இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பை விராட் கோலி துறந்ததை குறிப்பிட்டு, முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் அனுப்பிய உருக்கமான கடிதம் ஒன்று ரசிகர்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
யுவராஜ் சிங் அனுப்பிய அந்த கடிதத்தில் “விராட் கோலி, உன்னுடைய வளர்ச்சியை சக கிரிக்கெட் வீரனாகவும், மனிதனாகவும் நான் பார்த்திருக்கிறேன். உன்னுடைய இளம் வயதில் கிரிக்கெட் ஜாம்பவான்களுடன் தோளோடு தோள் நின்றது முதல் அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டும் ஜாம்பவானாக உருவெடுத்தது வரை பார்த்துள்ளேன்.
இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு இளைஞருக்கும் உன்னுடைய கிரிக்கெட் ஒழுக்கமும், ஆர்வமும், அர்ப்பணிப்பும் ஒருநாளாவது நீல நிற ஜெர்சியை அணிய வேண்டும் என்ற கனவை தூண்டுகிறது. ஒவ்வொரு ஆண்டும் உன்னுடைய தரம் உயர்கிறது. நீ ஏற்கனவே நிறைய சாதித்துவிட்டாய். உன்னுடைய வாழ்க்கையில், ஒரு புதிய அத்தியாயம் தொடங்குவதைப் பார்க்க எனக்கு உற்சாகமாக உள்ளது.
நீ ஒரு மாபெரும் கேப்டன், அற்புதமான தலைவன். உனக்குள் எரியும் நெருப்பை எப்பொழுதும் அணைய விடதே. நீ ஒரு சூப்பர் ஸ்டார். உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களின் முகத்தில் புன்னகையை வரவழைத்த கேப்டன். நீ ஒரு சூப்பர் ஸ்டார். உனக்குள் இருக்கும் நெருப்பு தொடர்ந்து எரிந்துகொண்டே இருக்கட்டும். உன்னுடைய வாழ்க்கை வெற்றியை கொண்டாட உனக்கான ஒரு பிரத்யேக கோல்டன் ஷூவை பரிசளிக்க விரும்புகிறேன். நீ எப்படி இருக்கிறாயோ, அப்படியே விளையாடுவாய். நாட்டைப் பெருமைப்படுத்துவாய் என்று நம்புகிறேன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கடிதம் தற்போது கோலி மற்றும் யுவராஜ் இடையே இப்படி ஒரு நட்பா என ரசிகர்களை ஆச்சர்யப்பட வைக்கிறது.