புதுச்சேரி : புதுச்சேரி ஜிப்மரில் நோயாளிகளுக்கான வழங்கப்படும் இலவச மாத்திரைகள் உள்பட 37 மாத்திரைகள் கையிருப்பில் இல்லாத சூழல் நிலவி உள்ளது.
புதுச்சேரியில் கோரிமேடு பகுதியில் அமைத்துள்ளது ஜிப்மர் மருத்துவமனை. மத்திய அரசின் கட்டுபாட்டில் இந்த மருத்துவமனை இயங்கி வருகிறது. கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டதைத் தொடர்ந்து கடந்த இரு ஆண்டுகளாக வெளிப்புறச்சிகிச்சைகள் தொடர்ச்சியாக தரப்படாத சூழல் நிலவியது. தொலைபேசியில் முன்பதிவு செய்து அதன்பிறகே சிகிச்சைக்கு வரவேண்டிய நிலை இருந்தது. தற்போதுதான் நீண்ட மாதங்களுக்கு பிறகு வெளிப்புற சிகிச்சைகள் முழுமையாக செயல்படத் தொடங்கியது.
அதேபோல் இரு ஆண்டுகளாக நீண்ட நாட்கள் மருந்து எடுக்கொள்ளவேண்டிய நோய்களான நீரிழிவு நோய், மனநோய், இதய நோய், நரம்பியல், இதய அறுவை சிகிச்சை நோயியல், நரம்பு அறுவை சிகிச்சை நோயியல், சிறுநீரகவியல், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, புற்றுநோய் ஆகியவற்றுக்கு சிகிச்சையில் உள்ளோருக்கும் மாதந்தோறும் இலவசமாக தரவேண்டிய மருந்து மாத்திரைகளை ஜிப்மர் நிறுத்தியதால் பல ஏழை எளிய நோயாளிகள் வெகுவாக பாதிக்கப்பட்டனர்.
தற்போது கொரோனா தொற்று குறைந்து மீண்டும் வெளிப்புற சிகிச்சை பிரிவு படிப்படியாக தொடங்கி முழுமையாக செயல்பட்டு வரும் நிலையில், நோயாளிகளுக்கு மாதந்தோறும் பரிசோதனை செய்து இலவசமாக வழங்கப்படும் மாத்திரைகளையும் தருவதாக ஜிப்மர் தெரிவித்தது. ஆனால் புதுச்சேரி, தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து சிகிச்சைக்கு வருவோருக்கு அத்தியாவசிய மாத்திரைகள் கையிருப்பில் இல்லை என்றும் வெளியில் வாங்கசொல்கின்றனர். இதனால் பணம் கொடுத்து வெளி மருந்தகங்களில் மருந்து வாங்க முடியாத குறிப்பாக இயதநோய், புற்று நோயாளிகள் பாதிப்படைந்துள்ளார்கள்.
இந்த புகார் குறித்து விசாரித்தபோது சாதாரண வைட்டமின் மாத்திரை தொடங்கி அத்தியாவசியமான 37 வகையான மாத்திரைகள் தற்போது கையிருப்பில் இல்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து ஜிப்மர் நிர்வாகத்திடம் கேட்டபோது, கொரோனா சிகிச்சைக்காக மருந்து மாத்திரைக்களுக்கான டெண்டர் வைத்து விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதை சரி செய்யும் முயற்சியில் ஜிப்மர் தரப்பு உள்ளது. மீண்டும் டெண்டர் வைத்து 15 நாட்களுக்குள் இப்பிரச்சினையை சரி செய்து விடுவோம் என்று மருத்துவமனை தரப்பில் தெரிவித்துள்ளார்கள்.