
சென்னை: இன்று( மே 28) நடைபெறும் பா.ம.க., சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சி தலைவராக அன்புமணி தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். இதற்காக கடந்த 24ம் தேதி ஜி.கே. மணிக்கு ஓய்வு கொடுக்கும் வகையில் பாராட்டு விழா நடத்தப்பட்டதாக தெரிகிறது.
பா.ம.க., சிறப்பு பொதுக் குழு கூட்டம், சென்னை, திருவேற்காட்டில் உள்ள திருமண மண்டபத்தில், இன்று நடக்கிறது. பா.ம.க., தலைவர் ஜி.கே.மணி தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், கட்சியின் புதிய தலைவராக, தற்போது இளைஞரணி தலைவராக இருக்கும் அன்புமணி தேர்ந்தெடுக்கப்பட இருப்பதாக, அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
பா.ம.க., தலைவராக, 25 ஆண்டுகளாக இருக்கும் ஜி.கே.மணிக்கு, 24ம்தேதி சென்னையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. அன்புமணி தலைவராக தேர்ந்தடுக்கப்பட இருப்பதாலேயே, மணிக்கு விடை கொடுக்கும் வகையில், பாராட்டு விழா நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
அதனால், வழக்கத்தை விட இந்த பொதுக் குழுவை, ‘மெகா’ விருந்துடன் அமர்க்களமாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. ‘தமிழகம், புதுச்சேரியில் உள்ள மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், அணிகள், சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், சிறப்பு அழைப்பாளர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்’ என,ஜி.கே.மணி அழைப்பு விடுத்துள்ளார்.