மா.செ.க்கள் பார்த்து செய்வாங்க.. ஓகேன்னா வாங்க.. திமுக திட்டம்.. திடுக்கிடும் கூட்டணி கட்சிகள்!சென்னை: தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு வளைந்து கொடுக்க கூடாது என்று திமுக முடிவு செய்துள்ளது. இதனால் கேட்ட இடங்கள் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளன கூட்டணி கட்சிகள்.
உள்ளாட்சி தேர்தலை நடத்த சுப்ரீம் கோர்ட் கெடு விதித்துள்ள நிலையில், அதனை எப்படியாவது 6 மாதத்திற்கு தள்ளிப்போட பகீரத பிரயத்தனத்தை செய்து வருகிறது மாநில தேர்தல் ஆணையம். திமுக அரசின் விருப்பமும் அதுதான்.
பண விவகாரம்
திமுக மட்டுமல்ல அதிமுக நிர்வாகிகள் பலரும் கூட தேர்தலை தள்ளிப்போடத்தான் விரும்புகிறார்கள். இப்போதுதான் சட்டசபை தேர்தலுக்கு காசை தண்ணீராக செலவிட்டுள்ள நிலையில், இந்த கொரோனா காலத்தில் மீண்டும், பணத்தை செலவிட அவர்கள் ரெடியாக இல்லை என்று கூறப்படுகிறது.
ஸ்டாலின் யோசனை
அதேநேரம், ஆனால், நீதிமன்றத்தை ஒப்புக்கொள்ள வைக்கிற அளவுக்கு தள்ளிப்போடுவதற்கான காரணங்கள் எதுவும் தேர்தல் அதிகாரிகளுக்கு பிடிபடவில்லையாம். எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று ஆளும் கட்சிக்கு ரொம்பவே நெருக்கடி கொடுத்து வந்தது ஸ்டாலின். இப்போது அவரது ஆட்சியில், உள்ளாட்சி தேர்தலை தள்ளிப்போட முயன்றால் நல்லா இருக்காது என்பதால், அநேகமாக திமுக இதற்கு சம்மதிக்கும் என்றே கூறப்படுகிறது.
மாவட்ட செயலாளர்கள் சீட்
இதற்கிடையே, உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் பட்சத்தில் தனித்துப் போட்டியிட திட்டமிட்டுள்ளதாம் திமுக தலைமை. அதாவது, தோழமை கட்சிகளுக்கு, திமுக மா.செ.க்கள் பார்த்து சில எண்ணிக்கையில் சீட் ஒதுக்குவார்கள். அதனை ஏற்றுக்கொண்டால் கூட்டணியாக போட்டியிடலாம். அதை தவிர்த்து, எங்களுக்கு இத்தனை சதவீத சீட்டுகள் ஒதுக்கப்பட வேண்டும் என்று வம்பு பண்ணினால் கூட்டணியே தேவை இல்லை ; தனித்தே போட்டியிடுவோம் என்கிற திட்டத்தைப் போட்டு வைத்துள்ளது அறிவாலயம்.
சட்டசபை தேர்தலிலேயே அப்படி
சட்டசபை தேர்தலின்போது, கூட்டணி கட்சிகளின் தயவு திமுகவுக்கு அதிகம் தேவைப்பட்டது. அப்படி இருந்தும் தொகுதிகள் ஒதுக்கீடு விஷயத்தில் ரொம்பவே கறார் காட்டியது திமுக. அதுவும் காங்கிரசுக்கு அதிக சீட்டுகளை ஒதுக்கக் கூடாது என்பதில் மிகுந்த கவனத்தோடு இருந்தார் ஸ்டாலின். ஒரு கட்டத்தில் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்ற போது காங்கிரஸ் தலைவரான அழகிரி கண்கள் கலங்கியது கூட நினைத்திருக்கலாம். எனவே, உள்ளாட்சி தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுக்கு வளைந்து போகக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறத திமுக. இதனால் கலக்கத்தில் உள்ளன கூட்டணி கட்சிகள்.