கோவை : கோவையில் பள்ளி மாணவர்கள் இரண்டு பேருக்கும் ஆசிரியர்கள் 7 பேருக்கும் என மொத்தம் 9 பேருக்கு இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டதால் பள்ளி கல்லூரிகளை திறக்க கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அரசு அனுமதி அளித்தது. பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை நேரடி வகுப்புகள் சுழற்சி முறையில் நடத்தப்பட்டு வருகிறது.
ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் வீதம் சமூக இடைவெளி விட்டு அமர வைக்கப்பட்டு அரசின் வழிகாட்டு முறைகளை பின்பற்றி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. ஆசிரியர்கள் ஊழியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் கட்டாயமாக கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மேலும் சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடந்து வருகிறது. 18 வயதிற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
மேலும் மாணவர்களுக்கு கொரோனா பரவாமல் தடுக்க முகாம்கள் அமைக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பரிசோதனையில் கோவை மாவட்டத்தில் கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், சூலூர், உள்ளிட்ட பகுதிகளில் படிக்கும் 87 பள்ளி,கல்லூரி மாணவ மாணவிகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. ஒரு ஆசிரியரும் பாதிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் கோவை நகரில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் 7 பேர், பிளஸ் 1 மாணவர் ஒருவர், பிளஸ் 2 மாணவர் ஒருவர் என மொத்தம் 9 என பேரும் தற்போது தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்ட 7 ஆசிரியர்கள், மற்றும் 2 மாணவர்கள் ஆகியோர் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.