Phone/WhatsApp : +91 72000 33317

Reg.No. TN-02-0040998

பருவ மழையால் தத்தளிக்கும் மத்திய பிரதேசம்…வெள்ளம் சூழ்ந்த மேற்கு வங்கம் – மீட்பு பணியில் ராணுவம்

flood56051-1628057914

டெல்லி: நாட்டின் பல மாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. ராஜஸ்தானில் பெய்து வரும் கனமழையால் பல கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. சுவர் இடிந்து விழுந்து இருவர் உயிரிழந்தனர். மேற்கு வங்கத்தில் ஆறு மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். மத்தியப் பிரதேசத்தில் மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் வெள்ளம் சூழ்ந்துள்ள கிராமங்களில் சிக்கிக்கொண்டிருப்போரை மீட்க ராணுவ ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

ஜூன் மாதம் கேரளாவில் தொடங்கிய தென்மேற்குப் பருவமழை நாடு முழுவதும் பரவலாக பெய்து வருகிறது. கேரளா, தமிழ்நாடு, கர்நாடகாவில் பருவமழை தீவிரமடையாவிட்டாலும் பரவலாக பெய்து வருகிறது.

அதே நேரத்தில் கோவா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், டெல்லி, ஹிமாச்சல பிரதேசம், மேற்கு வங்க மாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. அவ்வப்போது மேக வெடிப்பும் ஏற்பட்டு பருவமழை கொட்டி வருவதால் ஆறுகளில் பெருவெள்ளமும் ஏற்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மழை வெள்ளம்

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த இரு தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 40 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பூண்டி மாவட்டத்தில் பெய்த கனமழையால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆறுகளில் அபாயக் கட்டத்தை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.

சுவர் இடிந்து விழுந்து விபத்து

ராஜஸ்தானின் பூண்டி மாவட்டத்தில் உள்ள கேஷோரைபட்டான் பகுதியில் இன்று காலை மழை வெள்ளத்தால் அதிக அளவில் நனைந்த சுவர் ஒன்று இடிந்து விழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஐந்து பேருக்கு மேல் இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. சம்பவ இடத்திற்கு மீட்புக் குழுவினர் மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.

லட்சக்கணக்கானோர் பாதிப்பு

மேற்குவங்கத்தில் வழக்கத்தை விட அதிக அளவில் பெய்த மழையால் பல இடங்களில் இடுப்பளவிற்கு மழைநீர் சூழ்ந்தது. பல கிராமங்கள் வெள்ள நீரில் தத்தளிக்கின்றன. அதிகம் பாதிக்கப்பட்ட ஹூக்ளி மாவட்டத்தில் ராணுவமும், விமானப்படையும் மீட்புப பணியில் ஈடுபடுத்தப்பட்டன. கனமழை நீடித்து வருவதால் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளிலிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்துள்ளனர். மழை வெள்ளம் தொடர்பான விபத்தில் 15 பேர் வரை உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெள்ளத்தில் தத்தளிப்பு

பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தார்பாய்கள், ஆயிரம் டன்னுக்கு அதிகமாக அரிசி, குடிநீர் பாக்கெட்டுகள் மற்றும் துணிகள் அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வெள்ளத்தில் சிக்கியவர்கள் விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர்.

ஹெலிகாப்டர் மூலம் மீட்பு

மத்திய பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களும் கடந்த சனிக்கிழமை முதல் கனமழை நீடித்து வருகிறது. மழை தொடர்பான விபத்துகளில் சிக்கி 3 குழந்தைகள் உள்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். 200க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் சிக்கி தத்தளிக்கின்றன. கனமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் வெள்ளம் சூழ்ந்துள்ள கிராமங்களில் சிக்கிக்கொண்டிருப்போரை மீட்க ராணுவ ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

மீட்பு நடவடிக்கை தீவிரம்

ஷிவ்பூர் மாவட்டத்தில் வெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று கிராமங்களில் சிக்கிக்கொண்டவர்களை மீட்க நான்கு ராணுவ ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷியோபூர் மற்றும் ஷிவ்பூர் மாவட்டங்களில் நீடித்த கனமழையால் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஷியோபூர் மாவட்டத்தில் விஜய்ப்பூர் பேருந்து நிறுத்தம் அருகே ஒரு கட்டடத்தில் சிக்கிக்கொண்ட சுமார் 60 பேர் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டனர்.

கடும் வெள்ளப்பெருக்கு

உத்தரபிரதேச மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் கங்கை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. அபாயகட்டத்தை தாண்டி ஆற்றில் வெள்ளம் செல்கிறது. உத்தரகாண்ட் மாநிலத்தில் கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு காரணமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

Share on facebook
Facebook
Share on google
Google+
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest
Share on whatsapp
WhatsApp