வாஷிங்டன்: முதலில் சிறிய ஆன்லைன் புக் விற்பனை நிறுவனமாகத் தொடங்கப்பட்ட அமேசான் இன்று மிகப் பெரிய ஆன்லைன் சாம்ராஜ்ஜியத்தையே கொண்டுள்ளது. அந்த நிறுவனத்தின் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் இன்று தனது முதல் விண்வெளி பயணத்தை மேற்கொள்கிறார்.
விண்வெளி குறித்தும், மற்ற கிரகங்கள் குறித்தும் நடக்கும் ஆய்வுகள் கடந்த நூற்றாண்டில் நடுப்பகுதியில் இருந்தே தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே இதில் பெரிய போட்டியே நிலவியது.
ஆனால், இது 21ஆம் நூற்றாண்டு. இப்போது விண்வெளி பயணங்களில் உலக நாடுகளைக் காட்டிலும் தனியார் நிறுவனங்கள் அதிகம் ஆர்வம் காட்டத் தொடங்கின.
ஸ்பேஸ் சுற்றுலா
மனிதர்களை விண்வெளிக்குச் சுற்றுலா போல அனுப்பும் திட்டத்தை பல்வேறு தனியார் நிறுவனங்கள் முன்னெடுத்துள்ளன. குறிப்பாக ரிச்சர்ட் பிரான்சனின் விர்ஜின் கேலடிக், ஜெஃப் பெசோஸின் ப்ளூ ஆர்ஜின், எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது. கடந்த வாரம்தான் யூனிட்டி 22 விண்கலம் மூலம் ரிச்சர்ட் பிரான்சன் ஸ்பேஸுக்கு சென்றிருந்தார்.
மொத்தம் நான்கு பேர்
இந்நிலையில், வரும் ஜூலை 20ஆம் தேதி தனது ப்ளூ ஆர்ஜின் நிறுவனத்தின் ராக்கேட் மூலம் ஜெஃப் பெசோஸ் ஸ்பேஸ் சுற்றுலா செல்லவுள்ளார். ஜெஃப் பெசோஸுசன் அவரது சகோதரர், 82 வயதான பைலட் வாலி ஃபங்க் மற்றும் 18 வயது இளைஞன் ஒருவர் ஆகியோர் விண்வெளிக்கு செல்கின்றனர். ஆக, ப்ளூ ஆர்ஜின் நிறுவனத்தின் இந்த முதல் ராக்கெட்டில் மொத்தம் நான்கு பேர் பயணிக்கின்றனர்.
ப்ளூ ஆர்ஜின் ராக்கெட்
இந்த ராக்கெட் பூமியில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தூரத்திற்கு நான்கு பேரையும் அழைத்துச் செல்கிறது. மேற்கு டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஏவுதளத்தில் இருந்து இவர்களின் விண்வெளி பயணம் தொடங்கவுள்ளது. இன்று மாலை 6.30 மணியளவில் ப்ளூ ஆர்ஜின் ராக்கெட் விண்ணில் சீறிப் பாயவுள்ளது. இதற்கான இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ராக்கெட் நேரம்
மேலும், நான்கு பயணிகளும் இறுதிக்கட்ட பயிற்சியைப் பெற்று வருகின்றனர். இன்று மாலை 6.30 மணிக்கு, புதிய ஷெப்பர்ட் ராக்கெட் மூலம் (New Shepard) இவர்கள் விண்வெளிக்குச் செல்கின்றனர். இந்தப் பயணம் சுமார் 10 நிமிடங்கள் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனது பல ஆண்டு ஸ்பேஸ் கனவு முதல்முறையாக நிறைவேறவுள்ளதாக ஜெஃப் பெசோஸின் நேர்காணலில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ராக்கெட் பெயர்
1961 ஆம் ஆண்டில் விண்வெளிக்குச் சென்ற முதல் அமெரிக்கரான ஆலன் ஷெப்பர்டின் நினைவாக இந்த ராக்கெட்டிற்கு New Shepard எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது தானாக இயங்கும் ஒரு ராக்கெட்(autonomous aircraft), அதாவது இதை இயக்க தனியாக ஒரு பைலட் தேவையில்லை. இதன் மூலம் விண்வெளி வீரர்களாக இல்லாமல் சாதாரண நபர்களுடன் ஆட்டோமெடிக் ராக்கெட் மூலம் விண்ணுக்குச் செல்லும் முதல் ராக்கெட் என்ற பெயரை நியூ ஷெப்பர்டின் பெற்றுள்ளது.
ஆட்டோமெடிக் ராக்கெட்
அதாவது டெக்சாஸிலிருந்து இந்த ராக்கெட் புறப்படும்போது இதை வழிநடத்த எந்தவொரு பயிற்சி பெற்ற விண்வெளி வீரர்கள் உள்ளே இருக்க மாட்டார்கள். இதுமட்டுமின்றி விண்வெளிக்குச் செல்லும் அதிக வயதான நபர், மிகக் குறைந்த நபர் ஆகியோரும் இதில் தான் இடம்பெற்றுள்ளனர்
எப்படி பார்க்கலாம்
அந்த 18 வயது இளைஞர் 28 மில்லியன் டாலர் கொடுத்து இந்த ஸ்பேஸ் பயணத்தை மேற்கொள்கிறார். ஸ்பேஸ் பயணம் தொடங்க இன்னும் சில மணி நேரங்கள் மட்டுமே உள்ள நிலையிலும் கூட அந்த நபர் யார் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இப்படிப் பல சுவாரசியங்களைக் கொண்ட ப்ளூ ஆர்ஜினின் முதல் ராக்கெட்டை யூடியூப், அமேசான் ப்ரைம் ஆகிய தளங்களில் நேரலையாகப் பார்க்கலாம்.