சென்னை: தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள் குறித்து முதல்வர் இன்று முக்கிய ஆலோசனை நடத்தி உள்ளார்.. இந்த ஆலோசனை கூட்டத்தில், உயர் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளை திறப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக என எதிர்பார்க்கப்படுகிறது.தமிழகத்தில் நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு, வருகிற 19-ந்தேதியுடன் முடிவடைகிறது…
தற்போது கொரோனா தொற்று வெகுவாக குறைந்துள்ள நிலையில், 19ம் தேதிக்கு பிறகு தளர்வுகள் மேலும் அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
ஆலோசனை
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடந்தது.. இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர் பொதுத்துறை, வருவாய்த்துறை செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதிகாரிகள்
ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசித்துள்ளதாக கூறப்படுகிறது.. குறிப்பாக, கொரோனா தடுப்பூசி போடும் பணியை விரைவுப்படுத்துவது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள ஹார்டுவேர்ஸ் கடைகள் உள்ளிட்ட கடைகளின் நேரத்தை நீடிப்பது உள்ளிட்ட கூடுதல் தளர்வுகளை அளிப்பது ஆகியவைக் குறித்து முதலமைச்சர் ஆலோசனை நடத்தி உள்ளதாக தகவல் கூறுகின்றன.
கல்லூரிகள்
மேலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்க தற்போது தடை உள்ளதால், இன்று நடைபெற்ற கூட்டத்தில், உயர் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளை திறப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் தெரிகிறது. இதேபோல் கட்டுப்பாடுகளுடன் திரையரங்குகள், அனைத்து மதுக்கூடங்கள் மற்றும் நீச்சல் குளங்களை திறப்பது குறித்தும் பேசப்பட்டுள்ளது.
இந்தியா
இதையடுத்து, இக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் அநேகமாக இன்று மாலை அல்லது நாளை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்கிறார்கள். அதேசமயம் மூன்றாவது அலை இந்தியாவை தாக்கக்கூடும் என்று சொல்லப்பட்டுள்ளதால் தளர்வுகள் அளிப்பதில் கூடுதல் கவனம் தேவை என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.