Phone/WhatsApp : +91 72000 33317

Reg.No. TN-02-0040998

பால்காரர் வரி கட்டும்போது உங்களால் முடியாதா? நடிகர் தனுஷுக்கு சென்னை ஹைகோர்ட் கடும் கண்டனம்!

Dhanush_20170228

சென்னை: சொகுசு காருக்கு நுழைவு வரி விலக்கு கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நடிகர் தனுஷுக்கு எதிராக சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் வெளிநாட்டில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காரை இறக்குமதி செய்தார். இந்த காருக்கு நுழைவு வரி வசூலிக்க தடை கோரி நடிகர் தனுஷ், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

காருக்கு 60 லட்சத்து 66 ஆயிரம் ரூபாயை நுழைவு வரியாக செலுத்த வணிக வரித்துறை உத்தரவிட்டதை எதிர்த்து நடிகர் தனுஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

தனுஷ் சொகுசு கார் வழக்கு

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 50 சதவீத வரியை செலுத்தும் பட்சத்தில் காரை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு உத்தரவிட்டது. அதன் பின் இந்த வழக்கு, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தது.

இன்று விசாரணைக்கு வந்த தனுஷ் வழக்கு

அப்போது தனுஷ் தரப்பில் வழக்கறிஞர்கள் எவரும் ஆஜராகாததால், விசாரணை ஆகஸ்ட் 5ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. நடிகர் விஜய்யின் வரி விலக்கு கோரிய வழக்கை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியம் தான் தனுஷின் வழக்கையும் விசாரித்தார்.

மீதமுள்ள வரியை செலுத்த தயார்

நடிகர் தனுஷ் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி, மீதமுள்ள வரியை திங்கட்கிழமைக்குள் செலுத்த தயாராக இருப்பதாகவும், அதனால் வழக்கை முடித்துவைக்கும்படி கோரிக்கை வைத்தார். வழக்கை வாபஸ் பெறவதற்காக மெமோ தாக்கல் செய்திருப்பதாக தெரிவித்தார்.

நடிகர் தனுஷுக்கு சரமாரி கேள்வி

அப்போது குறுக்கிட்ட நீதிபதி சுப்பிரமணியம் ரோல் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி விலக்கு கோரிய நடிகர் தனுஷுக்கு எதிராக பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.

ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் வாங்கும் அளவில் உள்ள தனுஷ், நுழைவு வரி செலுத்துவதை எதிர்த்த வழக்கின் மனுவில், மனுதாரர் தான் செய்யும் வேலை அல்லது தொழிலை குறிப்பிடாதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, தொழிலை குறிப்பிட வேண்டிய அவசியமில்லையா? என கேள்வி எழுப்பினார்.

தொழிலை மறைத்தது ஏன்?

மேலும் மனுதாரர் செய்யும் தொழிலை மறைத்தது ஏன்? என விளக்கமளிக்க வேண்டும் என்றும் நீதிபதி சுப்பிரமணியம் உத்தரவு பிறப்பித்தார். 2018ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு, வரியை செலுத்திவிட்டு வழக்கை வாபஸ் பெற்றிருக்கலாமே எனவும், அப்படி என்றால் உங்கள் நோக்கம் என்ன எனவும் கேள்வி எழுப்பினார்.

பால்காரர் கூட வரி செலுத்துகிறார்

உச்ச நீதிமன்றம் தீர்ப்பிற்கு பிறகும், இதுவரை செலுத்தாத நிலையில் வாபஸ் பெற அனுமதிக்க முடியாது எனவும் இறுதி உத்தரவு பிறப்பிப்பதாகவும் நீதிபதி திட்டவட்டமாக தெரிவித்தார். அதோடு சோப்பு வாங்கும் சாமானியர் கூட வரி செலுத்துகிறார் என்ற நீதிபதி சுப்பிரமணியம், சொகுசு கார் வாங்கும் உங்களால் வரி செலுத்த முடியவில்லையா என்றும் வினா எழுப்பினார்.

பால்காரர் நீதிமன்றத்தை நாடுகிறாரா?

மேலும் பால்காரர் கூட 50 ரூபாய்க்கு போடும் பெட்ரோலுக்கான ஜிஎஸ்டி வரியை கட்டும்போது, உங்களால் முடியவில்லையா? என்ற நீதிபதி பெட்ரோலுக்கான ஜிஎஸ்டியை செலுத்த முடியவில்லை என பால்காரர் நீதிமன்றத்தை நாடுகிறாரா? என்றும் நடிகர் தனுஷ் தரப்புக்கு கேள்விகளை அடுக்கினார்.

எத்தனை கார் வேண்டுமானாலும் வாங்குங்கள்

மக்கள் வரி பணத்தில் போடப்படும் சாலையை பயன்படுத்தும் போது வரி கட்ட வேண்டியதுதானே என்றும் விளாசினார் நீதிபதி சுப்பிரமணியம். மேலும் உங்கள் தொழிலில் நீங்கள் எத்தனை கோடி வேண்டுமானாலும் சம்பாதியுங்கள், எத்தனை கார்கள் வேண்டுமானாலும் வாங்குகள். ஆனால் செலுத்த வேண்டிய வரியை முழுமையாக செலுத்துங்கள் என்றும் நீதிபதி சுப்பிரயமணியம் கூறினார்.

விதிப்படி நடக்க அறிவுறுத்தல்

எந்த தனிப்பட்ட ஒருவரையும் குற்றம்சாட்ட வேண்டுமென்பது தன் நோக்கம் அல்ல என்று கூறிய நீதிபதி சுப்பிரமணியம், அரசு விதிகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகள் படி நடக்கும்படி அறிவுறுத்தினார்.

மதியம் பதிலளிக்க உத்தரவு

நடிகர் தனுஷ் செலுத்த வேண்டிய நுழைவு வரி பாக்கி எவ்வளவு செலுத்த வேண்டும் என்பதை தமிழ்நாடு வணிகவரித் துறை உடனடியாக கணக்கிட்டு மதியம் 2:15க்கு தெரிவிக்க வேண்டும் எனவும், கணக்கீடு செய்யும் அதிகாரியும் மதியம் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை இறுதி உத்தரவிற்காக மதியம் தள்ளிவைத்துள்ளார்.

விஜய்க்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி

நீதிபதி சுப்பிரமணியம் நடிகர் விஜய் தனது ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரி விலக்கு கோரிய வழக்கில் கடும் கண்டனம் தெரிவித்ததோடு அவரது மனுவை தள்ளுபடி செய்து ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share on facebook
Facebook
Share on google
Google+
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on whatsapp
WhatsApp