சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே சாத்தப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி (49) தென்குமரை கிராமத்தில் இவருக்கு சொந்தமாக உள்ள 6.50 ஏக்கர் நிலத்தை கடந்த 2020ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த அதிமுக பிரமுகரும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான வெங்கடாசலம் என்பவருக்கு 82 இலட்சம் ரூபாய்க்கு விலை பேசியுள்ளார்.
பின்னர், பதிவு செய்யாத ஆவணத்தின் மூலம் 21 இலட்சம் ரூபாய் முன்பணம் பெற்று கிரயம் செய்ய கால அவகாசம் கேட்டு எழுதிக் கொடுத்துள்ளார். ஆனால் காலக்கெடு முடிந்தும் நிலத்தை கிரயம் செய்யாமல் இருந்ததால் ராமசாமிக்கும் வெங்கடாசலத்திற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் வெங்கடாசலம் தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட அடியாட்களுடன் ராமசாமிக்கு சொந்தமான நிலத்திற்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர். பின்னர் பொக்லைன் மற்றும் டிராக்டர் கொண்டு பயிர்களை அழித்து நிலத்தை கையகப்படுத்த முயன்றுள்ளனர். அதனை தடுக்க முயன்ற ராமசாமி குடும்பத்தினரை அடித்து விரட்டி விட்டு வெங்கடாசலம் தலைமையிலான கும்பல் நிலத்தை அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து வெங்கடாசலம் , ராமர் பெரியசாமி, ராஜேந்திரன், தியாகராஜன் உள்பட 8 பேர் மீது தலைவாசல் காவல் நிலையத்தில் ராமசாமி புகார் அளித்தார். அந்த புகாரில் மூன்று லட்சம் மதிப்பிலான பயிர்களை நாசம் செய்து தங்களை தாக்கி நிலத்தை அபகரிக்க முயன்றதாக தெரிவித்திருந்தார். இதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
இது குறித்து தகவலறிந்த வெங்கடாசலம் நேற்று முன்தினம் மாலை மீண்டும் அடியாட்களுடன் ராமசாமியின் நிலத்திற்கு சென்று அங்கிருந்த ராமசாமி அவரது மனைவி மற்றும் சகோதரி பூவாயி ஆகியோரை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கி வீடு மற்றும் இருசக்கர வாகனத்தையும் சேதப்படுத்தி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த பூவாயி என்பவரை மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து இதனை கொலை வழக்காக பதிவு செய்த தலைவாசல் போலீஸார் ராமர், பெரியசாமி, ராஜேந்திரன், தியாகராஜன் உள்ளிட்ட 7 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள வெங்கடாசலத்தை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.