Phone/WhatsApp : +91 72000 33317

Reg.No. TN-02-0040998

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியதை எதிர்த்த வழக்கு – நீதிமன்றம் அதிரடி கேள்வி!

Chennai-Highcourt-16394563743x2-1

ஒரே மாதிரியான படிப்பை படிக்கும் நிலையில் கல்வி நிறுவனங்கள் அடிப்படையில் முன்னுரிமை அளிக்கும் வகையில் இட ஒதுக்கீடு வழங்க முடியுமா என, மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியதை எதிர்த்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் முந்தைய அதிமுக அரசில் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்தும், அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்களுக்கும் இந்த இட ஒதுக்கீட்டை வழங்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.

தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில், இந்த வழக்குகளின் இறுதி விசாரணை இன்று துவங்கியது.

இடஒதுக்கீட்டுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு, தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு அமலில் உள்ள நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு அமல்படுத்தும் போது, 31 சதவீத பொதுப்பிரிவினருக்கு பாதிப்பு ஏற்படும் என தெரிவித்தார்.

நீட் தேர்வை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் இந்த இட ஒதுக்கீடு உள்ளதாக மத்திய அரசு பதில் மனுவில் தெரிவித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், இட ஒதுக்கீடு 50 சதவீதத்துக்கு அதிகமாகாமல் இருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது என வாதிட்டார். அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதால், தகுதியான மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்றும் தெரிவித்தார்.

தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில்சிபல், மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்கள் சேர முடியாத நிலை இருந்ததால் இந்த இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது என்றும், அரசு பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள் யார்? சமுதாயத்தில் எந்த பிரிவினர்? என்பதை ஆராய வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

சமூக கட்டமைப்பில் உள்ள சமமற்ற நிலையை அகற்றவே இச்சட்டம் இயற்றப்பட்டதாகவும் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, ஒரே மாதிரியான படிப்பை படிக்கும் நிலையில் கல்வி நிறுவனங்கள் அடிப்படையில் முன்னுரிமை அளிக்கும் வகையில் இட ஒதுக்கீடு வழங்க முடியுமா எனவும், அப்படியானால் அரசியல் சட்டத்தை மீண்டும் எழுத வேண்டுமா எனவும் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த மூத்த வழக்கறிஞர் கபில்சிபல், ஒரே படிப்பை படித்தாலும், அரசு பள்ளி மாணவர்கள் எத்தனை பேர் மருத்துவ படிப்பில் நுழைகிறார்கள் என்பதை பார்க்க வேண்டும் எனவும், கட்டமைப்பு சமநிலையற்ற நிலையை கருதி தான் பொருளாதார ரீதியில் பின்தங்கிய வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது என்றும் விளக்கினார். இந்த வழக்குகளில் வாதங்கள் தொடர்ச்சிக்காக விசாரணையை மார்ச் 17ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

Share on facebook
Facebook
Share on google
Google+
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on whatsapp
WhatsApp