கன்னியாகுமரி : நாகர்கோவில் மாநகராட்சி 12வது வார்டில் இருந்து 438 வாக்குகள் நீக்கப்பட்டு வார்டு மறுவரையரை படி 13வது வார்டில் சேர்க்கப்பட்ட நிலையில் 438 வாக்குகளை திமுகவினர் 12 ஆவது வார்டிலேயே கள்ளஓட்டாக பதிவு செய்தது அம்பலமாகியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கான தேர்தல் கடந்த 19 ஆம் தேதி நடைபெற்று கடந்த 22 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் நகராட்சியாக இருந்து கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் தரம் உயர்த்தப்பட்டு மாநகராட்சியாக மாறிய நாகர்கோவில் மாநகராட்சியில் சில ஊராட்சிகள், இணைக்கப்பட்டு வார்டுகள் மறுவரையரை செய்யப்பட்டது.
அதன்படி நாகர்கோவில் மாநகர் 12 ஆவது வார்டில் இருந்து 438 வாக்குகள் 13 ஆவது வார்டுக்கு மாற்றப்பட்டு வார்டு மறுவரையரை செய்து இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் 12வது வார்டில் அதிமுகவின் வெற்றியை தடுக்க அதிகாரிகள் துணையுடன் திமுகவினர் சதி செயல் மற்றும் முறைகேடு மூலமாக 13 ஆவது வார்டுக்கு மாற்றப்பட்ட 438 வாக்குகளை 12 ஆவது வார்டிலேயே கள்ள வாக்குகளாக பதிவு செய்து இருப்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
திமுகவின் இந்த சதி செயல் மற்றும் முறைகேடு காரணமாக கடந்த 15 வருடங்களாக தொடர்ந்து அதிமுகவின் கோட்டையாக இருந்து வந்த 12வது வார்டில் அதிமுக வேட்பாளர் சகாயராஜ் 7 வாக்குகள் வித்தியாசத்தில் தனது வெற்றி வாய்ப்பை இழந்தார்.
இந்நிலையில் 12 ஆவது வார்டில் திமுகவினர் செய்த அராஜகம் மற்றும் கள்ள ஓட்டுப்பதிவு குறித்த தகுந்த ஆதாரங்களுடன் மாநகராட்சி ஆணையரிடம் அதிமுக வேட்பாளர் சகாயராஜ் புகார் அளித்தார்.
ஆனால் புகார் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள் மவுனம் காத்து வரும் நிலையில் நடவடிக்கை இல்லை என்றால் மக்கள் போராட்டத்துடன் நீதிமன்றம் செல்வோம் என அதிமுக அறிவித்துள்ளது.
இந்நிலையில் வார்டு மறுவரையரை செய்தி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ள நிலையில் வாக்கு பதிவிற்கு பழைய வாக்காளர் பட்டியல் எப்படி பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து விசாரணை மேற்கொள்வதோடு கள்ள வாக்குகள் பதிவு செய்த திமுகவினருக்கு சாதகமாக பணியாற்றிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் தேர்தல் வெற்றி அறிவிப்பை திரும்ப பெற்று 12வது வார்டில் மறுத்தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.