சென்னை : துப்பறிவாளனுக்கு பிறகு மீண்டும் மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா பிசாசு இரண்டில் நடித்து வருகிறார். பிசாசு முதல் பாகம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் இப்பொழுது இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.
பெரும்பாலான காட்சிகள் திண்டுக்கலில் நடப்பதுபோல எடுக்கப்பட்டு வந்த நிலையில் லாக்டவுனுக்குப் பிறகு இப்பொழுது மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
திகில் காட்டி
வித்தியாசமான கதைகளை இயக்கிய தமிழ் சினிமாவில் தரமான இயக்குனர்களின் பட்டியலில் இணைந்துள்ள இயக்குனர் மிஷ்கின் பேயை வேறு விதமான கோணத்தில் காட்டிய படம் பிசாசு. இந்த படம் கடந்த 2014இல் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. அதுவரையிலும் பேய் என்றால் பயமுறுத்தும் மிரட்டும் என திகில் காட்டிக் கொண்டிருந்த நிலையில் பேய்களுக்கும் உணர்வு, காதல், ஆசைகள் என அனைத்தும் உண்டு என மென்மையான பேயைக் காட்டி கைதட்டல்களை பெற்றிருந்தார்.
லாக்டவுன்
பிசாசு ஒன்றின் வெற்றியை தொடர்ந்து இப்பொழுது அதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது இதன் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக திண்டுக்கல் பகுதியில் நடைபெற்று வந்தது. கொரோனாவால் லாக்டவுன் பிறப்பிக்கப்பட்ட நிலையில் படப்பிடிப்பை தொடர முடியாமல் இருந்தது.
மீண்டும் ஆண்ட்ரியா
துப்பறிவாளன் படத்திற்கு பிறகு மீண்டும் ஆண்ட்ரியா மிஷ்கின் இயக்கத்தில் இந்த படத்தில் நடித்து வருகிறார். மேலும் நடிகர் விஜய் சேதுபதி இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. நவம்பர் ஸ்டோரி நமிதா கிருஷ்ணமூர்த்தியும் இதில் நடிக்கிறார். கார்த்திக் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
பிசாசு 2 படப்பிடிப்பு
இந்நிலையில் பிசாசு 2ன் படப்பிடிப்பை மிஷ்கின் மீண்டும் தொடங்கியுள்ளார். அதன்படி திண்டுக்கலில் மீனாட்சிநாயக்கம்பட்டி என்ற இடத்தில் இதன் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படம் ஒரு பாகத்தை போலவே மிகப்பெரிய வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.