சென்னை: தமிழக காவல்துறை உயர் அதிகாரியின் பதவி உயர்வுக்காக மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பரிந்துரை செய்திருந்தாராம். ஆனால் அந்த அதிகாரி மீதான புகார்களில் உண்மை இருந்ததால் ராகுல் காந்தியின் பரிந்துரை கிடப்பில் போடப்பட்டுவிட்டதாக தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ராகுல் காந்தி அலுவலகத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் ஆதிக்கம் எப்போதும் அதிகம் உண்டு என்கிற பேச்சுகள் உண்டு.. ராகுலிடம் இச்சமூகத்தினர் சர்வ சாதாரணமாக பரிந்துரைகளை வைப்பது வழக்கமாம். இப்படியான லாபி மூலம் தமிழக காவல்துறை அதிகாரிக்காக சில காய்களை நகர்த்தியுள்ளார் தமிழக காங். எம்.எல்.ஏக்களில் முக்கியமான ஒருவர்.
இதையடுத்து ராகுல்காந்தி அலுவலகத்திலிருந்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு பரிந்துரை செய்யும் கோப்பு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. அதாவது, குறிப்பிட்ட காவல்துறை அதிகாரி மிக நேர்மையானவர், விசுவாசமானவர், அவருக்கு பதவி உயர்வு உள்ளிட்டவற்றை செய்து தருமாறு கோரிக்கை வைக்கும் கோப்பாம் அது
இது என்னடா டெல்லி காங்கிரஸ் மேலிடத்தில் இருந்து அந்த அதிகாரிக்காக பரிந்துரை வருகிறதே என ஆச்சரியப்பட்டுப் போனாராம் முதல்வர் மு.க.ஸ்டாலின். இதனையடுத்து குறிப்பிட்ட அந்த அதிகாரி குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது. இந்த விசாரணையில் காவல்துறை அதிகாரி மீதான புகார்கள், குற்றச்சாட்டுகள் ஆகியவை ஆதாரங்களின் அடிப்படையில் இருக்க்கிறது. அந்த குற்றச்சாட்டுகள் பொய்யானவை அல்ல எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ராகுல்காந்தி அலுவகலத்திலிருந்து வைக்கப்பட்ட கோரிக்கையை கிடப்பில் போட்டுவிட்டாராம் முதல்வர் மு.க. ஸ்டாலின். இதனை கேள்விப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரொம்பவே கொதித்து போனாராம். மேலிடம் அனுப்பிய கோப்பையே நிராகரிக்கிறார்கள் எனில் கூட்டணியில் இருந்தும் என்ன பயன் என தகித்துக் கொண்டிருக்கிறாராம் அந்த முக்கிய எம்.எல்.ஏ.