது ஒரு தனிப்பட்ட சமூகம் சார்ந்தது அல்ல. பெண் கல்வியை ஊக்குவிக்கும் போது அனைவருக்குமே நன்மை கிடைக்கும்” என்று பதிலளித்தார்.. நிதிஷ்குமாரை பொறுத்தவரை, மனதில் உள்ளதை அப்படியே சொல்லிவிடுவார்.. இப்போதும் இந்த விஷயத்தில் ஓபனாக கருத்து சொல்லி உள்ளார்.. இத்தனைக்கும் மத்தியில் இவர் கூட்டணியில்தான் இருக்கிறார்..
கட்டுப்பாடு
ஆனாலும் தவறு என்றால், அதை வெளிப்படையாகவே நிதிஷ்குமார் சொல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். இந்த மக்கள் தொகை கட்டுப்பாடு விஷயத்தில் உபியும் சரி, பீகாரும் சரி, பிற்காலத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன.. இது வளர்ச்சிக்கான வழியும் இல்லை என்று ஒருசாரார் கருத்து சொல்லி வரும் நிலையில், பெண்களுக்கு கல்வி வழங்குவது மட்டுமே தீர்வு என்று நிதிஷூம் பளிச்சென தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.