இந்தியாவில் வேகமாக வளரும் மிக முக்கியமான மாநிலங்களில் ஒன்றாகக் கருதப்படும் உத்தரப் பிரதேசம் மாநில அரசு மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த புதிய சட்ட வடிவத்தைச் சமர்ப்பித்துள்ளது. இப்புதிய சட்டம் குறித்து அடுத்த 10 நாட்களுக்கு மக்கள் மத்தியில் கருத்துக் கேட்க உள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் மேற்பார்வையில் உருவாக்கப்பட்ட இந்தப் புதிய சட்டத்தின் மூலம் 2 குழந்தைகளை மட்டுமே வைத்திருக்கும் பெற்றோர்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது. அப்போ 2 குழந்தைகளுக்கு அதிகமாக உள்ள பெற்றோர்களின் நிலை என்ன..?
யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசின் மாநில நீதி ஆணையம் தாக்கல் செய்துள்ள இப்புதிய சட்டத்தில் 2 குழந்தைகளுக்கு அல்லது குறைவாகக் கொண்டுள்ள பெற்றோர்களுக்கு ஊக்கத் தொகையும், 2 குழந்தைகளுக்கு அதிகமாக வைத்துள்ள பெற்றோர்களுக்கு Disincentives அதாவது கூடுதல் வரி அல்லது சலுகைகள் குறைப்பு போன்றவற்றையும் இப்புதிய திட்டத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளதாகத் தெரிகிறது.
உத்தரப் பிரதேசம்
உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த இம்மாநில அரசு மக்கள் தொகை மசோதா 2021 தாக்கல் செய்துள்ளது. இந்த மசோதா மூலம் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதும், நிலைநிறுத்துவதும், நலன்களை அளிப்பதே முக்கிய இலக்காக உள்ளது.
மக்கள்தொகை மசோதா
முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப் பிரதேசம் அரசு 2021-2030ஆம் ஆண்டுக்கான இப்புதிய மக்கள்தொகை மசோதா-வை ஜூலை 11ஆம் தேதி உலக மக்கள் தொகை தினத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மசோதா பற்றி உங்கள் கருத்தை மறக்காமல் கமெண்ட்-ஆகப் பதிவிடுங்கள்.
2 குழந்தைகள்
2 குழந்தைகள் மட்டுமே உள்ள பெற்றோர்களுக்கு ஊக்கத் தொகை அளிக்கப்படும் எனக் கூறப்படும் நிலையில் எவ்வளவு தொகை அளிக்கப்படும் என்பதை முழுமையாகத் தெரிவிக்கவில்லை, இதேவேளையில் 2 குழந்தைகளுக்கு அதிகமாக உள்ள பெற்றோர்களுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகள் இருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
சலுகை பறிப்பு
2 குழந்தை கட்டுப்பாட்டை மீறியவர்களுக்குப் பறிக்கப்படும் சலுகைகள்
1. மாநில அரசின் நலத் திட்டங்களைப் பெறத் தடை
2. ரேஷன் பொருட்கள் 4 பேருக்கானது மட்டுமே வழங்கப்படும்
3. உள்ளூர் தேர்தலில் போட்டியிடத் தடை
4. அரசு வேலைவாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்கத் தடை
5. அரசு பணியில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வு மறுப்பு இந்தக் கட்டுப்பாடு அனைத்தும் ஏற்கனவே அரசு பணியில் அல்லது உள்ளூர் ஆட்சியில் இருப்பவர்களுக்குப் பொருந்தாது எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இரண்டு அல்லது ஒரு குழந்தை
இதேபோல் இரண்டு அல்லது ஒரு குழந்தை பெற்ற பின்பு தானாக முன்வந்து குடும்பக் கட்டுப்பாடு செய்வோருக்கு பல்வேறு சலுகைகள் அளிக்கப்படும் எனவும் இந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
1. அடிப்படை சேவைகளின் (Utilities) கட்டணத்தில் சலுகை
2. வீட்டுக் கடனில் குறைவான வட்டி
இதன் உடன் இன்னும் பல சலுகைகள் உள்ளது என அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஒரு குழந்தை
இதேபோல் ஒரு குழந்தைக்குப் பின் தானாக முன்வந்து குடும்பக் கட்டுப்பாடு செய்வோருக்கு ஏற்கனவே குறிப்பிடப்பட்டு உள்ள சலுகைகள் உடன் கூடுதலாக
1. கல்லூரி படிப்பு வரையில் இலவச கல்வி
2. அரசு ஊழியர்களுக்குக் கூடுதல் சம்பள உயர்வு
3. NPS திட்டத்தில் 3 சதவீதம் கூடுதல் தொகை
4. இதுமட்டும் அல்லாமல் BPL தம்பதிகளுக்கு ஒரு முறை சலுகையாக ஆண் குழந்தைக்கு 80000 ரூபாயும், பெண் குழந்தைக்கு 1 லட்சம் ரூபாயும் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
சில முக்கியத் தளர்வு
இதுமட்டும் அல்லாமல் இந்த மசோதாவில் குழந்தை தத்தெடுப்பு, இரட்டை குழந்தைகள், மாற்றுத்திறனாளி குழந்தை, குழந்தை இறப்பு, ஆகியவற்றுக்குத் தளர்வு அளிக்கப்பட்டு 3வது குழந்தை பெற்றுக்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது எனவும் இந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.